103) மீரா பென் (மேடலின் ஸ்லேட்)

மீரா பென் (மேடலின் ஸ்லேட்) (கி.பி.1892 - 1982) :


மேடலின் ஸ்லேட் என்ற இங்கிலாந்து நாட்டு பெண்மணி வியன்னாவில் சந்தித்த ஒருவரின் உரையாடலில் காந்தியை பற்றி கேள்விப்பட்டு அவரை பற்றிய அவர் எழுதிய புத்தகத்தை படித்து அவரின் பால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்து அவருடன் இணைந்து இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தனது சொந்த நாட்டுக்கு எதிராக இந்தியாவின் விடுதலைக்கு காந்தியின் தோள்கொடுத்து நின்றார். காந்திய கொள்கையினால் ஈர்க்கப்பட்ட இவர் சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய மக்களின் மேம்பாட்டிற்கும் பாடுபட்டார். இந்தியா வந்தவுடன் மேடலின் ஸ்லேட் என்ற பெயர் மீரா பென்னாகி இந்தியாவில் 34 ஆண்டுகள் வசித்தார்.

இவர் பிரிட்டிஷ் அட்மிரல் சர் எட்மண்ட்  ஸ்லேட் மற்றும் ஃப்ளோரன்ஸ் மேடலின் ஆகியோருக்கு மகளாக கி.பி.1892ல் இங்கிலாந்தில் பிறந்தார். இவர் பிறந்த சமயத்தில் இவரது தந்தை கிழக்கிந்திய தீவுகளின் படைதளபதியாக இருந்து பின்னர் கடற்படை புலனாய்வு பிரிவு இயக்குனரானார். இதனால் இவர் குழந்தை பருவத்தை தாய்வழி தாத்தாவுடன் பெரிய தோட்ட வீட்டில் இயற்கை மற்றும் விலங்குகளுடன் கழித்தார். அதனால் இவருக்கு இயற்கையின் மீது விருப்பம் இருந்தது. இவருக்கு பியானா இசைக்கலைஞரான சிம்பெனி இசைக்கோவையை வடித்த லுட்விக் வான் பீத்தோவன் இசையின் மீது மிகவும் விருப்பம் கொண்டிருந்தார். பியானோ இசைகச்சேரிகளுக்கு சென்றதுடன் விரைவில் கச்சேரி மேலாளராகவும் ஆனார். கி.பி.1921ல் இலண்டன் இசைக்குழுவை வழிநடத்த ஜெர்மானிய இசைக்கலைஞரை ஏற்பாடு செய்தார். பீத்தோவன் வாழ்ந்த இடங்களை பார்க்க வியன்னா (ஆஸ்திரியா) மற்றும் ஜெர்மனிக்கு சென்று அவரை பற்றி நன்கு படித்தார். பீத்தோவனை பற்றிய புத்தகங்களை எழுதிய ரோமெய்ன் ரோலண்ட்டின் புத்தகங்களை படித்ததுடன் அவரையும் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில் ரோலண்ட் மகாத்மா காந்தியை பற்றிய புத்தகத்தை எழுதிக்கொண்டு இருந்தார். அவரை மற்றொரு இயேசு கிறிஸ்து என்றும் 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த நபர் என்றும் கூறினார். இங்கிலாந்து திரும்பியதும் ரோலண்ட் எழுதிய காந்தியை பற்றிய புத்தகத்தை படித்தவுடன் அவருக்கு காந்தியின் சீடராக வேண்டும் என்ற உணர்வுடன் காந்திக்கு கடிதம் எழுதி கேட்டார். சபர்மதி ஆஸ்ரமம் வந்த இவரிடம் காந்தி ஆசிரமத்தின் ஒழுக்கம், சைவம், கதர் துணி நூற்பு மற்றும் டீட்டோடலிசம் பற்றியும் இந்திய துறவியின் வாழ்க்கைக்கு சமமாக வாழ நேரிடும் என்று கூறவும் அந்த வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்திகொண்டார்.

கி.பி.1925 நவம்பர் 7ம் தேதி அகமதாபாத் வந்த இவர் வல்லபாய் படேல், மகாதேவ் தேசாய் மற்றும் சுவாமி ஆனந்த் ஆகியோரால் வரவேற்கப்பட்டார். பின்னர் இந்தி மொழி கற்று கொள்ள ஹரித்துவாரிலுள்ள குருகுல கஹங்கிரிக்கு சென்றார். பின்னர் சுவாமி பர்வானந்த மகாராஜாவால் ரோவாரியில் ஆரம்பிக்கப்பட்ட பகவத் பக்தி ஆசிரமத்திற்கு சென்றார். கி.பி.1931ல் இலண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டுக்கு காந்தியுடன் சென்றார். பின்னர் திரும்பும் வழியில் ரோலண்ட்டை சந்திக்க அவர் பீத்தோவன் பற்றிய புத்தகத்தை இவரிடம் கொடுத்தார். கி.பி.1932ல் ஒத்துழையாமை இயக்கத்தின் போராட்டத்தால் இவரும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவின் விடுதலைக்கான பேச்சுவார்த்தையில் இவர் இலண்டன் சென்று வின்ஸ்டன் சர்ச்சில் முதலிய தலைவர்களை சந்தித்ததுடன் அமெரிக்கா சென்று அதிபர் ரூஸ்வெல்ட் டின் மனைவியை சந்தித்து உரையாடினார். இவர் சேவா கிராம் ஆஸ்ரமத்தை நிறுவ தீவிர ஆர்வம் காட்டியதுடன் கி.பி.1942ல் ஜப்பானிய படையெடுப்பை அகிம்சை முறையில் எதிர்க்க ஓரிஸா மக்களை தயார்படுத்தினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் சமயத்தில் காந்தியுடன் கைது செய்யப்பட்டு பூனேவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் வீட்டுசிறையில் அடைக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் மறைந்த மகாதேவ் தேசாய் மற்றும் கஸ்தூர்பா காந்தி ஆகியோர்களின் நலன்களை உடனிருந்து கவனித்துக் கொண்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் ரூர்க்கிக்கு அருகிலுள்ள முல்தாஸ்பூர் மஜ்ரா என்னும் கிராமத்தில் கிசான் ஆஸ்ரமத்தை ஆரம்பித்தார். சுதந்திரத்திற்கு பிறகு ரிஷிகேஷ் அருகே பசுலோக் ஆஸ்ரமத்தையும் நிறுவினார். இந்த ஆசிரமங்களில் விவசாய பரிசோதனைகளை செய்து வந்தார். பின்னர் உத்திரகாண்ட் குமாவோன் மற்றும் கர்வால் பிரதேங்களில் வன ஆராய்ச்சி செய்து "இமயமலையில் ஏதோ ஒரு தவறு" என்ற தலைப்பில் எழுதினார். ஆனால் அது கண்டுகொள்ளப் படவில்லை. பின்னர் கி.பி.1959ல் இங்கிலாந்து சென்றவர் அடுத்த ஒரு வருடத்தில் ஆஸ்திரியா சென்று அங்கேயே ஒரு சிறு கிராமத்தில் தனது வாழ்நாளின் கடைசி 22 ஆண்டுகளை கழித்து அங்கேயே கி.பி.1982 ஜூலை 20ல் மறைந்தார். 

இவருக்கு கி.பி.1981ல் இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான "பத்ம விபூசண்" விருது வழங்கப்பட்டது. இவர் தனது மாத்திரைகளின் அனுபவங்களை " ஸ்பிரிட்ஸ் ஆஃப் யாத்திரா" என்ற புத்தகத்தில் எழுதினார். அது மட்டுமில்லாது "பழைய புதிய சேகரிப்புகள்" என்ற புத்தகமும் எழுதினார். மேலும் கடைசி காலத்தில் பீத்தோவனின் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்தவர் அதை முடிக்காமலையே மறைந்து விட்டார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்