101) கே.பி.ஜானகியம்மாள்
கே.பி.ஜானகியம்மாள் (கி.பி.1917-1992) :
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தங்களின் பங்களிப்பை ஆற்றியுள்ளனர். அவர்களில் ஒருவரான இவர் மேடை நாடஙகங்களின் மூலம் சுதந்திர நெருப்பை தூண்டி விட்டவர் ஆவார். அது மட்டுமல்ல விவசாய சங்கத்தின் தலைவர்களுள் ஒருவராக மட்டுமல்லாது ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபன தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.
இவர் கி.பி.1917 டிசம்பர் 9ல் மதுரை திருநகரில் பத்மநாபன் - லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பின்னர் இசை பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர் வறுமையின் காரணமாக தனது 12வது வயதில் பழனியப்பா பாய்ஸ் நாடக கம்பெனியில் மேடை நாடக கலைஞராக ஆனார். நல்ல குரல்வளம் மிக்க இவர் நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார். வள்ளி திருமண நாடகத்தில் வள்ளியாகவும் கோவலன் நாடகத்தில் கண்ணகி, மாதவி என இரு வேடத்திலும் நடித்து புகழ்பெற்றார். தேசபக்தி நடிகரான விஸ்வநாததாஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதால் அவருடன் நடிக்க எந்த நடிகையும் வராத நிலையில் இவர் அவருடன் ஜோடியாக நடித்தார். அவரிடமிருந்தே விடுதலை போராட்ட உணர்வையும் அரசியலையும் கற்று கொண்டார். அந்த குழுவில் இருந்த குருசாமி நாயுடுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேடை நாடகங்களின் மூலமாக இந்திய சுதந்திர நெருப்பை மக்களின் மனதில் தூண்டிவிட்டார். ஒட்டுமொத்த கூட்டமும் ஓங்கி ஒலிக்கும் அளவுக்கு மேடைகளில் "வந்தே மாதரம்" "பாரத சமுதாயம் வாழ்கவே" மற்றும் "விடுதலை விடுதலை" போன்ற பாடல்களை பாடி சுதந்திர நெருப்பை தூண்டி விட்டார். "காந்தி சொல்லை தட்டாதீங்க காங்கிரஸ்காரர்களே" என்ற பாடலும் இவர் பாடியது தான்.கி.பி.1936ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மதுரை காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை வகித்தார். தென்னிந்தியாவில் இரண்டாம் உலக யுத்த எதிர்ப்புக்காக சிறையில் வைக்கப்பட்ட முதல் பெண் இவர் தான். அரசியல் கைதியாக 5 முறை சிறைவாசம் அனுபவித்தவர்.பின்னர் காங்கிரஸ் சோஷியலிஸ்ட் கட்சியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டார். அந்த கட்சி பின்னாளில் கம்யூனிஸ்ட் இயக்கமாக மலர்ந்தது. கி.பி.1940ல் வத்தலகுண்டுவில் ப.ஜீவானந்தம் மற்றும் பிற.ராமமூர்த்தி ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்தார். அவர்களின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாட்டின் முதல் தலைவராகவும் ஸ்தாபன தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அது மட்டுமில்ல விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக உருவாக்கப்பட்ட விவசாய சங்கத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விவசாயிகளின் நலன்களுக்கு பாடுபட்டார். விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளார். மதுரை ஹார்வி மில்லை எதிர்த்தும் நிலபிரபுத்துவத்திற்கு எதிராகவும் பல போராட்டங்களை நடத்தினார். மதுரை துவரிமான் குத்தகை விவசாயிகளின் நிலமீட்பு போராட்டத்தில் சுற்றியிருந்த காவலர்துறையினருக்கு அஞ்சாமல் நிலத்தில் இறங்கி ஏர் பிடித்து "உழுவபவனுக்கே நிலத்தை சொந்தமாக்கு" என்று முழங்கி நில உச்சவரம்பு சட்டம் வருவதற்கு முன்பே அதற்கு குரல் கொடுத்தார். சுபாஷ் சந்திர போஸ் மதுரை வந்தபோது ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியின் அடக்குமுறையை மீறி முத்துராமலிங்க தேவருடன் சென்று மதுரை ரயிலடியில் அவரை வரவேற்க்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி அவரை குதிரை வண்டியில் அழைத்து வந்தார். சுதந்திர போராட்ட காலத்தில் நாடகத்தின் மூலம் இவர் சம்பாதித்த வீடு மற்றும் 200 பவுன் நகைகளை விற்று சுதந்திர போராட்டத்திற்கு செலவழித்தார். இதனால் வாடகை வீட்டில் குடியேறியவரை கடைசி வரை கம்யூனிஸ்ட் கட்சியினர் பார்த்து கொண்டனர். இந்திய விடுதலைக்கு பின்னர் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மதுரை 5ம் வார்டில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு பிரபல காங்கிரஸ் தலைவர்களான சீனிவாசவரத அய்யங்கார் மற்றும் கவுன்சிலர் முனீஸ்வர அய்யர் இருவரையும் தோற்கடித்து வெற்றி பெற்றார். கி.பி.1967ல் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார். சட்டமன்ற விவாதங்களில் இவர் அதிகம் விவசாயிகளின் துயரத்தை பற்றியும் தொழிலாளர்களின் உரிமையையும் பற்றி தான் பேசினார். "மலைவேடன்" பழங்குடியினரை பட்டியினத்தில் இணைக்கும் முயற்சியை கையில் எடுத்தார். பின்னர் முதல்வர் கருணாநிதி பார்வைக்கு எடுத்து சென்றார். மாநில அரசின் பரிந்துரையாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தியாகி பென்ஷன் வழங்க அரசு முடிவு செய்த போது இவருக்கு கொடுத்ததை "கடமையை செய்தேன்.சன்மானம் எதற்கு" என்று திருப்பி அனுப்பினார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அனைவரையும் தோழர் என்று தான் அழைப்பார்கள். ஆனால் இவரின் உன்னதமான சேவை உள்ளத்தாலும் இயக்க உள்ளத்தாலும் இவரை அதன் உறுப்பினர்கள் "அம்மா" என்றே அழைத்தனர். இவர் உயிரோடு இருந்த காலத்திலையே இவரது சுயசரிதை "ஒரு அம்மாவின் கதை" என்ற பெயரில் வெளியானது. இவர் கி.பி.1992 மார்ச் 1ல் தனது 74வது வயதில் காலமானார்.

Comments
Post a Comment