117) ரமாதேவி செளத்ரி

ரமாதேவி செளத்ரி (கி.பி.1899-1985) :


இந்திய வரலாற்றில் அதன் சுதந்திர போரில் எண்ணற்ற பெண்களும் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் ஒரிசா மக்களால் தனது சேவைகளால் "மா" என்று அன்புடன் அழைக்கப்படும் ரமாதேவி செளத்ரி அவர்கள்.

இவர் டிசம்பர் 3, 1899ல் இன்றைய ஓரிஸ்ஸா மாநிலத்திலுள்ள  சத்தியபாமாபூர் என்னும் ஊரில் கோபால் பல்லவ் தாஸின் மகளாக பிறந்தார். இவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர் என்பதால் இயற்கையிலையே இவரும் சுதந்திர போராட்ட களத்தில் இறங்கினார். இவர் தனது 15வது வயதில் அப்போதைய துணை கலெக்ட்டராக இருந்த கோப பந்து செளத்ரி என்பவரை மணந்தார். 

இவர் மகாத்மா காந்தியின் நடவடிக்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டு தனது கணவருடன் இணைந்து சுதந்திர போராட்ட களத்தில் இணைந்தார். மேலும் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து போராடியது மட்டுமல்லாது அந்த இயக்கத்திற்கு ஊர் ஊராக சென்று ஆட்களை இணைத்து வந்தார். இவர் கி.பி.1921ல் காந்தியடிகளை சந்தித்தார். அதுமுதல் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து போராடியதுடன் கதர் துணிகளை மட்டும் அணிந்து வந்தார். இந்திய தேசிய காங்கிரஸில் கணவருடன் இணைந்து பணியாற்றினார். கி.பி.1930ல் உப்பு சுத்தியாகிரகத்தில் ஒரிஸ்ஸா பகுதிகளில் தீவிரமாக போராடி சிறை சென்றார். அதுமட்டுமல்லாது 4 முறை தீவிரமாக போராடிய காரணத்தால் சிறையில் அடைக்கப்ப்டடார். கி.பி.1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதோடு அடுத்த வருட மாநாட்டை ஒரிசாவில் நடத்த வேண்டுமாறும் மாநாட்டில் பேசினார்.  கி.பி.1932ல் தீண்டாமையை ஒழிப்பதற்காக காந்தியின் அறிவுறுத்தலின் படி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் இந்த நிறுவனம் ஹரிஜன சேவா சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. இவர் பாரியில் ஒரு ஆஸ்ரமத்தை தொடங்கினார். கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இவரது மொத்த குடும்ப உறுப்பினர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். கஸ்தூர்பா காந்தியின் மரணத்திற்கு பிறகு அவரது பெயரிலான அறக்கட்டளையின் ஒரிஸ்ஸா பிரிவிற்கு இவரை காந்திஜி பொறுப்பாளராக நியமித்தார்.

சுதந்திரத்திற்கு பிறகு வினோபாவேயின் பூமிதான் இயக்கத்தில் தன்னையும் தன் கணவரையும் இணைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதை ஊக்குவித்தார். இவர் உத்கல் காதி மண்டலத்தை நிறுவ உதவி புரிந்தார். ராமசந்திரபூரில் ஒரு ஆசிரியர் பயிற்சி மையத்தையும் ஒரு பால்வாடியையும் நிறுவினார். கி.பி.1950ல் தும்பருகேடாவில் பழங்குடி நல மையத்தை அமைத்தார். கட்டாக்கில் சிசுவிகார் என்ற ஆரம்ப பள்ளியையும் புற்றுநோய் மருத்துவமனையையும் நிறுவினார். கி.பி.1962ல் இந்தோ - சீன போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு இவர் உதவி புரிந்தார். இவரது சேவையை அங்கீகரித்து கி.பி.1981ல் ஜம்னாலால் பஜாஜ் விருதும் 1984 ஏப்ரலில் உத்கல் பல்கலைகழக தத்துவியல் டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. புவனேஷ்வரில் இவரின் நினைவாக பல்கலைக்கழகத்திற்கு ரமாதேவி மகளிர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் கி.பி.1985 ஜூலை 22ல் கட்டாக் நகரில் மறைந்தார். இவரது சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளால் இவர் ஒரிஸ்ஸா மக்களால் "மா (அம்மா)" என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்