116) சாகலி இளம்மா

சாகலி இளம்மா (கி.பி.1895-1985) :


இந்திய வரலாற்றில் எத்தனையோ புரட்சி பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் நாட்டு விடுதலைக்கும் சமூக சமத்துவத்திற்கும் சுரண்டலில் இருந்து விடுதலைக்கும் போராடியுள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் இந்த சாகலி இளம்மா. இவர் தெலுங்கானா பிரதேசத்தின் நிலப்பிரபுக்கள் மற்றும் ஜமீன்தார்கள் மற்றும் நிஜாமின் ரஸாக்கள் படையை எதிர்த்து போராடியவர்.

இவர் இன்றைய தெலுங்கானாவில் வாரங்கல் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் ஒருகண்டி மல்லம்மா மற்றும் சைலு தம்பதிகளுக்கு 4வது மகளாக கி.பி.1895ல் பிறந்தார். இவர் தனது 11வது வயதில் வாரங்கல்லிலுள்ள பாலகுருத்தியை சேர்ந்த சித்யாலா நரசிம்மாவை மணந்தார். இவருக்கு 4 மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.‌ வருமானம் இல்லாததால் கிராம மக்களின் துணிகளை துவைத்து கொடுப்பதும் ஆதிக்க சாதியினருக்கு இலவசமாக வேலைகளை செய்து கொடுப்பதும் வழக்கமாக இருந்தது. இவர் பக்கத்து கிராம நில உரிமையாளரிடம் இருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று இலவச வேலைகளை விட்டுவிட்டு விவசாயம் செய்வதாக அறிவித்தார். இதை அறிந்த  விஸ்னூர் ராமசந்திர ரெட்டி இவரது பயிர்களை அழிக்க தனது குண்டர்களை அனுப்பி வைத்தார்.  இதை எதிர்த்து இளம்மா ஆந்திர மகா சபை உதவியுடன் போராடினார். இந்த சண்டையில் இவரது ஒரு மகன் கொல்லப்பட்டார். மற்ற 2 மகன்களும் கணவரும் கைது செய்யப்பட்டு நல்கொண்டா சிறையில் அடைக்கப்பட்டனர். ராமசந்திர ரெட்டிக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தை அணுகி தனது நில உரிமையை தக்கவைத்து கொண்டார். பின்னர் கி.பி.1947ல் ஹைதராபாத் நிஜாமிற்கு எதிராக இவர்  ஹைதராபாத் நிஜாமின் குண்டர்கள் படையான ரஸாக்களின் படையை எதிர்த்து போராடினார். புரட்சியாளர்களுக்கு இவரது வீடே திட்டமிடும் இடமாகவும் ஆலோசனை கூறும் இடமாகவும் மாறிற்று. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை நிஜாமின் குண்டர்கள் படையை எதிர்த்து போராட ஊக்குவித்தார். தனி தெலுங்கானா போராட்டங்களுக்கு துணை நின்றார். இவர் கி.பி.1985 செப்டம்பர் 10ல் பாலகுருத்தியில் மரணமடைந்தார். இவருக்கு இவரது ஊரில் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்