11) ஜல்காரி பாய்

ஜல்காரி பாய் (கி.பி.1830-1858) :

இந்திய சரித்திரத்தில் கிட்டத்தட்ட மறந்து போன பெயர் தான் ஜல்காரி பாய். சரித்திரம் என்றுமே அரசர்களை பற்றி தான் பெருமையாக பேசும். சாமானியர்களும் தங்களது வீர தீரத்தால் சரித்திரத்தில் இடம் பிடிப்பர். அத்தகைய புகழுக்குரியவர் தான் இந்த ஜல்காரி பாய். ஜான்ஸி ராணியின் தோழியாக அவரது பெண்கள் படைப்பிரிவின் தளபதியாக இருந்த பெருமைக்குரியவர் இவரே. 



கி.பி.1830 நவம்பர் 22ல் சடோவா சிங் -  ஜமுனா தேவி தம்பதியருக்கு மகளாக ஜான்ஸிக்கு அருகிலுள்ள போஜ்லா கிராமத்தில் கோலி சமூகத்தில் பிறந்தார். இவர் மேய்ச்சலுக்கு வளர்ப்பு மிருகங்களை காட்டிற்கு ஒட்டி செல்லும் போது தாக்கிய சிறுத்தையை தன் கையில் வைத்திருந்த தடியால் அடித்து கொன்றாராம். இளமை பருவத்தில் தன்னை தாக்க வந்த புலியை தனது கோடாரியால் வெட்டி வீழ்த்தினார். அந்த புலிக்கு தெரியவில்லை இவளும் ஒரு வீரப்புலி என்று. இவர் ராணி லெட்சுமி பாயின் படையில் பணிபுரியும் புரான்சிங் என்பவரை மணந்தார். கணவரின் மூலமே லெட்சுமி பாயின் "துர்கா தளம்" படையில் இணைந்தார். படையில் இணைந்த பின்னர் இவர் குதிரையேற்றம், வாள்வீச்சு மற்றும் ஆயுதங்கள் உபயோகிக்க கற்றுக்கொண்டார்.  இவர் ஜான்ஸி ராணி லெட்சுமி பாயின் பெண்கள் இராணுவத்தில் இணைந்து வெகு விரைவில் தளபதி நிலைக்கு உயர்ந்தார். ராணி லெட்சுமி பாயின் அந்தரங்க தோழியாகவும் ஆலோசகராகவும் ஆனார். இந்த நேரத்தில் தான் சிப்பாய் புரட்சி நாடெங்கும் பரவியது. ஜான்ஸி ராணி தனது இளமைப் பருவ தோழர்களான மராத்திய பேஷ்வா இரண்டாம் நானாசாகிப் மற்றும் அவரின் தளபதியான தாந்தியா தோபே இருவருடன் இணைந்து ஆங்கிலேயரை விரட்ட அணி சேர்ந்தார். ஜான்ஸி ராணியின் படைபலத்தை கண்ட ஆங்கிலேயர்கள் கி.பி.1858ல் ஜெனரல் ஹியூ ரோஸ் தலைமையில் ஜான்ஸியின் மீது படையெடுத்து வந்தனர். ராணி லெட்சுமி பாய் தனது 14000 பேர் கொண்ட படைகளுடன் கல்பியில் முகாமிட்டு இருந்த தாந்தியா தோபே படைகளுடன் இணைந்து கொள்ளுவதற்காக எதிர்பார்த்து இருந்தார்.  ஆனால் ஜெனரல் ஹியூ ரோஸ் ஜான்ஸிக்கு வருவதற்கு முன்பே கல்பியில் இருந்த தாந்தியா தோபே படைகளை முறியடித்து விட்டு தான் ஜான்ஸியை நோக்கி வந்தார். ஆங்கிலேய படைகளின் முற்றுகை போரில் இவரது கணவரான புரான் சிங் போரில் மரணமடைந்தார். இந்த நேரத்தில் ஜான்ஸி கோட்டையில் ஒரு வாசலுக்கு பொறுப்பாக இருந்தவர் ஆங்கிலேய படைகளுக்கு ஆதரவாக ஜான்ஸியின் கோட்டை கதவை திறந்து விட ஆங்கிலேய படை உட்புகுந்தது. கணவர் இறந்தாலும் மனம் தளராது கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்து போரிட்டார். இதனால் ஜல்காரி பாய் ராணியை அவர் குழந்தையுடன் பண்டேரி வாசல் வழியாக குதிரையில் தாவி குதித்து தப்பிக்க ஆலோசனை கூற அவ்வாறே ராணியும் தப்பித்து சென்றார். பின்னர் இவர் ராணியின் உடைகளை அணிந்து ராணி போல ஆங்கிலேய படைகளை ஒரு நாள் முழுவதும் போக்கு காட்டி வீரப்போர் நிகழ்த்தினார். இவரும் ஜான்ஸி ராணி லெட்சுமி பாயும் உருவத்தில் ஒரே மாதிரி இருந்ததால் ஆங்கிலேயர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஜான்ஸி ராணி லெட்சுமி பாய் கல்பியில் தாந்தியா தோபே படைகளுடன் இணைந்து பரோடாவை கைப்பற்ற போனார். ஒரு நாள் முழுவதும் வீரப்போர் புரிந்த ஜல்காரி பாய் போர்களத்தில் கி.பி.1858 ஏப்ரல் 4ல் வீர மரணம் அடைந்தார் என்றும் கூறுகின்றனர். ஆனால் சிலர் ஆங்கிலேய படைகளை இவரை ராணி என்று சிறைபிடித்த ஒரு சில மணி நேரத்திற்கு பிறகே இவர் ராணி லெட்சுமி பாய் அல்ல என்று உணர்ந்து இவரை கொன்று விட்டனர் என்று கூறுகின்றனர்.



இவரது நினைவு நாளான ஏப்ரல் 4யை கோலி சமூக்ததினர் "ஷாஹித் திவாஸ்"  என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர். இந்திய அரசும் இவரது தியாகத்தை மதித்து சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு இவரை பெருமைப்படுத்தியது. இந்திய தொல்பொருள் இலாகா ஜான்ஸி கோட்டையில் உள்ள 5 அடுக்கு மாளிகையான "பாஞ்ச் மஹாலில்" இவரது நினைவாக மியூசியம் அமைத்துள்ளது. கி.பி.2017ல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இவருக்கு போபாலில் அமைக்கப்பட்ட சிலையை திறந்து வைத்தார். கோலி சமூகத்தினர் வழிவழியாக பேசும்‌ சம்பவங்களை கேட்டு கி.பி.1951ல் பி.எல்.வர்மா எழுதிய "ஜான்ஸி கி ராணி" நாவலில் தான் முதன்முதலில் இவரை பற்றிய தகவல்கள் வெளிவந்தது. கி.பி.2019ல் மணிகர்ணிகா திரைப்படத்தில் இவர் ஜான்ஸி ராணியின் தளபதியாக இருந்த நிகழ்வுகளும் விவரிக்கப்பட்டுள்ளது. சரித்திரத்தில் மறக்கடிக்கப்பட்ட வீராங்கனையாக ஆனால் அழுத்தம் திருத்தமாக தனது இருப்பை தன் வீரத்தினாலும் தியாகத்தினாலும் பதிவு செய்துள்ளார் ஜல்காரி பாய்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்