114) இராணி பாய்

இராணி பாய் ( ‌??? - 1714) :


இந்திய வரலாற்றில் கற்பு நெறி தியாகம் ஆகியவற்றால் புகழ்பெற்ற பெண்மணிகளுள் இவரும் ஒருவர். இவர் ராஜா தேசிங்குவின் மனைவி. இன்றைய இராணி பேட்டை நகரம் இவரது நினைவாக இவரது பெயரை தான் தாங்கி நிற்கிறது.

கி.பி. 1698 செஞ்சியை மொகலாய தளபதி ஜூல்பிர்கான் பிடித்த நிகழ்வில் மிகுந்த வீரம் காட்டியவர் பொந்தில் வம்சத்து ராஜபுத்திரரான பண்டல்கண்ட்டின் தலைவரான சொரூப்சிங். மொகலாயப் படைகளின் குதிரைப்படைகளின் படைத்தலைவராக இருந்த இவரையே கி.பி. 1698ல் செஞ்சியின் ஜாகிர்தாராக்கி அவரிடம் ஓளரங்கசீப் ஆட்சியை ஒப்படைத்தார். ஓளரங்கசீப் மறைவிற்குப் பின்னர் டெல்லியை ஷா ஆலம் (அஸம் ஷா) ஆண்டார். அவர் வாங்கிய புதிய முரட்டு குதிரையை யாரும் அடக்க முடியாததால் குதிரை நிபுணரான சொரூப் சிங்கை டெல்லிக்கு வரவழைத்தார். அவருடன் அவரது மகனான தேஜ் சிங்கையும் அழைத்து சென்றிருந்தார். சொரூப் சிங்காலும் அந்த குதிரையை அடக்க முடியவில்லை. தேசிங்கு ராஜா தனக்கு குதிரையை அடக்க ஒரு வாய்ப்பு அளிக்க கோரி சுல்தானிடம் கேட்டார். சுல்தானும் அப்படியே நடக்கட்டும் என்று கூற அனைவரும் வியக்கும் வண்ணம் பரிகாரி என்ற பெயருடைய அக்குதிரையை அடக்கி சவாரி செய்து காட்டினார். தேஜ் சிங்கின் வீரத்தைப் பாராட்டி அந்த குதிரையை அவருக்கே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். அப்படி தேஜ் சிங் மணம் புரிந்த மனைவியின் பெயர்தான் ராணி பாய்.

செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். மிகப்பழமை வாய்ந்த சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயத்தின் தெய்வமான அரங்கன் தான் ராஜா தேசிங்கு வழிபட்ட தெய்வம். ராஜா தேசிங்கு எந்த வேலையோ போருக்கு சென்றாலும் அந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு உத்தரவு பெற்றபின் தான் செய்வாராம். செஞ்சிகோட்டை அரண்மனையிலிருந்து அந்த கோயிலுக்கு செல்ல சுரங்கப்பாதையும் உண்டு. 

இவரது தந்தை சொரூப் சிங் மறைந்தவுடன் இவர் அடுத்த அரசராக பட்டமேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் சொரூப் சிங் 70 லட்சம் திறைப்பணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால் டெல்லி பாதுஷாவின் தளபதியான ஆற்காடு நவாப் இவர் பதவியேற்பதை எதிர்த்தார். உரிமையை விட்டுக்கொடுக்காமல் ராஜா தேஜ் சிங் பதவியேற்றார். இதற்கு அவரது  நண்பரான முகமது கான் ஆதரவாக இருந்தார்.  கப்பத்தொகையை கேட்டபோது முடியாது என்று கூறியதால் நவாப் போர் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். இந்த நேரத்தில் ராஜா தேஜ் சிங்கின் தளபதியான முகமது கான் தனது திருமணத்திற்காக வழுதாவூர் சென்றிருந்தார். இந்த நேரத்தில் செஞ்சியை கைப்பற்ற நல்ல வாய்ப்பு என்று நவாப் படையெடுக்க நண்பனுக்கு உதவ தன் திருமணத்தை நிறுத்தி விட்டு வந்து தளபதியாக போரிட்டு வென்று திரும்பும்போது மறைந்திருந்த ஒருவனால் குறுவாளால் குத்தி கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டு ராஜா தேஜ் சிங் ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த அரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது இன்று போருக்குச் செல்ல வேண்டாம் நாளை செல் என்று கூறினாராம். தேசிங்கு எதிரியின் படைகள் எல்லையை அடைந்து விட்டது முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் இன்று சொல்லட்டுமா என்று கேட்க அதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் இந்த கோயிலில் அரங்கநாதர் முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். போர்களத்தில் பீரங்கி குண்டுகள் மழையாய் பொழிய ராஜா தேஜ் சிங்கின் குதிரையாக நீலவேணி குதிரை கால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டது.  சுபாங்கி துரை என்பவன் மறைந்திருந்து சுட்டதில் ராஜா தேசிங்கு வீரமரணம் அடைந்தார். இவர் மரணம் அடைந்த நாள் கி.பி.1714 அக்டோபர் 3ம் தேதி. கணவனின் வீரமரணம் அறிந்த அவர் மனைவி ராணி பாய்யும் உடன்கட்டை ஏறி உயிரை விட்டாள். வீர மரணம் அடைந்த ராஜா தேஜ் சிங்கின் உடலை ஆற்காடு நவாப் சதயத் உல்லாகான் செஞ்சிக்கு கொண்டு வந்து அரசு மரியாதையுடன் நீலாம்பூண்டி கிராமத்தில் அடக்கம் செய்தார்.   தேசிங்கு ராஜனின் சமாதியும் அவனது படைத் தலைவன் முகமது கானின் சமாதியும் இருக்கின்ற இடத்தில் கூடவே அவனது உயிருக்குயிராக நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் உள்ளது. பாலாற்றின் கரையில் பளிங்கு கற்களால் ராஜா தேசிங்கு மற்றும் அவரின் மனைவியான ராணி பாய்க்கும் நினைவு சின்னம் அமைத்தார்.


கற்பு நெறிக்காக உடன்கட்டை ஏறி உயிர்விட்ட ராணி பாயின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட ஊருக்கு "ராணிபேட்" என்று பெயரிடப்பட்டு இன்று அது ராணிப்பேட்டை என்று அழைக்கப்படும் தொழில் நகரமாக உள்ளது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்