109) சகோதரி நிவேதிதை (எ) மார்க்ரெட் எலிசபெத் நோபெல்
மார்க்ரெட் எலிசபெத் நோபெல் (என்ற) சகோதரி நிவேதிதா (கி.பி.1867-1911) :
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றிலும் ஆன்மீகத்திலும் வெளிநாட்டினரும் தங்களது அரும்பங்கை ஆற்றியுள்ளார்கள். அயர்லாந்து நாட்டில் பிறந்து விவுகானந்தரின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டு இராமகிருஷ்ண மிஷினில் தங்கி ஆன்மீகமும் பின்னர் தவிர்க்க முடியாத அளவுக்கு சுதந்திர போராட்ட களத்திலும் ஈடுபட்டவர் தான் சகோதரி நிவேதிதை.
மார்க்கெரட் எலிசபெத் நோபெல் என்ற இயற்பெயருடைய இவர் கி.பி.1867 அக்டோபர் 28ல் அயர்லாந்தில் டங்கனான் நகரில் மேரி இசபெல் மற்றும் சாமுவேல் ரிச்மண்ட் நோபெல் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். தம்பதியருக்கு மொத்தம் 6 குழந்தைகள் பிறந்தாலும் இவருடன் மொத்தம் 3 பேர் மட்டுமே பிழைத்தனர். இவருக்கு ஒரு வயதாக இருக்கும்போது இவரது தந்தை இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். இவர் தாய் வழி தாத்தாவுடன் அயர்லாந்தில் வாழ்ந்து வந்தார். பின்னர் 4 வயதில் பெற்றோருடன் இங்கிலாந்தில் வசிக்க தொடங்கினார். இவருக்கு 10 வயதாக இருக்கும்போது இவரது தந்தை இறந்ததால் இவரது தாய் இவர் மற்றும் சகோதரர்களுடன் அயர்லாந்துக்கு திரும்பினார். இவரது தாயார் மேரி இலண்டனில் மழலையர் பள்ளியில் ஆசிரியரானார். இவர் ஹாலிஃபாக்ஸ் கல்லூரியில் பாடம் படித்து பட்டம் பெற்றார். பின்னர் கி.பி.1884ல் தனது 17வது வயதில் கெஸ்விக்கில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். கி.பி.1886ல் ரக்பியில் ஒரு அநாதை இல்லத்தில் ஆசிரியராக பாடம் நடத்த சென்றார். கி.பி.1887ல் நார்த் வேல்ஸில் உள்ள ரெக்ஸ்ஹாமில் நிலக்கரி சுரங்கத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நேரத்தில் அவருக்கு ஒரு இளைஞருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்னர் அந்த இளைஞர் மரணமடைந்தால் அதன் பின்னர் இவர் திருமணத்தை பற்றி நினைக்கவில்லை. பின்னர் கி.பி.1889ல் இவர் செஸ்டருக்கு இடம்பெயர்ந்த சமயத்தில் லிவர்பூலில் இவரது சகோதரி மே மற்றும் சகோதரர் ரிச்மண்ட் ஆகியோர் வசித்து வந்தனர். விரைவில் இவரது தாயும் வந்து சேர குடும்பத்தினர் ஒன்றாக இணைந்தனர்.
பின்னர் இவர் கல்வித்துறையில் தனது படிப்பை தொடர்ந்தார். புதிய கல்வி முறையான விளையாட்டு, கல்வி, உடற்பயிற்சி, கவனிப்பு ஆகியவை கொண்டது இங்கிலாந்து முழுவதும் நடைமுறைக்கு வர ஆரம்பித்தது. கி.பி.1891ல் இவர் விம்பிள்டனுக்கு குடியேறினார். இலண்டனில் புதிய பள்ளியை துவக்கி திரும்பி டி லியூக்கு இவர் உதவினார். பின்னர் கி.பி.1892ல் கிங்க்ஸ்லிமேட்டில் இவர் புதிய பள்ளியை துவங்கினார். அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கட்டுபாடுகள் இல்லாமல் விளையாட்டின் மூலமே கல்வியை கற்றனர். இந்த நேரத்தில் இவர் பத்திரிக்கைகளில் எழுதவும் மேடைகளில் பேச்சாளராகவும் மிளிர ஆரம்பித்தார். இதனால் இலண்டனில் கற்றறிந்தவர்கள் மத்தியில் இவர் பெயர் பிரபலமாக விளங்கியது. கி.பி.1892ல் பாராளுமன்றத்தில் அயர்லாந்தின் சுயாட்சி விஷயமாக சட்டம் பேச்சுக்கு வந்தபோது இவர் பொதுவெளியில் அயர்லாந்தின் ஹோம் ரூல் இயக்கத்திற்கு ஆதரவாக பேசினார்.
கி.பி.1895ல் இலண்டன் வந்திருந்த விவேகானந்தரை சந்தித்து பேசினார். முதல்முறை சந்திப்பில் விவேகானந்தர் அவரை ஈர்த்தாலும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது. பின்னர் மீண்டும் இங்கிலாந்து வந்திருந்த போது அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்தார். இந்த நேரத்தில் விவேகானந்தர் இந்திய பெண்களின் கல்வி மேம்பாட்டை பற்றிய திட்டங்களுக்கு உதவ முடியுமா என்று கேட்க அதையே அழைப்பாக ஏற்று கி.பி.1898 ஜனவரி 28ல் இந்தியா வந்து சேர்ந்தார். அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த கூட்டத்தில் விவேகானந்தர் இவரை "நம்முடைய பணிக்காக இங்கிலாந்து அளித்த கொடை" என்று அறிமுகம் செய்து வைத்தார். அவரே இவருக்கு நிவேதிதை என்று பெயரிட்டார். பின்னர் மார்ச் 17ல் அன்னை சாரதா தேவியை சந்தித்து பேசினார். பின்னர் விவேகானந்தருடன் இந்தியாவின் பல பகுதிகளுக்கு சுற்றிய போது அந்த இடங்களின் வரலாறு, கலை மற்றும் பண்பாட்டு விவரங்களை விவேகானந்தர் விவரித்தார். அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசித்தனர். இவர் பெண் குழந்தைகளுக்கு ஆரம்பித்த பள்ளியை அன்னை சாரதா தேவி திறந்து வைத்தார். வயதில் மூத்தவர்களுக்கும் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். அன்னை சாரதா தேவி இவரை "மகளே" என்று தான் எப்போதும் அன்புடன் அழைப்பார். அன்னையுடன் உரையாடுவதற்காக இவர் வங்க மொழியை கற்று தேர்ந்தார். நிறைய நூல்கள் ஆங்கிலத்தில் எழுதினார். விவேகானந்தருடன் அமெரிக்கா பயணம் செய்து நிறைய சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். கபப்லில் நிறைய விவாதங்கள் செய்தாலும் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆன்மீகத்தை விட்டு வெளியேறிடலாமா என்று யோசிப்பதாக கூற விவேகானந்தர் இவரை தியானம் பழக பழக மனம் அமைதியாகிடும் என்று கூறினார். ஆங்கிலேயர்கள் இந்த தேசத்தை எவ்வாறு பாழ்படுத்தியுள்ளனர் என்றும் சுவாமி விவேகானந்தர் போற்றியது இந்த தேசத்தையே என்றும் உணர்ந்து கொண்டார். பின்னர் விவேகானந்தர் மறைவு இவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அதன் பின்னர் இராமகிருஷ்ண மிஷனின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் பின்னர் தனது விடுதலை போராட்டத்தினால் மடத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று உணர்ந்து பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைத்து விட்டு இந்திய நாட்டின் விடுதலைக்கு பாடுபட உறுதி பூண்டார்.
பின்னர் இவர் வந்தே மாதரம் முழக்கத்தோடு போராட்ட களத்தில் இறங்கினார். திலகர், அரவிந்தர், கோகலே, விபின் சந்திரபால், காந்தி, ராஷ் பீகாரி போஸ், தாகூர் மற்றும் ஜதீன் சந்திர போஸ் ஆகிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாரதமே எனது தாய்நாடு என்று உறுதி பூண்டு விடுதலை களத்தில் இறங்கிய சகோதரி நிவேதிதையை கண்டு அரசாங்கம் திகைத்தது. காங்கிரஸில் உள்ள தீவிரவாதம் கொண்ட தலைவர்கள் இவரின் முழக்கத்தினால் இன்னும் வெகுண்டு எழ இவர் உந்துசக்தியாக இருந்தார். கி.பி.1906ல் பாரதியார் இவரை சந்தித்தார். இவரை குருமணி என்று புகழ்ந்த பாரதியார் தனது "சுதேச கீதங்கள்" நூலை இவருக்கு அர்ப்பணித்தார். இவரது சந்திப்புக்கு பின்னர் தான் பாரதியின் பெண் விடுதலை கருத்துக்கள் இன்னும் வீறிட்டு எழுந்தது. பின்னரும் தனது உடல்நிலையை கவனிக்காமல் போராட்ட களத்தில் தீவிரமாக ஈடுபட்டவரை மலேரியா தாக்கியது. அதிலிருந்து அவர் உடல் மீண்டும் நலம் பெறவேயில்லை. இனி நான் கல்கத்தா திரும்புவது சாத்தியமல்ல என்று தன் நிலையை உணர்ந்தவர் டார்ஜிலிங்கில் தங்கியவர் கி.பி.1911 அக்டோபர் 13ல் மறைந்தார். இந்தியாவில் ஆன்மீக தேடலுக்கு வந்து பெண் கல்வியும் பெண் சுந்திரத்திற்கும் பாடுபட்டு இந்தியாவே எனது நாடு என்றும் எனது தேசமே எனது தெய்வம் என்று முழக்கத்தோடு இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்டவர் கல்லறையில் "இந்தியாவுக்காக அனைத்தையும் வழங்கிய சகோதரி இங்கே இருக்கிறார்" என்ற பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் நிச்சயமாக பொன்னெழத்துக்களே.



Comments
Post a Comment