137) காளி பாய்

காளி பாய் (கி.பி.1934-1947) :


இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆண்களுக்கு சரிசமமாய் பெண்களும் தியாகங்கள் செய்துள்ளனர். 13 வயது சிறுமியான இந்த பெண் தனது ஆசிரியரை ஆங்கில அராஜத்திலிருந்து காக்க தனது இன்னுயிரை நீத்தார்.  13 வயதாக இருந்தாலும் தியாகத்திலும் நாட்டுபற்றினாலும் மற்றவர்களுக்கு நிகரான தியாகத்தை செய்துள்ளார்.

இவர் கி.பி.1934ல் இன்றைய இராஜஸ்தானிலுள்ள துங்கர்பூர் அருகிலுள்ள ராஸ்தபால் என்னும் கிராமத்தில் பிறந்தார். இளமையில் கல்வியை துங்கர்பூரில் நானா பாய் காந்த் என்பவர் நடத்திய பள்ளியில் படித்து வந்தார். இந்த பள்ளியில் பாடப்புத்தகங்களில் உள்ளது போக இந்தியாவின் பெருமை, அன்னியர்கள் நம்மை எப்படியெல்லாம் சுரண்டி கொழுக்கிறார்கள் என்பது பற்றியும் இந்திய சுதந்திரத்தின் அவசியத்தை பற்றியும் சுதந்திர இந்தியாவிற்கு நம்மால் தேசிய பக்தி உள்ளம் கொண்டு பாடுபட வேண்டும் என்று இளமையிலையே மாணவர்களின் உள்ளத்தில் தேசபக்தியை ஊட்டி வளர்த்தனர். இதனால் இங்குள்ள மாணவர்கள் நாட்டுப்பற்று உணர்வுடன் இருந்தனர். இதனை அந்த பகுதியின் ஆட்சியாளரான மகாராவல் விரும்பவில்லை. அவர் பள்ளியில் பாடங்களுடன் தேசிய உணர்வு ஊட்டப்படுவதை அறிந்து  மாவட்ட நீதிபதியை அறிந்து வர அனுப்பி வைக்க அவர் பள்ளிக்கு வந்தார். பள்ளியை இழுத்து மூடிவிட கூறினார். இதனை எதிர்த்து குரல் கொடுத்தார் ஆசிரியரான செங்காபாய் என்பவர். இதனால் கோபமடைந்த மகாராவல் ஆசிரியரை அடித்து காயப்படுத்தி அவரது கை கால்களை கட்டி தனது வாகனமான ஜூப்பின் பின்புறத்தில் கட்டினார். இதை தடுத்த பள்ளியின் உரிமையாளர் நானாபாய் காந்த்தை மாவட்ட நீதிபதி தனது துப்பாக்கியால் தாக்கியதுடன் சுட்டு வீழ்த்தினார். பலத்த காயமடைந்த நானாபாய் சுயநினைவு இழந்து மரணமுற்றார். ஆசிரியர் செங்காபாயை ஜூப்புடன் கட்டி இழுத்து சென்றனர். ஜூப் சிறிது தூரம் சென்றவுடன் பள்ளி சிறுமியான காளி பாய்  வெளியே கையில் கதிர் அறுக்கும் அரிவாளுடன் ஜூப்பை நெருங்கி வந்தார். ஓடிச்சென்று ஜூப்பில் கட்டி வைக்கப்பட்டு பலத்த காயமுற்ற ஆசிரியரான செங்காபாயை கட்டி வைத்திருந்த கயிற்றை அரிவாளால் வெட்டினார். பலத்த காயமடைந்து இருந்த ஆசிரியரை காப்பாற்றினார். இதை பார்த்து கொண்டிருந்த மாவட்ட நீதிபதி மிகவும் கோபமுற்று சிறுமியான காளிபாயை தனது துப்பாக்கியால் சுட்டார். சம்பவ இடத்திலையே காளிபாய் மரணமடைந்தார். இந்த நிகழ்வு கி.பி.1947 ஜூன் 19ம் தேதி. இந்தியா சுதந்திரம் அடைய இருந்த நேரத்திலும் ஆங்கிலேயர்கள் தங்களது அதிகார வெறியில் இந்திய மக்களின் உணர்வோடு விளையாடிக்கொண்டு இருந்ததை இந்த நிகழ்வு விளக்குகிறது. சிறுமி காளி பாய் இறக்கும்போது அவளுக்கு வயது 13 என்பதையும் நினைவு கூற வேண்டும். இன்று ராஸ்தாபாலில் இவரது நினைவாக உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.


மேலும் இவரது நினைவாக துங்கர்பூரில் கி.பி.1996ல் பெண்கள் கல்லூரிக்கு இவரது பெயர் வைத்து இவரது தியாகத்தை அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்