118) இராணி உதயமதி
இராணி உதயமதி
இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தங்கள் தியாகத்தாலும் கருணையினாலும் மக்கள் சேவையினாலும் புகழ்பெற்றுள்ளனர். அவர்களுள் ஒருவரான இவர் சரித்திர புகழ்பெற்ற ராணியின் கிணறு (ராணி கி வாவ்) கட்டியவர். தனது கணவரின் நினைவாக இந்த கிணற்றை கட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தவர்.
இந்திய வரலாற்றில் தனது காதல் மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால் உலகப்புகழ் பெற்றது. ஆனால் அதற்கு குறைவில்லாத வகையில் தனது மறைந்த கணவரின் மீது கொண்ட அன்பினால் அவரின் நினைவாக கட்டப்பட்ட இந்த ராணியின் கிணறும் புகழ் வாய்ந்தது தான். ராணி உதயமதி குஜராத்தின் சாளுக்கிய சோலங்கி வம்சத்து அரசனான முதல் பீமதேவ்வின் மனைவி. பீமதேவ் கி.பி.1062ல் இறந்து போனார். அவருக்கு பின்னர் அவரது மகனான முதல் கர்ணதேவ் ஆட்சிக்கு வந்தார். மகனின் ஆட்சியில் தனது கணவரின் நினைவுசின்னம் அமைக்க முடிவு செய்தார். சாளுக்கிய சோலங்கி வம்சத்து தலைநகரான அனஹில்லா படான் (தற்போது படான்) மிகவும் வறட்சி மிகுந்த பிரதேசமாக இருந்தது. தண்ணீர் பற்றாக்குறை அதிகம் இருந்ததால் சரஸ்வதி ஆற்றில் இருந்து வரும் வெள்ளம் சமயங்களில் நீரை தேக்கவும் ஆழ்கிணறு அமைக்க முடிவு செய்தார். சிறந்த கட்டிட வடிவமைம்புகளுடன் 20 ஆண்டுகள் உழைத்து அந்த கிணறு கட்டி முடிக்கப்பட்டது. அதில் 5000க்கு மேற்பட்ட எண்ணற்ற சிற்பங்களும் கலைநயம் மிக்க தூண்களும் பல அடுக்குகளாக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இந்த உறைகிணறு 64 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டதாக அமைக்கப்பட்டது.
கி.பி.13ம் நூற்றாண்டில் சரஸ்வதி நதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் அரிக்கப்பட்டு வந்த வண்டல் மண்ணால் இந்த ராணியின் கிணறு முற்றிலும் மூடி வெளியுலகிற்கு தெரியாமல் மறைத்து விட்டது. கி.பி.1940களில் பரோடா அரசின் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக வண்டல் மண் அகற்றப்பட்டது. ஆனாலும் முழுவதுமாக கி.பி.1980களில் தான் முழுவதுமாக அகற்றப்பட்டது. பின்னர் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு நன்கு பராமரித்து பாதுகாக்கப்படுகிறது. யூனெஸ்கோவினால் கி.பி.2014ல் இந்த ராணியின் கிணறு உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தனது கணவரின் நினைவாக மக்களின் பயன்பாட்டிற்காக அழகுற கட்டப்பட்ட இந்த உறைகிணறு ராணி உதயமதியின் கருணையை பறைசாற்றிக் கொண்டு உள்ளது.


Comments
Post a Comment