146) அம்மு சுவாமிநாதன்

அம்மு சுவாமிநாதன் (கி.பி.1894-1978)

இந்திய வரலாற்றில் தங்களது தியாகத்தாலும் திறமையினாலும் இடம்பிடித்த பெண்மணிகளுள் அம்மு சுவாமிநாதனும் ஒருவர். சுதந்திர போராட்ட களத்திலும் பெண்ணீயம் தொடர்பான போராட்டஙக்ளிலும் மட்டுமல்லாது அரசியல் நிர்ணய சபைகளில் பங்கு கொண்டு இந்திய அரசியல் சட்ட நிர்ணயத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தவர் இவர்.

அம்மு குட்டி மேனன் இன்றைய கேரளாவில் பாலக்காட்டில் அனக்கராவில் ஒரு வடக்காத் மேனன் குடும்பத்தில் ஏப்ரல் 22 கி.பி.1894ல் பிறந்தார். தாய் தந்தை இருவரும் நாயர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். 9 பெண் குழந்தைகள் உட்பட 13 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இவர் இளையவர். இவரது சிறுவயதிலையே இவரது தந்தையார் மறைந்தார். இவரது தாயார் ஒவ்வொரு குழந்தைகளின் திருமணத்திற்காகவும் தினசரி வாழ்க்கைக்கும் போராடி இவர்களை வளர்த்தார். அதனால் இவர் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனாலும் மலையாள மொழியை எழுத படிக்க தெரிந்த அளவிலையே இவரது கல்வி இருந்தது. இவரது 13 வயதில் கேரள ஐயர் குடும்பத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவரது கணவர் இவரது தந்தையின் நண்பர் . அதனால் அவரது மகள்களில் ஒருவரை திருமணம் செய்து அவர்களின் குடும்பத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பில் கடைசி மகளான இவரை திருமணம் செய்ய கேட்டபோது நல்ல வரனை இழக்க மனமில்லாமல் இவரது தாயார் திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் இவர் இவரது கணவரிடம் தனது அண்ணன் தம்பிகள் வெளியே சென்ற போது போல தன்னையும் பெண் என்ற பாகுபாட்டால் கேள்வி கேட்கக்கூடாது மற்றும் சென்னையில் எனக்கு ஆங்கிலம் முதல் அனைத்து பாடங்களையும் படிக்க சொல்லி கொடுக்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார்.  படிக்க ஆசைப்படும் பெண் என்பதால் இவரது கணவரும் நிபந்தனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இவரது கணவர் லண்டன் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உதவிதொகையுடன் படித்ததால் 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். திருமணத்தின்போது தம்பதியருக்கிடையே 20 வயதுக்கு மேல் வித்தியாசம் இருந்தது. இவர்களது திருமணம் நடந்ததால் நாயர் குடும்பத்தில் உள்ள மருமக்கள் வழி அமைப்பிலிருந்து வெளியே வந்தார். இவர்களது திருமணம் இலண்டனில் பதிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் சென்னையில் குடியேறினர். இவரது கணவரின் ஏற்பாட்டால் இவர் ஆங்கிலம் மற்றும் பிற பாடங்களை படிக்க வீட்டிலையே ஆசிரியரை நியமித்து இவர் கல்வி கற்க ஊக்கமளித்தார். கணவரின் வழியே மகாத்மா காந்தியை பின்பற்றி இந்திய சுதந்திர போராட்டங்களில் பங்கு பெற்றார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள். முத்த மகன் கோவிந்த் சுவாமிநாதன் சென்னையில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார். இன்னொரு மகன் சுப்பராம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றினார். நேதாஜியின் இந்திய தேசிய படையில் கேப்டன் & மருத்துவராக பணியாற்றிய கேப்டன் லட்சுமி சேகலும் பிரபல விஞ்ஞானியான விக்ரம் சாராபாயின் மனைவியான மிருணாளினி சாராபாய் (பிரபல நடன கலைஞர்) ஆகிய இருவரும் இவரது மகள்கள்.

இவர் கணவரை பின்பற்றி காங்கிரஸில் இணைந்தார். இவரது கணவரின் இவரின் 30'வயதுகளில் மறையவே தனது பார்வைகளை சமுதாய பணி நோக்கி திருப்பினார். அன்னி பெசண்ட் அம்மையார், டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் முதல் மகளிர் அமைப்பான இந்திய மகளிர் சங்கத்தை சென்னையில் தொடங்கினார். காந்திய வழிகள் இவரை ஈர்க்க அதனால் கதர் துணிகளை மட்டுமே உடுத்த ஆரம்பித்தார். கி.பி.1934-39 வரை சென்னை மாகாணத்தில் மேலவை உறுப்பினராக பணிபுரிந்தார். கி.பி.1936ல் இந்திய தேசிய காங்கிரஸ்க்கு நாடு முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்தார். கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 11 மாதங்கள் சிறையில் இருந்த இவருக்கு இவரின் மகள் லட்சுமி சேகல் நேதாஜியின் இராணுவத்தில் கேப்டனானது திகைப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் மகளின் முடிவினை ஏற்றுக்கொண்டார். இன்னொரு மகளான பிரபல நடன கலைஞரான மிருணாளினி விஞ்ஞானி சாராபாயை திருமணம் செய்ததை ஆதரிக்கவும் செய்தார். சுதந்திரத்திற்கு பின்னர் கி.பி.1947ல் இவர் அரசியல் நிர்ணய சபையில் இணைந்து பணியாற்றினார். 1950களில் டெல்லிக்கு குடியேறினார். கி.பி.1952ல் சென்னை மாகாணத்திலிருந்து இராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கி.பி.1960-65 வரை பாரதிய சாரணர் மற்றும் வழிகாட்டிகள் தலைவராக பணியாற்றினார். திரைப்படங்களின் மீது தீராத காதல் கொண்டிருந்த இவர் பிரபல இயக்குனர் சத்யஜித்ரே ஆரம்பித்த இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பில் முதல் பெண் துணை தலைவராகவும் பணியாற்றினார். திரைப்பட தணிக்கை துறையிலும் உறுப்பினராக இருந்தார்.  இவர் கி.பி.1978 ஜூலை 4ல் பாலக்காட்டில் தனது 84வது வயதில் மறைந்தார். ஆரம்பத்தில் படிப்பறிவு இல்லாதவராக இருந்தாலும் பின்னர் கல்வி கற்று அரசியல் நிர்ணய சபையின் வரைவுக்குழவில் பங்கு பெறுமளவுக்கு தனது திறமையை வளர்த்து கொண்ட சாதனை பெண் இவர்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

137) காளி பாய்