115) பசந்தி தேவி

பசந்தி தேவி (கி.பி.1880-1974) :


இந்திய சுதந்திர போராட்ட களத்தில் கணவரின் வழியை பின்பற்றி நாட்டின் விடுதலைக்காக போராடிய பெண்களுள் இவரும் ஒருவர். இவரது கணவரான சித்தரஞ்சன் தாஸின் கொள்கைகளுக்காக அவருடன் இணைந்து போராடியும் அவரின் மரணத்திற்கு பிறகும் அவரின் வழியே தொடர்ந்து பயணித்தவர் இவர். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இவரை தனது வளர்ப்பு தாயாகவும் தனது வாழ்வில் மரியாதைக்குரிய 4 பெண்மணிகளுள் இவரும் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ள அளவுக்கு தியாகமும் கொள்கையும் ஒருங்கே கொண்டவர்.

கி.பி.1880 மார்ச் 23ல் கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தையான பரத்நாத் ஹல்தார் அஸ்ஸாமில் ஒரு ஜமீன்தாருக்கு திவானாக பணிபுரிந்தார். இவர் கொல்கத்தாவிலுள்ள லொரோட்டா ஹவுஸில் படித்தார். தனது 17வது வயதில் சித்தரஞ்சன் தாஸை சந்தித்து அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த 4 வருடங்களில் தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் பிறந்தனர்.


இவர் தனது கணவரின் வழியில் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கிலாபத் இயக்க போராட்டங்களில் கலந்து கொண்டார். கி.பி.1920ல் நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார். பெண் ஆர்வலர்களுக்கு பயிற்சி மையமாக "நாரி கர்மா மந்திர்"யை ஆரம்பித்தார். பால கங்காதர திலகரின் "திலக் ஸ்வராஜ்" திட்டத்திற்கு நிதி திரட்டுதலில் பெரும்பங்கு வகித்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது கொல்கத்தாவில் காங்கிரஸ் அன்னிய துணிகளுக்கு மாற்றாக கதர் துணிகளை அணிய வலியுறுத்தியது. இவர் 5 தன்னாரவலர்களுடன் சேர்ந்து மக்களுக்கு கதர் ராட்டை சுற்றவும் கைத்தறி நெசவு செய்யவும் மக்களுக்கு பயிற்சியும் கதர் ஆடைகளை விற்கவும் செய்தார். பிரிட்டிஷ் அரசின் எதிர்ப்பை மீறி இவர் கதர் துணிகளை விற்றதால் கைது செய்யப்பட்டு இரவில் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் இவரின் கைது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரின் கைது பலருக்கும் ஒரு உத்வேகத்தை அளித்தது. சுதந்திர போராட்டத்தில் மக்கள் சாரிசாரியாக போராடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கி.பி.1921 டிசம்பரில் சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தாஸ் கைது செய்யப்பட்ட பிறகு பசந்தி தேவி அவர் நடத்தி வந்த "பங்களா கதா" வார இதழுக்கு பொறுப்பேற்றார். கி.பி.1921-22ல் வங்காள மாகாண காங்கிரஸின் தலைவராக இருந்தார். இதன் மூலம் நாடு முழுவதும் பயணம் செய்து அடித்தட்டு மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இவர் கணவர் கி.பி.1925ல் மறைந்தவுடன் தனது செயல்பாடுகளை அரசியலில் குறைத்து கொண்டாலும் சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். கணவரின் நினைவாக ஏழை தாய்மார்களுக்காக "சித்தரஞ்சன் சேவா சதன்" என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். சுபாஷ் சந்திரபோஸ் சித்தரஞ்சன் தாஸை தனது குருவாக கருதியதால் இவரை வளர்ப்பு தாய் என்ற ஸ்தானத்தில் வைத்து இருந்தார். அரசியல் ஆலோசனைகளுக்கு இவரின் கருத்துப்படியே நடந்து வந்தார். எனது வாழ்வில் மரியாதைக்குரிய 4 பெண்கள் என்று குறிப்பிட்டதில் இவரது பெயரும் அடக்கம். இவரது கணவர் இறந்த ஒரு வருடத்தில் இவரது ஒரே மகனும் மறைந்தார். அதனால் மகனின் மனைவியையும் மூன்று பேத்திகளையும் நன்கு கவனித்து கொண்டார். இந்த நேரத்தில் சுபாஸ் சந்திரபோஸ் இவரை மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட அழைத்தபோதும் இவர் மறுத்து விட்டார். ஆனாலும் காந்தியின் "ஹரிஜன்" இயக்கம் சார்பான நடவடிக்கைகளில் கிழக்கு வங்காள பகுதிகள் முழுவதிலும் ஈடுபட்டார். ஆனாலும் கி.பி.1928ல் லாலா லஜபதிராய் லாகூரில் போலீஸாரின் தாக்குதலில் மண்டை உடைந்து மரணமடைந்த போது அவரின் மரணத்திற்கு இந்திய இளைஞர்கள் பழிவாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

நாடு விடுதலை அடைந்ததும் இவர் சமூக பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். இந்திய அரசு இவரின் நினைவாக  கொல்கத்தாவில் பசந்தி தேவி மகளிர் கல்லூரியை கி.பி.1959ல் உருவாக்கியது. கி.பி.1973ல் இவருக்கு பத்ம விபூசண் பட்டம் அளித்து கெளரவப்படுத்தியது.  இவர் கி.பி.1974 மே 7ல் தனது 94வது வயதில் கொல்கத்தாவில் மரணமடைந்தார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்