111) கார்வாலின் இராணி கர்ணாவதி

கார்வாலின் இராணி கர்ணாவதி (நக்தி - ராணி) :


இந்திய வரலாற்றில் மொகலாயர்களின் படையெடுப்பை எதிர்த்து நின்று போராடிய அவர்களை வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல் அவர்களின் மூக்குகளை அறுத்து அவமானப்படுத்தி அனுப்பிய இவர் வரலாற்றில் நக்தி ராணி (நக்-கடி ராணி) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்திய வரலாற்றில் அதிகம் அறியப்படாத கதையான இது பெர்னியர், நிக்காலோ மனுச்சி மற்றும் டாவர்னியர் ஆகியோரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கில் இமயமலை பகுதியில் சிவாலிக் மலைத்தொடரில் இன்றைய உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்த இராஜ்‌‌ஜியம் தான் கார்வால் பிரதேசம். மலைப்பாங்கான நிலப்பரப்பு என்பதால் இந்த இராஜ்ஜியம் மிகப்பெரிய தற்காப்பு அரணுடன் விளங்கியது. ஷாஜஹான் காலத்தில் கார்வால் பிரதேசத்தின் தலைநகராக ரிஷிகேஷிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலக்நந்தாவிலுள்ள ஶ்ரீநகர் இருந்தது. சமவெளிகளிலிருந்து இந்த இராஜ்ஜியங்கள் மீது படையெடுப்புகள் இல்லாவிட்டாலும் உள்ளூரில் ஆட்சியாளர்களான கார்வாலுடன் பக்கத்து இராஜ்ஜியங்களான குமாவோன், சிர்மெளர் மற்றும் திபெத்  ஆகியவற்றுடன் அடிக்கடி சண்டைகள் நடந்தது. கர்ணாவதியின் கணவரான மஹிபத் ஷா கி.பி.1622ல் அரியணை ஏறினார்.  இவர் மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டார். மற்ற அனைவரையும் சற்று கீழாக தான் கருதுபவர். கி.பி.1624ல் 12000 வீரர்களுடன் தேவையற்ற பனிப்பொழிவு காலத்தில் திபெத்தை தாக்கி பின்வாங்கினார். கி.பி.1628ல் ஷாஜஹான் பதவியேற்பின் போது அனைத்து அரசர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட போது தன்னை நிலப்பிரபுவாக கருதி அழைப்பு விடுக்கப்பட்டதாக தூதரிடம் கடுமையாக கூறினார். இடைவிடாத அண்டை நாடுகளுடன் உடனான போரில் கி.பி.1631ல் இவர் குமாவோன் இராஜ்ஜியத்துடன் நடந்த போரில் இறந்து போனார். இந்த நேரத்தில் இவர் மகனான பிருத்விபத் ஷா 7 வயது சிறுவனாக இருந்ததால் இவரது மனைவியான ராணி கர்ணாவதி அவரின் ரீஜெண்ட்டாக பதவியேற்றார். அண்டை நாடுகளுடன் வலுக்கட்டாயமாக சண்டையில் ஈடுபடாமல் தற்காப்பு போர்களில் மட்டும் ஈடுபட்டார். நீர்பாசனங்களில் அதிகம் கவனம் செலுத்தினார்.குளங்கள், கால்வாய்கள் இவர் ஆட்சியில் வெட்டப்பட்டது. டேராடூனின் ராஜ்பூர் கால்வாய் இவர் காலத்தில் கட்டப்பட்டது தான். டேராடூனில் கரன்பூர் என்ற கிராமத்தையும் உருவாக்கினார்.

கி.பி.1638ல் குமாவோனின் அரசராக பாஸ் பகதூர் சந்த் அரியணை ஏறினார். அவர் கார்வாலை பலமுறை தாக்கி வெற்றியடையவில்லை. அதனால் காங்க்ராவின் மொகலாய ஆளுநரான நஜ்பத் கானை கார்வாலின் மீது படையெடுக்க வலியுறுத்த அவரும் ஷாஜஹானிடம் பெண் ஆளும் தேசம் என்பதால் எளிதில் வெற்றி பெறலாம் என்று கூறி அருகிலுள்ள சிர்மெளர் அரசரின் படைகளுடன் 30000 பேர் கார்வால் மீது படையெடுத்தனர். இராணி கர்ணாவதி மொகலாய படைகளை மலைகளுக்குள் ஊடுருவ அனுமதித்து குறிப்பிட்ட தூரத்தை அடைந்தவுடன் வழிகளை அடைத்து வைத்து அவர்கள் முன்னேறுவோ பின்வாங்கவோ முடியாத அளவுக்கு மொகலாய படைகளை சிக்க வைத்தார். உணவு பொருட்கள் வேறு பற்றாக்குறை இருந்தது. இதனால் மொகலாய படைகள் பின்வாங்க முடிவு செய்தாலும் அவர்கள் ராணியிடம் சரணடைவதை தவிர வேறு வழியின்றி போயிற்று. ராணி கர்ணாவதி அவர்களின் உயிரை எடுக்காமல் மூக்கை மட்டும் வெட்டி அவர்களை உயிருடன் அனுப்பி வைத்தார். மூக்கை வெட்டுவது என்பது ஒருவரை அவமானப்படுத்துவது என்பதால் இந்தியாவில் பழங்காலத்திலிருந்து அது தண்டனையாக கருதப்பட்டது. அரசவைக்கு திரும்பும் வழியில் இந்த தோல்வியால் அவமானப்பட்ட நஜ்பத் கான் தற்கொலை செய்து கொண்டார். இதன் பின்னர் ஷாஜஹான் இந்த இராஜ்ஜியத்தின் மீது இரண்டு முறை போர் தொடுத்தும் வெற்றியடைய முடியாமல் திரும்பினார். இந்த ராணியை "நாக்டிராணி (மூக்குவெட்டு ராணி) " என்ற பெயரில் அழைக்க உத்தரவிட்டார். பின்னர் இவரது மகனான பிருவித்பத் ஷா கி.பி‌.1640ல் உரிய வயது வந்ததும் அரியணை ஏறினார். அவரது ஆட்சியிலும் மோதல்கள் நடந்தாலும் அவரது மகனான மேதினி ராயை மொகலாய அரண்மனைக்கு அனுப்பிய ஷா‌ஹானின் மகனான தாராஷீக்கோ மற்றும் மகள் ஜஹனாரா பேகத்துடன் நட்பு கொண்டார். இந்த நட்பினால் தான் கி.பி.1658ல் ஒளரங்கசீப் துரத்தும் போது தாராவின் மகனான சுலைமான் ஷீகோ கார்வால் ராஜ்ஜியத்தில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். ஓளரங்கசீப்பாலும் இந்த இராஜ்ஜியத்தை கடைசிவரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நக்டிராணியின் வீரம் மற்றும் புத்திசாலித்தனம் மட்டுமே கார்வாலை காத்தது மட்டுமில்லாமல் கார்வாலின் இயற்கையரணை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தி முடிந்தது. வரலாற்றின் பக்கங்களில் ஏதோ ஒரு மூலையில் மொகலாய காலத்து சரித்திர ஆய்வாளர்களால் மட்டுமே இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்