112) சுதா மாதவ் ஜோஷி

சுதா மாதவ் ஜோஷி (சுதாதை ஜோஷி) (கி.பி.1918-???)


குடும்ப தலைவியாக இருந்தாலும் இந்திய விடுதலை போராட்டத்தில் தனது பங்களிப்பை ஆற்றியவர்கள் பலர். அவர்களுள் இவர் சற்று வித்தியாசப்பட்டவர். இந்திய சுதந்திரம் அடைந்தும் கோவா போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடையவில்லை. அங்குள்ள கோவா மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினர். அவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றவர் தான் இந்த சுதா மாதவ் ஜோஷி என்ற சுதாதை (சுதா அத்தை) ஜோஷி என்று அழைக்கப்படுபவர்.

இவர் கி.பி.1918ல் கோவாவில் உள்ள பிரியோல் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது 13வது வயதில் ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியை இழந்த மகாதேவ் சாஸ்திரி ஜோஷிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவரது கணவர் பாரதிய சமஸ்கிருதி பண்டிட். இவரது கணவர் தனது சுயசரிதை நூலான "ஆத்மபுரான்" நூலில் தனது மனைவியின் கோவா விடுதலை போராட்டத்தின் பங்கை பற்றி விவரித்துள்ளார். கணவரின் வீட்டில் அவரது மாமியார் மற்றும் கணவரின் இரண்டு மாற்றாந்தாய்களையும் இவர் கவனிக்க நேர்ந்தது. இவர் ஆரம்ப கல்வியுடன் படிப்பை நிறுத்தியிருந்தாலும் கணவரின் வீட்டில் இருந்த புத்தகங்களின் மூலம் நிறைய படித்தார். இவருக்கு கணவரின் ஒத்துழைப்பு மிகவும் இருந்தது. இவரது கணவர் தடை செய்யப்பட்ட கோவா காங்கிரஸின் உறுப்பினர் மட்டுமல்லாது சத்தியாகிரக போராட்ட உறுப்பினர் என்பதாலும் சுதாதையையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.

 கி.பி.1950களில்  இவர்கள் பூனேவில் வசித்து வந்துள்ளனர். தனது தாய் வீடாக கோவா இருந்ததால் மகாதேவ் சாஸ்திரி கோவாவின் விடுதலை போராட்டத்தில் ஆர்வமாக இருந்தார். கோவா காங்கிரஸின் பூனே கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதைய கோவா காங்கிரஸ் தலைவர் பீட்டர் ஆல்வாரேஸூடன் இணைந்து கி.பி.1955ம் ஆண்டு ஜனவரி 26ல் போர்த்துகீசிய ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அந்த நேரத்தில் மகாதேவ் சாஸ்திரிக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை நடந்ததால் அவருக்கு பதிலாக இவரே களத்தில் இறங்க முடிவு செய்தார். மகாதேவ் சாஸ்திரியால் இவரை தடுக்க முடியாமல் போனது. பீட்டர் ஆல்வாரேஸ் இந்த முடிவால் மனம் மகிழ்ந்து சுதாதை ஜோஷியை கோவா காங்கிரஸ் தலைவராக்கினார். கி.பி.1955ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி கோவாவிலுள்ள மபுசாவில் சுதாதை ஜோஷி தலைமையில் சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேச சுதாதையை வரவிடாமல் அதிகாரிகள் வழிகளை அடைத்தனர். ஆனாலும் அவர் சுற்றி வளைத்து வந்து மபுசாவில் வந்து கூட்டத்தில் உரையாற்றினார். இவரின் முன்னால் துப்பாக்கியை நீட்டி கையில் வைத்திருந்த உரையை பிடுங்கினர்.  அந்த நேரத்தில் கூட்டத்திலிருந்து இவரது சகோதரி ஆஷாதாயி ‌ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துடன் இந்திய தேசிய கொடியை ஏற்றினார். அவரை போர்த்துகீசிய காவல்துறை கொடூரமாக தாக்கியது.  சுதாதை ஜோஷி சிறையில் அடைக்கப்பட்ட 6 மாதங்களில் நீதிமன்ற வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி சுதாதையிடம் "ஏன் கோவா இந்தியாவின் பகுதியாக இருக்க வேண்டும் என்று ஏன் விரும்புகீறீர்கள்" என்று கேட்க சுதாதை ஜோஷி "பல நூற்றாண்டுகளாக கோவா இந்தியாவின் ஒரு பகுதி. அதை நீங்கள் தான் பிரிவினை செய்தீர்கள். நீங்கள் இந்த மண்ணிலிருந்து அகற்றப்பட்டால் இது தானாகவே இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்" என்று முழங்கினார். நீதிபதி இவரை மன்னிப்பு கேட்டு கோவாவுக்கு திரும்ப வரமாட்டேன் என்று உறுதியளிக்க கூறினார். ஆனால் இவர் நான் ஏன் கோவாவில் கால் வைக்கக்கூடாது. இது என் தாய்நாடு. என் குடும்பத்தை பற்றி கவலைப்பட என் கணவர் இருக்கிறார். நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று முழங்கினார். இதனால் நீதிபதி இவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஆனாலும் சிறையில் ஆர்பாட்டக்காரர்களை அரசியல் கைதியாக நடத்த வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இந்திய பார்லிமென்ட்டில் இவரை பற்றி விவாதம் எழுந்தது. நேரு எகிப்து அதிகாரிகளை அனுப்பி கோவா சிறையில் இருந்த இவருடன் தொடர்பு கொண்டு இவரின் மீட்புகளை முன்னெடுத்தார். நேருவின் இந்திய அரசாங்கம் மற்றும் பிற அமைப்புகள் கொடுத்த நெருக்கடியினால் இவர் 4 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்து கி.பி.1959ல் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்தியா கோவாவை தனது நடவடிக்கையின் மூலம் தன்னுடன் இணைத்தது. கோவா இணைப்பிற்கு பின்னர் இவர் தனது குடும்ப வாழ்வுக்கு திரும்பினார். கோவாவை இந்தியாவுடன் இணைக்கும் போராட்டத்தில் காந்திய வழியை வீரத்துடன் துணிவுடன் அஞ்சாமை உணர்வுடன்  போராட்டம் நடத்திய மறக்கமுடியாத பெண்மணிகளுள் ஒருவராக இடம் பிடித்தார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்