110) இராணி இராஷ்மோனி
இராணி இராஷ்மோனி (கி.பி.1793 - 1861) :
லோகமாதா ராணி ராஷ்மோனி என்ற பெயரால் வங்காள மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் உண்மையிலையே செல்வந்தராக இருந்தாலும் ஊருக்கு உதவும் தயாள குணமுடையவராக இருந்தார். கொல்கத்தாவின் தக்னேஷ்வரர் காளி கோயிலை தனது பொருளுதவியால் கட்டியவர். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் கோயிலுக்கு பூஜை செய்ய பிராமணர்கள் வர மறுத்தபோது தயங்காமல் புதிய பூசாரியை வரவழைத்து தினமும் கோயிலுக்கு பூஜைகள் நடத்தினார்.
இவர் கி.பி.1693 செப்டம்பர் 28ல் மேற்கு வங்காளத்திலுள்ள ஹலிசாஹர் நகரத்தில் மீனவர் குடும்பத்தில் பிறந்தார். வறுமை நிலையில் இருந்த இவரது தந்தை ஏற்கனவே மனைவியை இழந்த கொல்கத்தாவை சேர்ந்த வணிகரான ராஜ்சந்திரா தாஸ் என்பவருக்கு இவரது இள வயதிலையே திருமணம் செய்து வைத்தார். கணவருக்கு இவரை விட வயது அதிகம் வேறு. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்கள் பிறந்தனர். அந்த காலத்தில் பெண்கள் அடுப்பங்கரையை விட்டு வெளியே வராமல் இருந்த காலமாக இருந்தாலும் இவரது கணவர் சற்று முற்போக்கு சிந்தனை உடையவராக இருந்தார். அதனால் இவரை தன் தொழிலில் கணக்கு வழக்குகளை கவனிக்க இவரை பழக்கினார். தொழிலை நன்கு கவனித்து கொண்டதால் தம்பதிகளின் வருமானம் பெருகிற்று. இதனால் வருமானம் குறைந்திருந்த ஜமீன்தார்களுக்கு கடன் கொடுத்து உதவினர். உள்ளூர் மக்களுக்கும் தான தர்மங்கள் செய்து உதவினர். இதற்கிடையில் இவரது கணவர் கி.பி.1830ல் மறையவே தனது 37வது வயதில் இவர் விதவையானார். இந்த நேரத்தில் தனது கணவரின் தொழிலை ஏற்று நடத்தி மென்மேலும் செல்வம் சேர்த்தார். சேர்த்த செல்வத்தை ஏழைகளுக்கும் கோயில் காரியங்களுக்கும் நன்கொடையாக அளித்தார். இவரது கணவரின் நண்பர் தான் உடன்கட்டை பிரச்சினையை ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன் ராய் என்பவர். இவரது கணவரின் எண்ணங்களுக்கு ஏற்ப பெண்கள் உரிமை சதி குழந்தை திருமணம் பலதார திருமணம் ஆகியவற்றிற்கு எதிராக போராடினார். அவருடன் இணைந்து கிழக்கிந்திய கம்பெனியிடம் வரைவை கொடுத்து சட்டமாக்க முயன்றார். பாபு காட், யெலியகட்டா கால்வாய் உருவாக்கல், குடிநீர் தேக்கங்கள், முதியோர் இல்லங்கள், நகரின் பல பகுதிகளை இணைக்கும் சாலைகள் ஆகியவை இவரின் நிதியுதவியால் நடந்தது.
கி.பி.1847ல் லண்டன் செல்வதற்காக இன்னொரு ஜமீன்தாரான துவாரகா நாத் தாகூர் இவரிடம் கடன் பெற்றார். அதற்காக சுந்தர்பான் சதுப்புநில பகுதியை இவரிடம் அடமானம் வைத்தார். அந்த பகுதி சமூக விரோதிகள் ஒளிந்து கொள்ளும் இடமாக இருந்தது. அதை மாற்ற விரும்பிய இவர் அவர்களிடம் பேசி நீர்நிலைகளில் மீன்கள் வளர்க்க உதவினார். பின்னர் மெல்ல இவர்கள் தங்களது இழிதொழிலை கைவிட்டு மீனவர்களாக மாறினர். சுந்தர்பான் பகுதியும் சிறந்த மீன்பிடி பகுதியாக உருமாறியது. ஹூக்ளி ஆற்றில் பிரிட்டிஷ் நீராவி கப்பல்களால் இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் அதை குத்தகைக்கு எடுத்து அதை மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையை வழங்கினார். இன்றும் ஹூக்ளி நதியில் பல காட்கள் இவரது குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளது. இவர் இம்பீரியல் லைப்ரரி (தற்போது இந்திய தேசிய நூலகம்) மற்றும் இந்து கல்லூரி (தற்போது பிரெசிடென்சி கல்லூரி) ஆகியவற்றிற்கு நிறைய நன்கொடை வழங்கினார்.
கி.பி.1847ல் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி கொல்கத்தாவின் பிரபலமான தக்னேஷ்வரர் காளி கோயிலை கட்ட ஆரம்பித்தார். 8 வருடங்களில் கோயில் கட்டி முடித்து கி.பி.1855ல் திறக்கப்பட்ட கோயிலுக்கு பூஜைகள் செய்ய உள்ளூர் பிராமணர்கள் மறுத்து விட்டனர். இவர் பிறப்பால் மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால். பின்னர் இவர் தனது நலம் விரும்பிகளை கலந்து ஆலோசித்து ஒரு பிராமணரான ராம்குமார் சட்டோபாத்யாய் என்பவரிடம் வருடாந்திர பராமரிப்பு தொகையுடன் கோயிலை கவனிக்க பணித்தார். பின்னர் அவர் மறையவே அவரது சகோதரரான கதாதர் சட்டோபாத்யாய் (இராமகிருஷ்ண பரமஹம்சர்) அந்த பொறுப்புக்கு வந்தார். தலைமை அர்ச்சகராக இருந்ததால் ராணி ராஷ்மோனியின் ஆன்மீக அக்கறை மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை மற்றும் சேவைகளின் காரணமாக இராமகிருஷ்ண பரமஹம்சர் இவரை கிருஷ்ணரின் அஷ்டசாகிகளில் (ஆன்மீக தோழர்கள்) ஒருவராக இவரை கருதினார்.
இவர் கி.பி.1861 பிப்ரவரி 19ம் தேதி தனது 67வது வயதில் கொல்கத்தாவில் மறைந்தார். தனது சேவைகளினாலும் ஆன்மீக அக்கறையினாலும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக போராடியதாலும் தனது தாராள தயாள குணத்தினாலும் கொல்கத்தா மக்களிடையே மிகுந்த புகழ்வாய்ந்தவராக இருந்த இவரை இந்திய அரசு கி.பி.1994ல் சிறப்பு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்தது.



Comments
Post a Comment