108) கல்பனா தத்தா ஜோஷி
கல்பனா தத்தா (ஜோஷி) (கி.பி.1913-1995) :
இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஆயுதமேந்தி போராடிய பெண் உறுப்பினர்களுள் ஒருவர். சிட்டகாங் ராணுவ கிடங்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர். அதன் பின்னரும் ஆயுதமேந்தி போராடியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வந்தவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து மக்கள் சேவையில் ஈடுபட்டவர் இவர்.
இவர் கி.பி.1913 ஜூலை 27ல் இன்றைய பங்களாதேஷ் பகுதியிலுள்ள சிட்டகாங்க் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீபூர் என்னும் கிராமத்தில் அரசு ஊழியரான பினோத் பிஹாரி தத்தகுப்தா என்பவருக்கு மகளாக பிறந்தார். குழந்தையிலையே சாகச கதைகள் கேட்பதில் இருந்த ஆர்வம் பள்ளியில் படிக்கும்போது சுதந்திர போராட்ட வீரர்களின் சுயசரிதைகளை படிப்பதில் கொண்டு நிறுத்தியது. நானும் அவ்வாறே நாட்டிற்கு பாடுபடவேண்டும் என்று முடிவு செய்தார். கி.பி.1929ல் சிட்டகாங்கில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்கத்தாவில் உள்ள பெத்தூன் கல்லூரியில் அறிவியல் படிக்க சேர்ந்தார். இந்த கல்லூரியில் உள்ள சத்ரி சங்கம் (பெண் மாணவர்கள் அமைப்பு) துடிப்புடன் செயல்பட்டு வந்தது. அதில் தான் பினா தாஸ் மற்றும் பிரிதிலதா வடோதார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். அப்போது தான் சூர்யா சென்னுடன் நேரடி சந்திப்பு நேர்ந்தது. இந்த நேரத்தில் கி.பி.1930 ஏப்ரலில் சிட்டகாங் ஆயுத கிடங்கு தாக்குதல் சூர்யா சென்னால் நடத்தப்பட்டது. அவரின் செயல்பாடுகளால் உந்தப்பட்டு இவரும் மற்றவர்களும் இந்திய குடியரசு இராணுவத்தில் மே 1931ல் இணைந்தனர். ஆனாலும் சிட்டகாங் ஆயுத கிடங்கு குண்டு வெடிப்பில் இவருக்கும் பங்கு இருந்தது. இதனால் கல்லூரி படிப்பை பாதியில் விட நேர்ந்தது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மாறுவேட்த்தில் வெடிமருந்துகளை சப்ளை செய்து வந்தார். துப்பாக்கி பயன்படுத்த பயிற்சியும் தோட்டாக்கள் தயாரிப்பதற்கு பயிற்சியும் பெற்றவர். செப்டம்பர் மாதத்தில் "நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதியில்லை" என்ற அறிவிப்பு வைத்த ஜரோப்பிய கிளப்பை தாக்க சூர்யா சென் திட்டமிட்டார். அதை உளவு பார்க்க வந்த கல்பனா தத்தா தாக்குதலுக்கு ஒரு வாராத்திற்கு முன்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஜரோப்பிய கிளப் தாக்குதலில் தான் பிரிதிலதா வடோதார் விஷமிருந்தி உயிர் விட்ட நிகழ்வு நடந்தது. கைது செய்யப்பட்ட கல்பனா தத்தா ஜாமினில் வெளிவந்த பின்னர் தலைமறைவானார். கல்பனா தத்தா சூர்யா சென்னுடன் இணைந்து பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டு கொண்டிருந்த போது கி.பி.1933 பிப்ரவரி மாதத்தில் கைராலா கிராமத்தில் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டார். சூர்யா சென் இவரை தப்பிக்க வைத்து அவர் சிறைப்பட்டார். சிறையில் இருந்த சூர்யா சென்னை விடுவிக்க சிறையில் மீது வெடிகுண்டுகள் வீசினாலும் அவரை விடுவிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார்.
கல்பனா தத்தா மே 1933ல் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை முடிவில் இவருக்கு ஆயுள் தண்டனையும் சூர்யா சென்னுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. சிறையில் 6 ஆண்டுகள் வாடிய இவர் மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் பெருமுயற்சிகளுக்கு பின்னர் கி.பி.1939ல் விடுதலை அடைந்தார். விடுதலை பெற்றதும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைந்து பட்டம் பெற்று கி.பி.1940ல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். கி.பி.1943ல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பூரன்சந்த் ஜோஷியை திருமணம் செய்து 2 மகன்களை பெற்றார். கி.பி.1943 வங்காள பஞ்சத்தின் போதும் நிவாரண பணியாளராக பணியாற்றினார். பின்னர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். கி.பி.1979ல் இவருக்கு "வீர் மகிளா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் தனது சுயசரிதையை பெங்காலியில் எழுதினார். அது ஆங்கிலத்தில் "சிட்டகாங் ஆர்மரி ரைடர்ஸ்: ரிமினிசென்ஸ்" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. கி.பி.1995 பிப்ரவரி 8ல் தனது 81வது வயதில் கொல்கத்தாவில் மரணமடைந்தார்.

Comments
Post a Comment