102) அன்னிபெசண்ட் அம்மையார்

அன்னிபெசண்ட் அம்மையார் (கி.பி.1847-1933) :


பிறந்தது அயர்லாந்து நாட்டில் என்றாலும் இந்தியாவுக்கு வந்து பிரம்மஞான சபையை நடத்தி ஆங்கிலேயர்கள் அடக்குமுறையினால் இந்தியர்களை கொடுமைப்படுத்துவது கண்டு வருந்தி "ஹோம் ரூல் " இயக்கத்தை ஆரம்பித்து இந்தியாவின் விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட பெண்மணி இவர்.

இவர் கி.பி.1847 அக்டோபர் 1ல் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வில்லியம் பர்டன் பெர்ஸ்ஸே வூட் மற்றும் எமிலி ரோச் மேரீஸ் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவரது 5 வயதில் தந்தை மறைந்ததால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. தாயார் தனியார் பள்ளியில் ஆண்கள் விடுதி நடத்தினார். அதனால் இவரை தாயின் தோழி எல்லன் மேரியேட் தான் கவனித்து கொண்டார். அவரது ஆதரவில் கல்வி கற்றார். தனது 20வது வயதில் ஆங்க்லிகன் மதகுருவான ஃபிராங்க் பெசண்ட்டை திருமணம் செய்தார். தம்பதிகள் இருவரும் லிங்கன்ஷையரில் உள்ள சிப்சியில் குடிபெயர்ந்தனர். தம்பதிகளுக்கு ஆர்தர் மற்றும் மேபெல் என்ற இரு குழந்தைகள் பிறந்தனர். இவர் எழுதுவதில் கிடைத்த பணம் திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது என்பதால் கணவருக்கு போயிற்று. மேலும் இவர் தொழிற்சங்கங்கள் சார்பாக விவசாய தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்ததால் எதிர் அணியில் இருந்த கணவரால் சகித்து கொள்ள முடியவில்லை. இதனால் கணவரை விட்டு கி.பி.1873ல் பிரிந்து தனது மகளை அழைத்துக்கொண்டு இலண்டன் வந்து சேர்ந்தார். பின்னர் தம்பதிகள் விவாகரத்து பெற்றனர். இதன் பிறகு பெண்கள் சுதந்திரம், பெண்ணுரிமை, மதசார்ப்பு, ஃபேபியன் சோஷஸிஸம் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள் ஆகியவற்றிற்காக பாடுபட்டார். நீண்டகால மதநம்பிக்கை மற்றும் தேவாலயங்களின் நடைமுறைகளையும் அவை மக்களை கட்டுப்படுத்துவதை பற்றியும் கேள்விகள் எழுப்பினார். பத்திரிக்கைகளில் எழுதினார். மேலும் பேச்சாளராக இருந்து நாடு முழுவதும் சென்று பேசினார். இவரும் இவரது நண்பருமான பிராட்லாக் இணைந்து சார்லஸ் நோல்டனின் "ப்ரூட்ஸ் ஆஃப் பிலாஸபி"யை வெளியிட்ட போது தொழிலாளர்கள் குடும்பங்களில் குழந்தைகளின் அளவை கட்டுப்படுத்தினால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற கருத்திசைவுக்கு தேவாலயங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கருத்தடைக்கு ஆதரவாக வழக்கை சந்தித்தவர் கடைசியில் சிறைகண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தப்பினார். ஆனாலும் இதனால் குழந்தைகளை வளர்க்க தகுதியற்றவர் என்று கூறி இவரது முன்னாள் கணவர் குழந்தைகளை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். 

பின்னர் அயர்லாந்து ஹோம் ரூல் இயக்கத்தினை சந்தித்தார். கி.பி.1887ல் டிராபால்கர் சதுக்கத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பேசினார். இதில் காவல்துறை கூட்டத்தை தடுக்க தடியடி நடத்த கூட்டம் எதிர்த்து தாக்க மேலும் துருப்புகள் வரவழைக்கப்பட்டு தாக்குதல் தொடர்ந்ததில் ஒருவர் இறந்தார். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். இந்த நிகழ்வு "இரத்த ஞாயிறு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது நண்பரான பிராட்லாக் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். கி.பி.1893ல் சிகாகோவில் உள்ள உலக மதங்களின் பாராளுமன்றத்தில் தியோசாபிகல் சொஸைட்டியின் உறுப்பினராக இருந்தார். இந்த ஆண்டே இந்தியா வந்தார். சென்னை அடையாறில் உள்ள தியோசாபிகல் சொஸைட்டி அடையார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சிகாகோ விழாவில் தான் விவேகானந்தர் இந்து மதத்தை பற்றி சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் பெர்னார்ட் ஷாவுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். அவருடன் இணைந்து வாழ பிரியப்பட்டாலும் ஷா அதை மறுத்து நட்புடன் இருந்து கொண்டார்.

கி.பி.1902ல் இந்தியா " மக்களின் செழுமைக்காக ஆளப்படவில்லை. அதனை வென்றவர்களின் நலனுக்காக ஆளப்படுகிறது" என்று கருத்து கூறி இந்திய தேசிய இயக்கத்தில் இணைந்தார். பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சாதி மற்றும் குழந்தை திருமணத்தை எதிர்த்தார். இறையியல் செயல்பாடுகளுடன் அரசியல் களத்திலும் இணைந்து செயல்பட்டார். கி.பி.1914ல் முதல் உலகப்போர் வெடித்தபோது இந்தியாவின் ஆதரவை பிரிட்டன் கேட்க "பிரிட்டனின் தேவை இந்தியாவுக்கான வாய்ப்பு" என்று கூறி சுதந்திரம் வழங்க முழங்கினார். கி.பி.1916ல் பாலகங்காதர திலகருடன் இணைந்து "ஹோம் ரூல்" இயக்கத்தை ஆரம்பித்து நாடு முழுவதும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் கி.பி.1917ல் அன்னிபெசண்ட் கைது செய்யப்பட காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி இணைந்து இவரை விடுவிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்க காலனி அரசு பணிந்து இவரை விடுவித்தது.  அந்த ஆண்டு இறுதியில் அன்னி பெசண்ட் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து சுதந்திரத்தை பற்றியும் சுயராஜ்யத்தின் தேவையை பற்றியும் கூட்டங்கள் நடத்தினார். இதனுடன் தனது மகனான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் இறையியல் தொடர்பான விவாதங்களிலும் கலந்து கொண்டார். கி.பி.1931ல் நோய்வாய்ப்பட்டு கி.பி.1933 செப்டம்பர் 20ல் சென்னை அடையாறில் தனது 85வது வயதில் காலமானார். இவரது மறைவுக்கு பின்னர் இவரது பணியை தொடர்ந்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலிபோர்னியா நகரில் கட்டிய பள்ளி இன்று "பெசண்ட் ஹில் ஸ்கூல் ஆஃப் ஹேப்பி வேலி" என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்து இறையியல் தேடலுக்கு இந்தியா வந்து இந்திய காலனியாதிக்கத்தால் மோசமான சுரண்டலுக்கு உள்ளாவதை கண்டு மனம் வருந்தி இந்திய விடுதலை போராட்டத்தில் இணைந்து போராடியவர் தான் அன்னி பெசண்ட் அம்மையார். சென்னையில் "பெசண்ட் நகர்" இவரது நினைவாக பெயரிடப்பட்டது தான் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்