முன்னுரை
சரித்திர நினைவலைகள் தொகுதியை எழுதும்போது விடுபட்ட பகுதிகளை தேடும்போது ஆண்களோடு ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் இந்திய சுதந்திர போராட்ட களத்தில் பெண்களும் பங்கு பெற்றது அறிய வந்தது. ஆனால் அவர்கள் சரித்திரத்தில் அதிகம் அறியப்படாத அவர்களின் தியாகங்கள் பெரிதும் தெரியாமலும் இருந்தது. சுதந்திர போராட்டம் மட்டுமல்ல கலை,பக்தி, இலக்கியம், மருத்துவம், சட்டம், சமூக சேவைகள் மற்றும் விமானியாகவும் சாதனைகள் படைத்த விவரங்களும் அதை அவர்கள் அடைய சமூகத்தில் இருந்த இடர்பாடுகளும் அதை தகர்த்தெறிந்து தங்களது லட்சியத்தை அடைந்த வீர மங்கைகளையும் அவர்களின் வாழ்க்கையையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்ததே இந்த தொடர். இதில் இந்தியா வரலாற்றில் தனது பங்களிப்பை சிறந்த முறையில் செய்த 149 பெண்மணிகளை பற்றி அனார்கலி முதல் அன்னை தெரசா வரை இங்கு எழுதியுள்ளேன். மதுரை குஞ்சரத்தம்மாள் கற்பனை என்பதால் அதற்கு தனி கட்டுரை எண் கொடுக்கவில்லை. இன்னும் தேடல்கள் தொடர்ந்தால் கிடைக்கும் தகவல்களையும் திரட்டி எழுதவும் ஆவல்.
உண்மையில் அனார்கலி என்பது கற்பனையான கேரக்டரா? அல்லது வரலாற்றில் அவரை பற்றிய செய்திகள் முழுவதும் மறைக்கப்பட்டதா? லாகூரில் உள்ள அனார்கலி பஜாரில் உள்ள கல்லறை யாருடையது? காதலுக்காக உலக அதிசயமான தாஜ்மகாலின் உருவாக்கத்திற்கு காரணமான மும்தாஜ்ஜூம் புகழ்பெற்ற காதல் காவியமாக உருவான பாஜிராவ் -மஸ்தானியும் , பஸ்பகதூர் -ரூப்மதியும், பிரிதிவிராஜ் -சம்யூக்தாவும் காதலுக்காக உயிரை விட்ட அலாவூதின் கில்ஜியின் மகளான ஃபிரோஸாவும் குறிப்பிடத்தக்க பெண்களுள் ஒருவராக இடம் பிடிக்கின்றனர்.
நூர்ஜஹானின் ஆளூமையும் மொத்த மொகலாய சாம்ராஜ்யத்தையும் கட்டி ஆண்ட சிறப்பும் பரந்த மொகலாய சாம்ராஜ்யத்தை எதிர்த்து அவர்களை தோற்கடித்து அவர்களின் மூக்கை வெட்டி உயிருடன் அனுப்பிய வீரமிகு கார்வாலின் ராணி கர்ணாவதியும் கணவர் இறந்தாலும் குழந்தையுடன் போர்க்களம் புகுந்த ஜான்ஸியின் ராணியான லெட்சுமிபாயும் ஆட்சியில் அமராமல் தன் கண்ணசைவால் தனது இளைய சகோதரனான இராஜராஜசோழனின் சிறப்பான ஆட்சிக்கு காரணமான குந்தவை பிராட்டியாரும் நாட்டுமக்களுக்காக வழியெங்கும் தங்கும் சத்திரங்கள் கட்டிய இராணி மங்கம்மாளும் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலாம் சீக்கிய-ஆங்கிலேய போரை துவக்கி அவர்களை விரட்டியடிக்க முயன்ற ராணி ஜிந்த் கவுரும் சிவாஜிக்கு பின்னர் ஓளரங்கசீப்பை எதிர்த்து அவரை கலங்கடித்த அவரின் மருமகளான தாராபாய் போன்ஸ்லேயும் டெல்லி சுல்தான்களை எதிர்த்து அவர்களை கலங்கடித்த ராணி ருத்திரமா தேவியும் கோரி முகமதுவை விரட்டியடித்த நைய்கி தேவியும் பெண்களால் வீட்டை மட்டுமல்ல நாட்டையும் சிறப்புற ஆள முடியும் என்பதற்கு உதாரணங்களாக உள்ளனர்.
இராஜபுத்திர மேவார் ராணா சங்காவின் மருமகளான மீரா பாயின் பக்தியையும் கணவர் மறைந்தவுடன் அவருடன் உடன்கட்டை ஏறிய கோப்பெரும்பெண்டும் திருஞானசம்பந்தரால் தன் கணவரான கூன் பாண்டியனின் நோயையும் குணப்படுத்தியதோடு கணவரோடும் அமைச்சர் குலச்சிறையாரோடும் இணைந்து செய்த திருத்தொண்டுகளால் 63 நாயன்மார்களுள் ஒருவராக இணைந்த மங்கையர்க்கரசி நாயனாரும் நாடு முழுவதும் ஆக்கிரமிப்பினால் பாழாக்கப்பட்ட 1000க்கு மேற்பட்ட கோயில்களை சொந்த செலவில் திரும்பவும் கட்டிய இந்தூரின் ராணி அஹில்யாபாய் ஹோல்கரும் எண்ணற்ற செங்கற் கட்டிடமான இருந்த கோயில்களை கற்றழி கோயில்களாக மாற்றி கட்டிய வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற சோழ மன்னர் கண்டாரதித்யரின் மனைவியான செம்பியன் மாதேவியும் தங்களது பக்தியினால் குறிப்பிடத்தக்க பெண்களுள் ஒருவராக இணைகின்றனர்.
நாட்டின் மீது கொண்ட பற்றினால் உலக்கையினால் கோட்டையில் உட்புக முயன்ற திப்புசுல்தான் வீரர்களை கொன்று தானும் மாண்ட ஓனகே ஓபவ்வாவும், ஆங்கிலேய கவர்னரை எதிர்த்து தனது ஆசிரியரை காப்பாற்றி உயிர்விட்ட 13வது சிறுமியான காளி பாயும், போராட்டத்தில் இந்திய தேசிய கொடியை விட மறுத்து உயிர்விட்ட 17வது கனக்லதா பரூவாவும், எதிரிகளை அருவி மறைவுக்கு அழைத்து சென்று கொன்ற கா ஃபான் நோங்லைட்டும், தனது 72 வயதிலும் போராட்ட களத்தில் உயிர்விட்ட மாதங்கினி ஹஸ்ராவும் போராட்ட களத்தில் முதல் தற்கொலை படை போராளியாக மாறி தனது இன்னுயிரை இழந்த குயிலியும் தாய்நாட்டிற்காக 14 வருடங்கள் சிறையில் வாடிய இராணி கைடிலின்யூம் ஒரு மகன் இறந்தாலும் அடுத்த மகனையும் விடுதலை போராட்ட களத்தில் இறக்கிய தற்கால புறநானாற்று வீரத்தாயான மூல்மதியும் நேதாஜியின் இந்திய தேசிய படையில் தாய்க்கு ஒரே மகனாக இருப்பதால் அனுமதிக்க மறத்த செய்தியால் தனது இன்னுயிரை இழந்து தன் மகனுக்கு இனி படையில் சேர தடையில்லை என்று உயிரை விட நாடே முக்கியம் என்று உரைத்த பெயர் தெரியாத அர்ஜூன் சிங் என்ற நேதாஜி படை வீரரின் தாயும் பணிப்பெண்ணாக இருந்தாலும் தனக்கும் நாட்டுப்பற்று உண்டு என்று சிப்பாய கலகத்தில் பங்கு கொண்ட அஸிசுன் பாயும் அடக்குமுறை ஆங்கிலேய கவர்னரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தானும் சயனைடு விஷமருந்தி உயிர்விட்ட வங்காளத்தின் பிரிதிலதா வதேதாரும் விடுதலை போராட்ட களத்தில் இந்திய தேசிய வானொலி துவங்கி செய்திகளை பரிமாறிய உஷா மேத்தாவும் காந்தியின் தென்னாப்பிரிக்க போராட்டத்தில் கலந்து கொண்டு தடியடிகளை தாங்கி அஹிம்சை போராட்டத்தில் உயிர்விட்ட 17 வயது தில்லையடி வள்ளியம்மாளும் தனது கணவர் தேசதுரோகியாக இருப்பதை அறிந்து அவரை கொன்று ஆங்கிலேயர்களால் தனது மார்பகங்களை சித்திரவதையில் வெட்டியெறியப்பட்டாலும் நேதாஜியின் இருப்பிடத்தை காட்டிகொடுக்காமல் தேசமே முக்கியம் என்ற நீரா ஆர்யாவும் முக்கியமான பெண்களுள் ஒருவராக சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளனர்.
கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய முலைவரியை எதிர்த்து தனது மார்பகங்களை அறுத்து கொண்டு உயிர்விட்ட நாங்கிலியும் விதவை பெண்கள் மறுமணத்திற்கு பாடுபட்ட மூவலூர் இராமாமிருதம் அம்மையாரும் தேவதாசி முறையை ஓழிக்க பாடுபட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் தற்போதும் தனது தள்ளாத வயதிலும் சமூக சேவை செய்து வரும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனும் அன்னிய நாட்டவராக இருந்தாலும் காந்தியின் இரு பெண் சீடர்களாக இருந்த மீரா பென்னும் சர்ளா பென்னும் சமூக அவலங்களையும் எதிர்த்து போராடிய பெண்களில் முக்கியமானவர்கள்
19ம் நூற்றாண்டில் பெண்கள் மருத்துவராக இருந்த தடையை எதிர்த்து மருத்துவம் பயின்ற ஆனந்தி கோபால் ஜோஷியும் கடம்பினி கங்குலியும் ஆண்களுக்கு இணையான விமானங்களை இயக்கிய சரளா தாக்கரலும் கணிதத்துறையில் மனித கம்ப்யூட்டர் என்று புகழ்பெற்ற சகுந்தலா தேவியும் இசை உலகில் தங்களது அடையாளங்களை பதித்த கே.பி.சுந்தராம்பாளும், எம்.எஸ்.சுப்புலெட்சுமியும், டி.கே. பட்டம்மாளும் குறிப்பிடத்தக்க பெண்களுள் ஒருவராக உள்ளனர்.
Comments
Post a Comment