10) இராணி பத்மினி
ராணி பத்மினி :
சரித்திரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதியான ஜோஹர் நிகழ்வில் மானத்தை இழக்காமல் தன்னுயிரை இழந்தவர் தான் சித்தூரின் ராணி பத்மினி. இவர் சிங்களத்து இளவரசி. இவரது அழகை பற்றி பேசும் கிளியான ஹிராமன் மூலம் கேள்விப்பட்ட ராணா ரத்தன் சிங் சிங்கள நாட்டுக்கு பயணித்து பலவித போராட்டத்திற்கு பின்னர் பத்மினியின் மனதை கவர்ந்து திருமணம் முடித்து சித்தூருக்கு அழைத்து வருகிறார். ரத்தன் சிங்கினால் துரத்தப்பட்ட அமைச்சர் ஒருவர் டெல்லி சென்று அவரை பழிவாங்க இவரது அழகை பற்றி அலாவூதின் கில்ஜியிடம் கூற அவர் உடனே ராணி பத்மினியை அடைய நினைத்து சித்தூர் மீது படையெடுத்து வந்து மாதக்கணக்கில் முற்றுகையிட்டும் சித்தூரை ஜெயிக்க முடியவில்லை. பின்னர் தந்திரமாக ரத்தன் சிங்கிடம் தன் சகோதரியாக ராணியை நினைப்பதாகவும் அவரை பார்த்து விட்டு போவதாகவும் கூறி சமாதான தூது அனுப்ப ரத்தன் சிங் மனைவி பத்மினியிடம் கூற அவர் ஒப்புக்கொள்ளாமல் பின்னர் கணவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அரண்மனையில் சந்திக்காமல் தனது மாளிகையான "ஜல் மஹாலில்" ஏரியின் நடுவிலுள்ள கட்டிடத்தில் நீரில் தன் உருவம் பட்டு அதை கண்ணாடி மூலம் பல பிரதிபலிக்க செய்ய செய்து 100 அடி தூரத்திலிருந்து அலாவூதின் கில்ஜியை பார்க்க சம்மதித்தார். நீரில் பட்டு கண்ணாடியில் பிரதிபலித்த உருவத்தை கண்டு அதிசயித்து போன அலாவூதின் கில்ஜி அரண்மனை வாசலில் வந்து வழியனுப்ப வந்த ரத்தன் சிங்கை தந்திரமாக சிறைப்பிடித்து ராணி பத்மினி டெல்லிக்கு வந்து தன்னை சந்தித்தால் தான் ரத்தன் சிங்கை விடுவதாக கூறினார். இதனால் ராணியின் ஏற்பாட்டின் படி பல்லக்கில் ஆண் ஒருவரை வைத்து அலாவூதின் கில்ஜியை ஏமாற்றி ரத்தன் சிங்கை சிறை மீட்டு வந்தனர். இதற்கிடையில் சக இராஜபுத்ர அரசரான கும்பல்னீரை சேர்ந்த தேவபாலா ராணியின் அழகை பற்றி கேள்விப்பட்டு அவரை திருமணம் செய்ய அழைப்பு விடுக்கிறார். இதனால் சிறை மீண்ட ரத்தன் சிங் ஆத்திரப்பட்டு தேவபாலாவின் மீது போர் தொடுக்கிறார். நேருக்கு நேரான போரில் மோதி இருவரும் உயிர் துறக்கின்றனர். இந்த நிலையில் ராணி பத்மினி தன்னை ஏமாற்றி சென்றதால் ஆத்திரப்பட்டு சித்தூர் மீது அலாவூதின் கில்ஜி படையெடுக்கிறார். பலவித முற்றுகைக்கு பின்னர் கோட்டையின் பின்வாசல் பக்கமான காட்டின் வழியாக சூரஜ்மால் கதவை உடைத்து அலாவூதின் கில்ஜி வீரர்கள் கோட்டைக்குள் கி.பி.1303 ஆகஸ்ட் 26ல் உட்புகுந்தனர். கோட்டை வீழும் நேரத்தில் ராணி பத்மினி மற்றும் இராஜபுத்ர பெண்கள் மானத்தை இழக்க விரும்பாமல் ஜோஹர் மூலம் தங்களை தாங்களே எரித்துக்கொண்டு உயிர்விட்டனர். இந்த நிகழ்வு மாலிக் முகமது ஜயாஸி என்பவர் ஆவாத் மொழியில் கி.பி.1540ல் எழுதிய "பத்மாவத்" நூலின் மூலம் தெரிய வந்தது. ஆனால் அலாவூதினுடன் இந்த முற்றுகையின் போது உள்ளே நுழைந்த பாரசீக கிளி "அமிர்குஸ்ரூ" இதை பற்றி ஒன்றும் எழுதவில்லை. ஆனால் ஜெயின் மத நூல்களில் இராணி பத்மினியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் ராணி பத்மினி ரத்தன் சிங்கின் மகள் என்றும் சிலர் ரத்தன் சிங்கின் அண்ணன் லக்ஷ்மா சிங்கின் மனைவி என்றும் சிலர் லக்ஷ்மா சிங்கின் மாமாவான பீமசிம்ஹாவின் மனைவி என்றும் கூறுகின்றனர். அலாவூதினுடன் கோட்டைக்கு நுழைந்த அமீர் குஸ்ரூ கோட்டைக்கு நுழைந்தவுடன் கோட்டையின் தலைவர் சரணடைந்தார். 30000 இந்துக்கள் அலாவூதினின் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். தனது இளைய மகனான கிஸிர் கான் மற்றும் மாலிக் ஷாகின் பொறுப்பில் சித்தூரை "கிஸிராபாத்" என்று பெயர் மாற்றி ஒப்படைத்து விட்டு டெல்லிக்கு திரும்பினார் என்று கூறுகிறார். இதற்கு பின்னர் பக்கத்து ஜாலோர் அரசான மால்தோவிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் மால்தோவின் பால்ய விவாகத்தின் மூலம் விதவையான மகளை மணந்த சிதோதயா வம்சத்தின் ராணா ஹமீர் பின்னர் சித்தூரை வென்று அரசமைத்தது 23 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது.
ராணி பத்மினியை பற்றி பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. சதி பத்மினி (1924), கமோனர் அகுன் (1930), பத்மினி (1948), மகாராணி பத்மினி (1964), சித்தூர் ராணி பத்மினி (1963), பத்மாவத் (2017) ஆகிய திரைப்படங்களும் எண்ணற்ற டிவி சீரியல்களும் இவரது கதையை படம் பிடித்துள்ளனர். பத்மாவத் (2017) திரைப்பட வெளியிட்டு நேரத்தில் இராஜஸ்தான் மாநிலத்தில் கர்ணி சேனா கட்சியினர் சித்தூர் கோட்டையிலுள்ள இவரது மாளிகை கண்ணாடியை உடைத்து எறிந்தனர். மானத்தை விட உயிர் பெரிதல்ல என்ற எண்ணத்தை விதைத்த ராணி பத்மினி இன்றும் இராஜஸ்தானில் தெய்வமாக வழிபடப்படுகிறார். இன்றும் மக்கள் அவரை தியாகத்தை போற்றி புகழ்ந்து வருகின்றனர்.


Comments
Post a Comment