105) மணிபென் படேல்
மணிபென் படேல் (கி.பி.1901-1990) :
இந்திய வரலாற்றில் குடும்பத்தில் ஒருவர் விடுதலைக்காக போராடியவராக இருந்தால் அந்த குடும்பம் முழுவதுமே அவரின் வழியை பின்பற்றி விடுதலை போராட்டத்தில் ஈடுபடும். அப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவர் தான் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் மகளான மணிபென் படேல்.
இவர் கி.பி.1903 ஏப்ரல் 3ம் தேதி இன்றைய குஜராத்தில் உள்ள கரம்சாத் என்னும் ஊரில் இந்தியாவின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் படேலுக்கு மகளாக பிறந்தார். தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததாலும் இவரது தாயார் இவரது 6வது வயதில் இறந்து போனதாலும் இவரது தாய்மாமாவான விட்டல்ராவ் படேலால் வளர்க்கப்பட்டார். கி.பி.1918ல் பம்பாயில் உள்ள குயின்மேரி உயர்நிலை பள்ளியில் ஆரம்பகல்வியை முடித்தார். அதன் பின்னர் காந்தியின் போதனைகளை ஏற்று சபர்மதி ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வர ஆரம்பித்தார். கி.பி.1920ல் அகமதாபாத்தில் ராஷ்டிர வித்யாபீட பல்கலைகழகத்தில் பயின்றார். கி.பி.1925ல் பட்டம் பெற்றார்.
கி.பி.1923-24ல் பிரிட்டிஷ் அரசு சாதாரண மக்களின் மீது வரிவிதிப்பை அதிகப்படுத்தியது. வரிகெடுக்காத மக்களின் உடைமைகளான கால்நடைகள், நிலம் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ய தொடங்கினர். இதை எதிர்த்து போர்சாத் பகுதியில் படேல் மற்றும் காந்தி இணைந்து வரியில்லா இயக்கத்தை தொடங்கினர். இதை ஆதரித்து மணிபென் படேல் அங்குள்ள மக்கள் மற்றும் பெண்களின் மத்தியில் வரியில்லா இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவு திரட்டினார். இதே போல் கி.பி.1928ல் சூரத் பர்டோலி பகுதியிலும் பிரிட்டிஷ் அரசு அதிக வரியை விதித்து மக்களை கொடுமைப்படுத்த காந்தியடிகள் வல்லபாய் படேலை அங்கு சத்தியாகிரகத்தை ஆரம்பிக்க சொன்னார். இந்த இயக்கத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாக திரண்டனர். எல்லோரும் இணைந்து அரசால் அபகரிக்க நிலங்களில் குடிசைகள் அமைத்து தங்கி தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்பு சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தார். கி.பி.1930களில் தனது தந்தை சர்தார் வல்லபாய் படேலின் உதவியாளராக அவரது தேவைகளை கவனித்து கொண்டார். ராட்டையில் கதர் துணிகளை நெய்து தனக்கும் தனது தந்தைக்கும் தேவையான ஆடைகளை இவரே தயாரித்துக் கொள்ள ஆரம்பித்தார். காந்தியின் போதனைகளின் படி எங்கு சென்றாலும் மூன்றாம் வகுப்பு ரயிலில் மட்டுமே பயணித்தார். கதர் ஆடைகளை மட்டுமே அணிந்து வந்தார். கி.பி.1942-45 வரை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதால் பூனேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். தனது தந்தை இறக்கும்வரை அவருக்கு உதவியாக இருந்தார். தந்தை இறக்கும்போது நேருவிடம் கொடுக்க வேண்டிய காங்கிரஸ் கட்சியின் கணக்கு புத்தகத்தையும் கட்சி பணம் 35 லட்ச ரூபாயையும் இவரே நேரில் டெல்லி சென்று நேருவிடம் ஒப்படைத்தார்.
நாடு விடுதலைக்கு பின்னர் இவர் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக (1953-56) மற்றும் துணை தலைவராக (1957-64) இருந்தார். கி.பி.1952ல் காங்கிரஸ் சார்பாக "கேடா" மக்களவை தொகுதியிலும் கி.பி.1957ல் "ஆனந்த்" மக்களவை தொகுதியிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1964-70 வரை இராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார். கி.பி.1973ல் சபர்கந்தா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து மக்களவை உறுப்பினரானார். நாடு நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்டபோது தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கும் பத்திரிக்கை தணிக்கைக்கும் எதிராக இவர் மீண்டும் ஒரு தண்டி யாத்திரையை கி.பி.1976ல் நடத்தவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கி.பி.1977ல் ஜனதா கட்சி சார்பில் "மெஹ்ஸனா" மக்களவை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அது மட்டுமல்லாது நிறைய அறக்கட்டளைகளின் தொடர்பில் இருந்து மக்கள் நல பணிகளை தொடர்ந்து நடத்தி வந்தார். இவர் கி.பி.1990 மார்ச் 26ல் அகமதாபாத்தில் மரணமடைந்தார்.


Comments
Post a Comment