99) இராணி வேலு நாச்சியார்
இராணி வேலுநாச்சியார் (கி.பி.1730-1796) :
இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்மணிகள் தங்கள் தியாகத்தாலும் வீரத்தாலும் இடம் பிடித்து உள்ளனர். அவர்களில் ஒருவராக சிவகங்கை சீமையின் ராணி வேலு நாச்சியார் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். வஞ்சகத்தால் இவரை கணவரை கொன்ற ஆங்கிலேயர்களை தனது சமஸ்தானத்திலிருந்து விரட்டி அடித்து மீண்டும் தனது இராஜ்ஜியத்தை ஆங்கிலேயரிடமிருந்து மீண்ட ஒரே ராணியாக இவர் பதிவு செய்யப்பட்டுள்ளார். இன்றும் சிவகங்கை இராமநாதபுரம் பகுதிகளில் தங்களின் பெண் குழந்தைகளுக்கு வேலு நாச்சியார் என்று பெயர் சூட்டும் பெற்றோர் உண்டு. வீரத்திலும் ஈரத்திலும் சிறந்து விளங்கிய இராணி இவர்.
சேது நாட்டின் மன்னரான சுந்தரேசுவரர் ரகுநாத சேதுபதியை கொன்று விட்டு பவானி சங்கர் சேது நாட்டை கைப்பற்றினார். பட்டத்துக்கு உரியவரான முத்துவிசய ரகுநாத சேதுபதியும் தஞ்சை மன்னரிடம் உதவி கேட்க அதே நேரத்தில் சசிவர்ண தேவரிடமிருந்து வெள்ளிக்குறிச்சி ஆளுநர் பதவியையும் பவானி சங்கர் பறிக்கவே அவரும் தஞ்சை மன்னரிடம் உதவி கேட்டார். இருவரும் இணைந்து தஞ்சை மன்னரின் படைகளுடன் பவானி சங்கரை கொன்று நாட்டை மீட்டனர். பின்னர் சேதுநாட்டை 3/5 பங்கு சேது நாடு "பெரிய மறவர் நாடு" அல்லது இராமநாதபுரம் சீமை என்றும் 2/5 பங்கு சேது நாடு "சின்ன மறவர் நாடு" அல்லது "சிவகங்கை சீமை" என்றும் அழைக்கப்பட்டது. அதற்கு மன்னரான சசிவர்ண தேவர் பெருங்காடாக இருந்த பகுதிகளை அழித்து ஒரு நகரத்தை உருவாக்கி "சிவகங்கை" என்று பெயர் சூட்டினார். சசிவர்ணருக்கும் அவரது இரண்டாவது மனைவி பூதக்கா நாச்சியாருக்கும் மகனாக பிறந்தவர் தான் முத்து வடுக நாதர். இவர் தான் வீர மங்கை வேலு நாச்சியாரின் கணவர்.
வேலு நாச்சியார் கி.பி.1730 ஜனவரி 3ல் இராமநாதபுரத்தில் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதிக்கும் சத்தந்தி முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மகளாக பிறந்தார். இளமையிலையே போர் பயிற்சி, வாட் பயிற்சி, வளரி, சிலம்பம் மற்றும் குதிரையேற்றம் ஆகிய போர்கலைகளை கற்று தேர்ந்தார். அதனுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். சிவகங்கை சீமை இளவரசனான முத்து வடுக நாதருக்கும் வேலு நாச்சியாருக்கும் கி.பி.1746ல் திருமணம் நடந்தது. அதன் பின்னர் தந்தை மறைந்ததும் கி.பி.1750ல் மன்னராக ஆனார். தம்பதிகளுக்கு ஒரே மகள் வெள்ளச்சி என்பவர். கி.பி.1772ல் மன்னரான முத்து வடுக நாதர் ஆங்கிலேயரை எதிர்த்து வரி கொடுக்காமல் இருந்தார். அவரை மிரட்டி பணிய வைக்க முயன்ற ஆங்கிலேயர் தோற்று ஓடினார்கள். போர்களத்தில் ஜெயிக்க முடியாத இவரை சமாதானம் என்று கூறிவிட்டு ஆயுதம் இல்லாமல் காளையார் கோவிலுக்கு சென்ற முத்து வடுகநாதரை ஜோசப் ஸ்மித், பான் சோர் என்ற தளபதிகள் துப்பாக்கியால் முத்து வடுக நாதரையும் இன்னொரு மனைவியான கெளரி நாச்சியாருடன் சேர்த்து சுட்டு கொன்றனர். வெகுண்டு எழுந்த வேலு நாச்சியாரை மருது சகோதரர்கள் சமாதானப்படுத்தி இது எதிர்த்து போர் புரிய தக்க சமயமில்லை என்று கூறி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வெள்ளச்சி மற்றும் அவரது கணவர், தாண்டவயாய பிள்ளை ஆகியோர் திண்டுக்கல் அருகிலுள்ள விருப்பாச்சி பாளையத்தில் கோபால் நாயக்கரின் உதவியை நாடி அடைக்கலம் ஆனார்கள். விருப்பாச்சி கோபால் நாயக்கர் இவர்களின் எல்லா செயலுக்கும் பின்புலமாக இருந்தார். பின்னர் இராணி வேலு நாச்சியார் ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயரை எதிர்க்க திட்டமிட்டார். எட்டு ஆண்டுகள் திட்டமிடலுக்கு பின்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், பல நிலப்பிரபுக்கள் மற்றும் மந்திரி தாண்டவராயன் பிள்ளை ஆகியோரின் உதவியால் மீண்டும் சிவகங்கை இராஜ்யத்தை கைப்பற்றினார். அந்த போரில் தன் கணவரை கொன்ற இரு தளபதிகளையும் தோற்கடித்தார். இந்த போரில் தான் விஜயதசமியன்று சிவகங்கை அரணம்னையில் இருக்கும் இராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம் என்பதால் குயிலி மற்றும் பெண்கள் படையின் பெண் வீரர்கள் கோயிலுக்கு போவது போல் அரண்மனைக்குள் நுழைந்தனர். அரண்மனையில் வெடிமருந்து சேகரித்த இடத்தை கண்ட குயிலி இந்த வெடிமருந்து கிடங்கு இருக்கும் வரை நம்மால் சிவகங்கையை மீட்க முடியாது என்று உணர்ந்து முதல் தற்கொலை போராளியாக குயிலி தன் மீது பூஜைக்கு கொண்டு வந்திருந்த எண்ணெய்யை ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்குக்குள் புகுந்து "வெற்றிவேல் வீரவேல்" என்று முழக்கமிட்டு வெடிமருந்து கிடங்கை வெடிக்க வைத்து தன்னுயிரை ஈந்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்த போரிலும் இவருடன் இணைந்து பெரிய மருது சின்ன மருது சகோதரர்கள் தளபதிகளாக இருந்தனர். பின்னர் வயோதிகத்தால் கி.பி.1780-90 வரை ஆட்சி செய்து விட்டு ஒதுங்கிய வேலு நாச்சியார் தன் மகள் வெள்ளச்சி நாச்சியாருக்கு பட்டம் சூட்டினார். இவரது மகளான வெள்ளச்சி நாச்சியார் கி.பி.1793ல் மறைந்த துக்கம் தாளாமல் கி.பி.1796ல் வேலு நாச்சியார் மறைந்தார். மகளுக்கு பிறகு மருமகனான வேங்கை பெரிய உடையனத்தேவர் மன்னரானார். அவருக்கு மருது சகோதரர்கள் துணை புரிந்தனர். சகோதரர்கள் இருவரும் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர். மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் காளையார் கோவிலை பீரங்கி கொண்டு தகர்க்க போவதாக கூறியதால் சரணடைந்த மருது சகோதரர்கள் மற்றும் வேலு நாச்சியாரின் மருமகன் உட்பட 500 குடும்பத்தினரை கி.பி.1801ல் தூக்கிலிட்டு கொன்றனர். இந்திய அரசு கி.பி.2008ல் இவரது பெயரில் நினைவு தபால்தலை வெளியிட்டு இவரை பெருமைபடுத்தியது.


Comments
Post a Comment