1) அனார்கலி
சலீம் - அனார்கலி காதல் காவியத்தில் சலீம் என்ற பெயர் நூரூதீன் சலீம் என்ற பேரரசர் ஜஹாங்கீரின் இயற்பெயர். அனார்கலி யார்? அவரை உயிரோடு கல்லறையில் அக்பரின் ஆணைப்படி லாகூரில் புதைத்தார்களா? இல்லை கல்லறையில் வைத்து எரித்து புதைத்தார்களா? அல்லது இயற்கை மரணமா? லாகூரில் புதைக்கப்பட்ட கல்லறை யாருடையது? இந்த நிகழ்வை வைத்து 1960 இல் வெளியான "மொகல்-இ.ஆஸம்" என்ற இந்தி படத்தில் திலீப்குமார்-மதுபாலா சலீம்-அனார்கலியாக நடித்தனரே அது உண்மையா? என்று கேட்டால் ஆதாரம் எதுவுமில்லை என்பதே உண்மை. மதன் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள்" நூலில் இது அப்பட்டமான சரடு என்று சொல்லியிருப்பார். பிறகு ஏன் இந்த கதை வந்தது ?
அனார்கலி என்ற சொல்லுக்கு "மாதுளம் பூ" என்ற பொருள். இவரின் இயற்பெயர் நாதிரா பேகம் என்ற சர்புன்னிசா என்ற பெயருடைய அடிமைப்பெண். இவர் ஈரானில் பிறந்து பின்னர் லாகூருக்கு வந்ததாகவும் அக்பரின் அரசவையில் நாட்டியபெண்ணாக ரோஜாவின் நிறத்தை ஒத்தநிறத்தையுடையவராகவும் இருந்ததாகவும் தெரிகிறது.
முதன்முதலில் "வில்லியம் பின்ச்" என்ற பிரிட்டிஷ் வியாபாரி 1608-1611 இல் லாகூருக்கு வியாபாரத்துக்காக வந்த வேளைகளில் இந்தக் கல்லறையைப் பற்றியும் அனார்கலியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அனார்கலி அக்பரின் மனைவிகளுள் ஓருவர் என்றும் அக்பரின் மகன்களில் ஒருவரான "டேனில் ஷா" என்பவரின் தாய் என்றும் அனார்கலிக்கும் தன் மகன் சலீம்க்கும் முறையற்ற தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டு லாகூர் கோட்டையிலையே அவரை கொளுத்தியதாகவும் அவரது சமாதி எழுப்பப்பட்டதாகவும் கூறுகிறார். ஏனெனில் அந்த காலங்களில் சலீம் மிகுந்த சுகவாசி. ஸ்திரிலோலன். என்னமும் அபின் மற்றும் மதுவின் மயக்கத்திலையே இருப்பவர். அதனாலயே அவரை பற்றிய கட்டுக்கதைகளை கேட்டு இப்படி குறிப்புகள் எழுதியிருக்கலாம். வில்லியம் பின்சன் கருத்தை இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் ஐரோப்பிய யாத்திரிகர்கள் ஹாக்கில்,
நூர் அஹ்மத் சிஸ்டி என்பவர் தன்னுடைய நூலான "தெஹ்லத்-இ-சிஸ்டியா"(1860)ல் அனார்கலி என்பவர் அக்பரின் பிரியத்திற்காக நாட்டியப் பெண். அவரது இயற்பெயர் நாதிரா பேகம் என்ற சர்ப்-உன்-நிஷா என்பதாகும். அக்பரின் பிரியத்தால் இரண்டு நாட்டிய பெண்களுக்கு அவரின் மேல் வெறுப்பு இருந்தது. அக்பர் தக்காணம் சென்றிருக்கும் வேளையில் அனார்கலி நோயினால் இறந்துவிட்டார் அதனால் அக்பரின் கோபத்திற்கு ஆளாகுவோம் என்ற பயத்தில் மற்ற இரண்டு நாட்டிய பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அக்பர் தக்காணத்திலிருந்து திரும்பியவுடன் அவருக்கு கல்லறை அமைத்ததாகவும் அதில் அல்லாவின் 99 பெயர்களையும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கல்லறையின் மேல் சுல்தான் சலீம் அக்பர் என்று எழதப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
"தெரிக்-இ-லாகூர்"ல் சையத் அப்துல் லத்தீப் அவரும் அனார்கலியின் பெயர் நாதிரா பேகம் என்ற சர்ப்-உன்-நிஷா என்றும் அக்பரின் மனைவியான இவருக்கும் சலீம்க்கும் முறையற்ற தொடர்பு இருந்ததால் அக்பர் உயிரோடு கொளுத்திவிட்டு ஜஹாங்கீர் அரசரான பிறகு அவருக்கு கல்லறை எழுப்பினார் என்றும் பெர்சிய மொழியில் "எனது காதலை மீண்டும் கொடுத்தார் நான் அல்லாவை ஏன்? வாழ்நாள் முழுவதும் நினைத்திருப்பேன்" என்ற எழதப்பட்டிருந்ததாகவும் வருடங்கள் 1599 மற்றும் 1615 என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது இறந்தது மற்றும் கல்லறை கட்டப்பட்ட வருடங்கள் என்றும் கூறுகிறது.
அதே "தெரிக்-இ-லாகூர்" (1897)ல் அக்பரின் நாட்டிய பெண் அக்பரில் அவையில் ரோஜாவின் நிறத்தையுடையவர். அக்பர் தக்காணம் சென்றிருந்த வேளையில் மரணமடைந்து விட்டார். இவருக்கான கல்லறையை அக்பர் கட்டினார் என்றும் அது பின்னால் சீக்கிய அரசர்களால் அளிக்கப்பட்டதாகவும் ஆங்கிலேயர்களால் அந்த இடத்தில் சர்ச் கட்டப்பட்டதாகவும் கூறுகிறார்.
இதையெல்லாம் விட அப்துல்லா ஷஹதாய் என்ற வரலாற்று அறிஞர் மற்றும் கட்டிடக்கலை நிபுணர் வேறொரு விதத்தில் சொல்கிறார். இந்த கல்லறை ஜஹாங்கீரின் மனைவி சாஹேப் ஜமால் என்பவருடையது. அதனால் ஜஹாங்கிர் தான் கட்டினார் என்றும் காலப்போக்கில் அவரின் மனைவி பெயர் அழிந்துவிட்டது . மேலும் இந்த கல்லறை மாதுளம்பழம் தோட்டத்தில் அமைந்ததால் அனார்கலியின் பெயருக்கான மாதுளம்பூ என்பதாலும் அனார்கலியின் கல்லறையை சலீம் (ஜஹாங்கிர்) கட்டினார் என்று தவறாக பொருள் கொள்ளப்பட்டது என்றும் கூறுகிறார். இந்த கல்லறை பின்னால் சீக்கிய அரசர்களால் இடிக்கப்பட்டது என்றும் அந்த கட்டிடம் இருந்த இடத்தில் பிராட்டஸ்டன்ட் சர்ச் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எது உண்மை? என்று ஆண்டவனுக்கே வெளிச்சம். அனார்கலியின் ஓவியம் என்று அப்துல் ரஹ்மான் சுக்தாய் என்பவரால் வரையப்பட்ட ஓவியத்தையும் காட்டுகிறார்கள். எல்லாம் கட்டுக்கதை எந்த வித ஆதாரங்களும் இல்லாததால் தான் சொல்ல தோன்றுகிறது. ஆனாலும் அனார்கலி என்பவர் வாழ்ந்திருக்கலாமே என்றும் தோன்றுகின்றது அதே நேரத்தில் அக்பரால் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை என்றும் தெரிகிறது. இயற்கை மரணமே ஏற்பட்டிருக்கலாமே அல்லது அந்த கல்லறை ஜஹாங்கீரின் மனைவியின் கல்லறை தவறாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.
உதவி நூல்கள்:
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
விக்கிபீடியா தகவல்கள்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்


Comments
Post a Comment