107) நெல்லி சென் குப்தா

நெல்லி சென் குப்தா (எடித் எலன் கிரே) (கி.பி.1884-1973) :


பிறந்தது வளர்ந்தது இங்கிலாந்து என்றாலும் படிக்கும்போது காதலித்து மணந்த இந்திய வழக்கறிஞர் மற்றும்  சுதந்திர போராட்ட வீரர் ஜதீந்திர மோகன் சென் குப்தாவின் மனைவியான இவர் கணவரின் மறைவிற்கு பின்னரும் இந்திய தேசிய காங்கிரஸில் தொடர்ந்து பணியாற்றி வீடு வீடாக கதர் துணிகளை விற்றும் ஒத்துழையாமை மற்றும் வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை தண்டனை அனுபவித்தவரும் கூட. கி.பி.1933ல் கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி. இந்திய சுதந்திரத்திற்கு பிறகும் நேருவின் விருப்பப்படி தனது கணவரின் ஊரான சிட்டகாங்கில் (இன்றைய பங்களாதேஷ்) இருந்தவர். பின்னர் 1970ல் கல்கத்தாவிற்கு இந்திரா காந்தியால் அழைத்து கொண்டு வரப்பட்டார். இந்தியா பிறந்த நாடாக இல்லாவிட்டாலும் இந்திய மண்ணை தனது சொந்த மண்ணாக நினைத்தவர் இவர்.

இவர் கி.பி.1884 ஜனவரி 12ல் இலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜில் எடித் ஃபிரடெரிக் மற்றும் எடித் ஹென்றிட்டா தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது வீட்டில் அப்போது டவுனிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இளம் மாணவரான ஜதீந்திர மோகன் சென்குப்தா தங்கியிருந்தார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பெற்றோரின் எதிர்ப்புகளை மீறி ஜதீந்திர மோகன் சென்குப்தாவை கி.பி.1909 ஆகஸ்ட் 1ல் மணந்து இந்தியாவுக்கு வந்தார். தம்பதிகள் இருவரும் சிட்டகாங்க்கில் குடும்பம் நடத்தினர். இருவருக்கும் சிஷிர் மற்றும் அனில் என்ற இரு மகன்கள் பிறந்தனர். இந்தியா வந்ததும் ஜதீந்திர மோகன் கொல்கத்தாவில் ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கினார். கி.பி.1910ல் ஜதீந்திர மோகன் மற்றும் நெல்லி இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த கால கட்டத்தில் கி.பி‌.1921ல் ஒத்துழையாமை இயக்கம் நடந்து கொண்டிருந்த போது அவரும் அதில் பங்கேற்று வங்காளத்தில் மகாத்மா காந்தியின் வலது கையாக இருந்தார். இந்த நேரத்தில் நெல்லி தன் கணவருடன் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். சிட்டகாங்க் நகரில் கதர் விற்பனை செய்யும்போது இவர் கைது செய்யப்பட்டார். இவரது கணவர் அசாம்-வங்காள இரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக இருந்ததால் கைது செய்யப்பட்ட பிறகு இவர் எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் குதித்தார். மக்கள் கூட்டங்களில் உரையாற்றினார். சட்டத்தை மீறி கதர் துணியை வீடு வீடாக விற்றார். இதனால் நெல்லி சென்குப்தா கைது செய்யப்பட்டு கி.பி.1931ல் 4 மாதங்கள் டெல்லியில் சிறைத்தண்டனை அனுபவித்தார். தடை செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய காரணத்தால் இவரது கணவரான ஜதீந்திர மோகன் கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலையே அவர் கி.பி.1933ல் இறந்தார்.

உப்பு சத்தியாகிரகத்தின் போது பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கி.பி.1933ல் பண்டிட் மதன் மோகன் மாளவியா காங்கிரஸ் கூட்டத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக நெல்லி சென்குப்தா காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்பு முடிவதற்குள் நெல்லி கைது செய்யப்பட்டார்.  காங்கிரஸ் கட்சியின் 3வது பெண் தலைவராகவும் 2வது ஜரோப்பிய நாட்டு பெண்மணியாகவும் ஆனார். மேலும் இவர் கி.பி.1933 & 1936ல் கொல்கத்தா கார்ப்பரேஷன் ஆல்டன்மேன் ( மேயருக்கு அடுத்த பதவி) ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கி.பி.1940 மற்றும் கி.பி.1946ல் வங்காள சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் கிழக்கு பாகிஸ்தான் (இது பின்னர் கி.பி.1971ல் பங்களாதேஷ் என்ற நாடாக உருவானது) பகுதியில் உள்ள இந்து சிறுபான்மையினரின் நலன்களை கவனிக்க கிழக்கு பாகிஸ்தானிலையே தங்க கேட்டு கொண்டதால் இவரது கணவரது ஊரான சிட்டகாங்க் நகரில் வசித்தார். இவர் கி.பி.1954ல் கிழக்கு பாகிஸ்தான் சட்டமன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு சிறுபான்மை வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்தார். கிழக்கு பாகிஸ்தானில் நிலவிய அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக பலமுறை வீட்டுக்காவலில் இருந்தார். கி.பி.1970ல் இடுப்பு எலும்பு உடைந்த நிலையில் இந்திரா காந்தியின் தலையீட்டின் பேரில் கொல்கத்தாவிற்கு அழைத்து வரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அனைத்து மருத்துவ செலவுகளையும் இந்திய அரசே ஏற்றது. கொல்கத்தாவில் இருந்த காலத்தில் இவரது கணவர் மற்றும் இவர் பங்களாதேஷில் சிறுபான்மையினருக்காக ஆற்றிய பணிகளுக்காக மக்களாலும் அரசாங்கத்தாலும் கெளரவிக்கப்பட்டார். இவருக்கு இந்திய அரசு இந்தியாவின் இரண்டாவது தலைசிறந்த உயரிய விருதான பத்ம விபூசண் விருதை கி.பி.1973ல் வழங்கி கெளரவித்தது. இவர் கி.பி.1973 அக்டோபர் 23ல் கொல்கத்தாவில் மறைந்தார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்