12) இராணி அவந்தி பாய் லோதி
ராணி அவந்தி பாய் லோதி (கி.பி.1831-1858) :
சரித்திரம் பதிவு செய்துள்ள வீராங்கனைகளில் இவரும் ஒருவர். இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் உள்ள மந்தேஹாடி கிராமத்தில் ராவ் ஜூகார் சிங் என்பவருக்கு மகளாக லோதி இராஜபுத்ர குடும்பத்தில் கி.பி.1831 ஆகஸ்ட் 16ல் பிறந்தார். அவந்தி பாய்க்கு பெற்றோர் இட்ட பெயர் ஆன்டோ பாய். சிறு வயதிலையே வாள்வீச்சில் வல்லவராக திகழ்ந்தார். இவரை ராம்கர் நாட்டை ஆண்ட ராஜா லக்ஷ்மன் சிங் என்பவரின் மகனான விக்ரமாதித்தயா என்பவர் கி.பி.1848ல் மணந்தார். இளவரசியாக ஆனதும் இவரது பெயர் அவந்தி பாய் என்று மாறியது. இவர்களுக்கு அமன் சிங், ஷேர் சிங் என்ற இரு மகன்கள் பிறந்தனர். கி.பி.1851ல் ராஜா லக்ஷ்மன் சிங் மறையவே இவரது கணவரான விக்ரமாதித்யா அடுத்த ராஜாவாக பொறுப்பேற்றார். இவர் ராணியாக பொறுப்பேற்றதும் நாட்டு நிர்வாகத்தில் திறம்பட ஈடுபட ஆரம்பித்தார். இவர் விவசாயிகளிடம் ஆங்கிலேய அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டாம் என்று கூறியதால் மகக்ளிடம் இவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இந்த நிலையில் ராம்கர் நாட்டின் ராஜாவான இவரது கணவரும் பதவியேற்ற சில மாதங்களிலையே உடல்நல குறைவினால் இறந்து போக சிறுவயது பாலகர்களான சிறுவர்களை அரச பதவியில் ஏற்ற முடியாமல் தானே அரசு ஏற்றார். ஆங்கிலேயர்கள் இராணியை ஏற்றுக்கொள்ளாமல் அவகாசியிலிக் கொள்கை மூலம் நாட்டை அபகரிக்க முடிவு செய்தனர். இதனால் ஆங்கிலேயர்களால் அவமானப்படுத்தப்பட்ட ராணி ஆங்கிலேயர்கள் மீது போர் அறிவித்தார். இந்த நேரத்தில் நாடு முழுவதும் சிப்பாய் புரட்சி பரவியது. ஆங்கிலேயருக்கு எதிரான முதல் போரான கெரி கிராமத்தில் நடந்த போரில் இவர் ஆங்கிலேயர்களை விரட்டியடித்து வெற்றி பெற்றார். 4000 வீரர்களை கொண்ட படைகளை தயார் செய்தார். ஆனாலும் அடுத்தடுத்த போர்களில் ஆங்கிலேயர்கள் ராம்கர் கோட்டையை கைப்பற்றினார். வீரமாக போரிட்ட ராணி அவந்தி பாய் பின்வாங்க நேரிட்டது. குதிரைகளில் வாளும் வேலுமாக போரிட்ட இராணி ராம்கர் கோட்டையிலிருந்து தேவகிரி மலைகளில் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கிருந்து சக நாட்டு அரசர்களுக்கு உதவி வேண்டி தனது வளையல்களையும் நகைகளையும் ஆதாரமாக அனுப்பி உதவி கேட்டார். மீண்டும் கி.பி.1858 மார்ச் 20ல் நடந்த போரில் பெரும்படையாக வந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறு படையான ராணியின் படை எதிர்த்து வீரமுடன் போராடியது. ராணியின் கையறு நிலையை அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் ராணி சரணடைந்தால் அவரை விட்டு விடுகிறோம் என்று சதி வேலைகளை ஆரம்பித்தனர். ஆனால் ஆங்கிலேயர்களிடம் ராணி சரணடைய விரும்பவில்லை. வீரமுடன் கொரில்லா தாக்குதல் முறையில் போரிட்டாலும் ராணியால் ஆங்கிலேய படைகளை எதிர்த்து போரிட முடியவில்லை. ஆங்கிலேயர்களிடம் பிடிபடக்கூடாது என்று முடிவு செய்து தனது மெய்ப்பாதுகாவலர் வாளால் தன்னை தானே குத்திக்கொண்டு இறந்து போனார்.
பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியினரின் தொடர்ந்த போராட்டங்களினால் கி.பி.2012 முதல் இவரை பற்றிய பாடம் என்சிஇஆர்டி (NCERT) புத்தகங்களில் சேர்க்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தங்களது சமூகத்தை சேர்ந்த பெண் சாதனையாளர்கள் என்று பெருமைப்படுத்த ஆரம்பித்தது. பார்கி அணைக்கட்டின் பகுதிக்கு இவரது பெயரை சூட்டி மத்திய அரசு பெருமைப்படுத்தியது. மத்திய அரசால் இவரது நினைவு நாளான மார்ச் 20, 1988லும் மார்ச் 20, 2001லும் இவரது நினைவு தபால்தலைகள் வெளியிட்டு இவரின் தியாகம் போற்றப்பட்டது. இன்றும் கோண்டு இன மக்களால் இவர் தாயாக போற்றப்படுகிறார். இவர் ஆங்கிலேயரை விரட்ட தன் வளையல்களை அனுப்பி பக்கத்து அரசர்களின் உதவி கேட்டு நிகழ்வையும் கோண்டு இன மக்கள் நாட்டுப்புற பாடலாக பாடி வருகின்றனர்.


Comments
Post a Comment