100) போகேஸ்வரி ஃபுக்கனானி

போகேஸ்வரி ஃபுக்கனானி (கி.பி.1885-1942) :


அசாமில் பிறந்த இவர் இந்தியாவின் விடுதலை போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். எட்டு குழந்தைகளின் தாயான இவர் தனது முதுமை பருவத்திலும் குடும்பத்துடன் போராட்ட களத்தில் சுழன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் கூட்டத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற காவலரை தடுக்க அவரை தடியால் தாக்கிய காரணத்தால் சுட்டு கொல்லப்பட்ட தியாகி இவர். தனது உயிர் போனாலும் பரவாயில்லை என்று சக ஆர்ப்பாட்டகாரர்களின் உயிரை காக்க காவலரை தடுத்து தன்னுயிரை ஈந்தவர் இவர்.

இவர் கி.பி.1885ல் அசாமிலுள்ள நாகோமா மாவட்டத்தில் பிறந்தார். இவர் போகேஷ்வர் ஃபுக்கனானி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு 6 மகன்களும் 2 மகள்களும் பிறந்தனர். குடும்பத்தினருடன் விடுதலை போராட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார். சுதந்திர கனலை தீட்ட அசாமிலுள்ள நாகோன் மாவட்டத்திலுள்ள பெர்ராம்பூர், பாபஜியா மற்றும் பார்புஜியா பகுதிகளில் சுதந்திர போராட்ட வீரர்களை இணைக்கும் பொறுப்பை ஏற்று அனைவரையும் விடுதலை வேள்வியில் ஈடுபட தூண்டினார். அந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களை திறக்க உதவினார். கி.பி.1930ல் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். 

கி.பி.1942ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தின் சார்பாக போராட்டங்கள் ஊர்வலங்கள் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால் தான் இத்தனை ஆர்பாட்டங்கள் நடக்கிறது என்பதால் கட்சியை தடை செய்து அலுவலகங்களை ஆங்கில அரசு இழுத்து மூடியது. இதை பொறுக்க முடியாமல் போகேஷ்வரி ஃபுக்கனானி மற்றும் அவரது மகன்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை திறந்தனர். ஆங்கில அரசு அலுவலகத்தை மூடியது.அதை திறக்க செய்ய வந்தே மாதரம் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டங்கள் நடந்தது. கி.பி.1942 செப்டம்பர் 18ல் திறக்கப்பட்ட அலுவலகம் அடுத்த இரண்டாவது நாளில் செப்டம்பர் 20ல் மூடப்பட்டது. இதனால் அடுத்த நாளில் இவர் தலைமையில் சுற்றுப்புற மக்கள் அனைவரும் கூடி காங்கிரஸ் அலுவலகத்தை திறக்க கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களை குறி பார்த்து ஆங்கில அதிகாரி துப்பாக்கியால் சுட முயன்ற போது இவர் ஆங்கில அதிகாரியை தனது கையிலிருந்த கொடி கம்பத்தால் குறிவைத்து தாக்கினார். இதனால் வெகுண்ட ஆங்கிலேய காவலர்களால் இவர் சுட்டு கொல்லப்பட்டார். இன்னொரு கூற்றாக ஆங்கில அதிகாரி ஃபினீஷ் என்பவர் ஆர்ப்பாட்டகாரர் ஒருவரிடம் இருந்து தேசிய கொடியை பிடுங்கி இழுத்து அதை கீழே போட்டு அவமதித்ததை தாங்கி கொள்ள முடியாமல் ஆங்கில அதிகாரியை தாக்கினார். இதனால் ஆங்கிலேய காவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார் என்றும் கூறுகின்றனர். இவர் மறைந்த நாள் கி.பி.1942 செப்டம்பர் 21ம் தேதி. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அஸ்ஸாமில் கவுகாத்தி நகரில் அமைந்த உள் விளையாட்டு அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டது. மேலும் நாகான் நகரில் உள்ள மருத்துவமனைக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னமலற்ற சேவையினால் நாட்டிற்கு தனது இன்னுயிரை தயங்காமல் அளித்த காரணத்தாலும் நாட்டின் தேசிய கொடிக்கு அளித்த மரியாதையினாலும் இவர் மக்களின் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்