150) ஆண்டாள்

 தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தின் முன்னோடியாகவும் பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வாராக அறியப்பட்டவர் தான் கோதை நாச்சியார் என்றழைக்கப்படும் ஆண்டாள் அவர்கள். பிறந்தது முதல் திருமாலையே தனது கணவராக வரித்துகொண்டு வாழ்ந்தவர். இவர் பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவராக திகழ்ந்தவர். பண்ணிட்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் இவரே. ஶ்ரீவில்லிபுத்தூரில் தீவிர விஷ்ணு பக்தரான பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர். திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பக்தி பாடல்களின் தொகுப்பை வழங்கியவர். இன்றும் அவை மார்கழி மாதத்தில் பஜனைகளில் பாடப்படுகின்றன என்பது சிறப்பு. 





கிபி 8ம் நூற்றாண்டில் கிபி 785ல் இன்றைய ஶ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தன் என்று முதலில் அழைக்கப்பட்ட பெரியாழ்வாரால் ஆண்டாள் கோயிலுக்குள் அமைந்த துளசி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணாக அறிமுகமாகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த பெரியாழ்வாருக்கு வளர்ப்பு மகளாக துளசி தோட்டத்தில் கண்டெடுத்த மகளுக்கு கோதை என்று பெயரிட்டார். ஒவ்வொரு நாளும் பெரியாழ்வார் தோட்டத்து மலர்களை கட்டி விஷ்ணுவுக்கு மாலை சாத்துவது வழக்கம். கோதை கடவுளுக்கு அந்த மாலையை அர்பணிப்பதற்கு முன்னர் தனக்கு சூடி பார்த்து கொடுத்து வந்தாள். இதை ஒருநாள் கண்ட பெரியாழ்வார் அவரை கடிந்து வேறொரு மாலையை அணிவித்தபோது அது இறைவனின் கழுத்தில் இருந்து அறுந்து விழுந்தது. பெரியாழ்வாரின் கனவில் வந்த விஷ்ணு கோதை அணிந்த மாலையை மட்டுமே தனக்கு அணிவிக்கமாறும் கூற அவ்வாறே அந்த மாலையை விஷ்ணுவுக்கு அணிவிக்க அது தங்கமாக மாறியது. இதனால் கோதை ஆண்டாள் என்று அழைக்கப்பட்டார். இறைவனுக்கு மலர் மாலை சூடிக்கொடுத்த காரணத்தால் "சூடிகொடுத்த சுடர்கொடி" என்றும் அழைக்கப்பட்டார். விஷ்ணுவை தவிர வேறு யாரையும் மணம் புரிய மாட்டேன் என்ற ஆண்டாளை பெரியாழ்வார் ஶ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோயிலுக்கு அழைத்து சென்றார். அங்கு ஆண்டாள் விஷ்ணுவின் மணப்பெண்ணாக இணைந்தார். இதனால் ஆண்டாள் நாச்சியார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஆண்டாள் நாச்சியார் விஷ்ணுவின் புகழ்பாடி 30 பாடல்கள் கொண்ட தொகுப்பான திருப்பாவை மற்றும் 140 பாடல்கள் கொண்ட தொகுப்பான நாச்சியார் திருமொழி நூல்களை பாடினார். இன்றும் அவை மார்கழி மாத குளிர்கால விழாக்காலங்களில் பஜனை பாடல்களாக பக்தர்களால் பாடப்படுகின்றது. 

தமிழ்நாட்டில் ஆண்டாளது பிறந்த நாள் ஆடி மாதத்தில் ஆதி புரம் என்றும் அவரது திருமண நாளும் அதை தொடர்ந்து வரும் ஏறு முகமும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது.  ஆண்டாளின் சிகை அலங்காரம் மற்றும் அலங்காரம் பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் தனித்துவமானது. முடியின் கொத்து பக்கவாட்டில் கட்டப்பட்டு மல்லிகை பூக்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் கையில் உள்ள கைவினை கிளி ஒவ்வொரு நாளும் புதிய பச்சை இலைகளால் தயார் செய்யப்படும். இந்த கிளி ஆண்டாளின் இடது கையில் வைக்கப்படுகிறது. ஆண்டாள் மனித குலத்திற்கு வழிகாட்ட வந்த பூமியின் அவதாரம் (லட்சுமி பூமி தெய்வம்) என்று கருதப்படுகிறார். தென்னிந்தியாவில் வைஷ்ணவ கோயில்களில் விஷ்ணுவுக்கு அடுத்ததாக ஆண்டாளுக்கு தனி சன்னதியும் உண்டு. ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் இரட்டை கோயில்களை கொண்டுள்ளது. ஒன்று ஆண்டாளுக்கும் மற்றொன்று ரங்க மன்னாருக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. விஜயநகர பேரரசரான கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் "அமுக்தமால்யதா" என்ற நூலை எழுதினார். அது மாலையை அணிந்து கொடுத்த ஆண்டாளின் கதையை கூறுகிறது. 

Comments