104) சர்ளா பென்
சர்ளா பென் (கி.பி.1901-1982) :
பிறந்தது இங்கிலாந்து என்றாலும் காந்தியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்து அவரோடு இணைந்து நின்ற பெண்மணி. காந்தியின் இரு ஆங்கிலேய மகள்களுள் ஒருவராக அவரால் அடையாளப்படுத்தப்பட்டவர். மற்றொருவர் மீரா பென். இந்தியாவிற்கு வந்த பிறகு இந்தியாவை விட்டு வெளியேறாமல் 50 ஆண்டுகள் இந்தியாவிலையே வாழ்ந்து மடிந்தவர். சிப்கோ இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவர். சுற்றுசூழல் மற்றும் இயற்கை வளம் ஆகியவற்றோடு இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். வீட்டுசிறையில் அடைக்கப்பட்டவர் தடையை மீறி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக கலந்து கொண்டதால் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டவர் இவர்.
இவர் கி.பி.1901 ஏப்ரல் 5ல் இங்கிலாந்தின் மேற்கு இலண்டனிலுள்ள ஷெப்பட்ஸ் புஷ் என்னும் ஊரில் ஜெர்மன் சுவிஸ் கலப்பின தந்தைக்கும் ஆங்கிலேய பெண்ணுக்கும் பிறந்தவர். முதலாம் உலகப் போரின் போது இந்த காரணத்தால் இவரது தந்தை காவலில் வைக்கப்பட்டார். இவருக்கும் கல்வி உதவி தொகை மறுக்கப்பட்டது. பின்னர் அவர் ஒரு எழுத்தராக பணியாற்றினார். குடும்பத்தை விட்டு வெளியேறினார். கி.பி.1930களில் பிரிட்டனில் பணிபுரிந்த இந்திய அதிகாரி மோகன் சிங் மேத்தாவிடம் இந்திய சுதந்திர போராட்டத்தையும் காந்தியை பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் இந்த காரணத்தால் தூண்டப்பட்ட இவர் கி.பி.1932ல் இந்தியா வந்தவர் திரும்ப இங்கிலாந்துக்கு திரும்பி செல்லாமலையே 50 ஆண்டுகள் இந்தியாவுக்காக வாழ்ந்தார்.
இந்தியா வந்த இவர் உதய்ப்பூரில் ஒரு பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் வார்தாவில் உள்ள காந்தியின் சேவாகிராம் ஆசகரமத்திற்கு சென்று ஆச்சார்ய வினேபா பாவேயை சந்தித்தார். காந்தியே இவருக்கு சர்ளா பென் என்று பெயரிட்டார். 8 ஆண்டுகள் சேவாகிராம் ஆசிரமத்தில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்று கொடுத்தார். பின்னர் தட்பவெப்பநிலை மற்றும் மலேரியா தாக்குதல்கள் காரணமாக காந்தியிடம் ஒப்புதல் பெற்று உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள அல்மோரா மாவட்டத்தில் உள்ள கெளசனிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு தனது ஆஸ்ரமத்தை அமைத்து குமாவோன் பகுதியில் பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் சுற்றுசூழல் தொடர்பான கல்வியையும் கற்று கொடுத்தார். பின்னர் குமாவோன் பகுதியில் கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தார். சிறை சென்ற சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு சென்று தகவல்கள் அளித்தார். சுதந்திரத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் செய்திகளை வழங்குதல் ஆகியவற்றோடு சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். இந்த காரணங்களுக்காக இவர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் 2 முறை வீட்டுகாவலை மீறியதற்காக லக்னோ சிறையில் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு பின்னர் இவர் நிறுவிய கஸ்தூர்பா மகிளா உத்தன் மண்டல், லக்ஷ்மி ஆஸ்ரமம் மற்றும் கெளசனி ஆஸ்ரமம் ஆகியவற்றில் தொடர்ந்து சேவை செய்து அந்த பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். பின்னர் சுதந்திரம் அடைந்த பிறகு ஆஸ்ரமங்களின் பொறுப்பை ராதா பட் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு இவர் வினோபாவே தொடங்கிய பூமிதான இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திகொண்டார். சர்ளா பென்னின் வழிகாட்டுதலின் பேரில் உத்திரகாண்ட் சர்வோதயா மண்டல் கி.பி.1961ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பெண்களை ஒருங்கிணைத்தல், மது பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடுதல், பெண்களுக்கு காடு சார்ந்த சிறுதொழில் ஏற்பாடுகள் மற்றும் வன உரிமைகளுக்காக போராடுதல் ஆகிய நோக்கங்களுக்காக பெண்கள் சிறப்புற போராடினர். இமயமலை சுற்றுச்சூழலை பற்றி ஏற்கனவே மீரா பென் மற்றும் சுந்தர்லால் பகுகுணா ஆகியோர் தகவல்கள் தெரிவித்திருந்தாலும் இவரும் சுற்றுசூழல் விஷயங்களில் ஆர்வமுடன் பணியாற்றினார். வன காடுகளை பாதுகாக்கும் சிப்கோ இயக்கத்தின் செயல்பாடுகளில் இவரும் பங்கு வகித்தார். சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத உத்திரகாண்ட் மக்களுக்கு அதன் அவசியத்தையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் விவரித்து அவர்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களில் பங்கு கொள்ள வைத்தார். பின்னர் கி.பி.1970களில் சம்பல் நதி பள்ளத்தாக்கில் சரணடைந்த கொள்ளையர்களின் குடும்பங்களின் மேம்பாட்டுக்கு பாடுபட்டார். கி.பி.1977ல் சிப்கோ இயக்கத்தின் ஆர்வலர்களை ஒழுங்கமைத்தார்.
சர்ளா பென் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொத்தம் 22 புத்தகங்களை எழுதியுள்ளார். இரு உலகங்களில் ஒரு வாழ்க்கை : மகாத்மா காந்தியின் ஆங்கில சீடரின் சுயசரிதை ஆகியவை முக்கிய சுயசரிதை நூல்களாகும். இவரது சேவைகளுக்காக ஜம்னாலால் பஜாஜ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் "இமயமலையின் மகள்" மற்றும் "சமூக செயல்பாட்டின் தாய்" என்றும் பெருமையுடன் அழைக்கபப்டுகிறார். கி.பி.2006ல் உத்தரகாண்ட் அரசு இவருக்கு நினைவு அருங்காட்சியகத்தை அமைப்பதாக அறிவித்தது. இவர் கி.பி.1975ல் உத்தரகாண்ட்டில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தரம்கருக்கு இடம்பெயர்ந்து வாழ்நாள் முடியும்வரை அங்கேயே வாழ்ந்தார். இவர் கி.பி.1982 ஜூலை 8ம் தேதி தனது 81வது வயதில் மறைந்தார். இவர் உடல் லட்சுமி ஆசிரமத்தில் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு இந்தியர்கள் போராடினால் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் இந்திய சுதந்திரத்திற்குப் ஆங்கிலேய பெண்மணி தனது சொந்த நாட்டின் எதிராக அடக்குமுறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க போராடியதை எந்த வார்த்தைகளில் விவரிப்பது என்று புரியவில்லை. இந்திய மக்கள் மகாத்மா காந்தியின் இரு மகள்களான சர்ளா பென் மற்றும் மீரா பென் ஆகியோரின் சேவைகளுக்காக கடமைப்பட்டு உள்ளனர்.


Comments
Post a Comment