120) மிர்ரா அல்ஃபாஸா

மிர்ரா அல்ஃபாஸா (கி.பி.1878-1973) :


இந்திய வரலாற்றில் வெளிநாட்டை சேர்ந்த பெண்களும் இடம்பிடித்து உள்ளனர். அவர்கள் சமூக சேவைக்காகவும் இந்தியாவின் அடிமைத்தனத்தை அகற்றவும் பாடுபட்டனர். இவர் ஆன்மீகத்தை அறிந்து கொண்டு இந்தியாவில் பாண்டிச்சேரி ஆரோவில் "அரவிந்தர் ஆஸ்ரமம்" அமைத்து ஆன்மீகத்தை பரப்பினார். அது மட்டுமல்லாது அன்னிபெசண்ட் அம்மையாரை இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட தூண்டியதும் இவரே. பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் அம்மா என்று அழைக்கப்படுகிறார்.


கி.பி.1878 பிப்ரவரி 21ல் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். இவர் துருக்கிய யூத தந்தையான மொய்ஸ் மாரீஸ் அல்பாஸா மற்றும் எகிப்திய யூத தாயான மதில்டே இஸ்மாலூனுக்கும் மகளாக பிளாஞ்ச் ரேச்சல் மிர்ரா அஸ்ஃபாஸா என்ற பெயரில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தான் இவரது குடும்பம் பிரான்ஸ்க்கு குடிபெயர்ந்தது. 7 வயதில் படிக்க கற்றுக்கொண்டு 9 வயதில் தான் பள்ளியில் சேர்ந்து கலை, டென்னிஸ், இசை மற்றும் பாடல் ஆகியவற்றை கற்பதில் ஆர்வம் காட்டினார். 14 வயதிற்குள் தந்தையின் புத்தக அலமாரியில் உள்ள எல்லா புத்தகத்தையும் படித்தது அவருக்கு பிரெஞ்சு மொழியில் நல்ல தேர்ச்சி பெற உதவிற்று. இஇளமையில் அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் அல்ஜீரியாவுக்கு பயிற்சி பெற சென்றார். திரும்பிய பின்னர் பாரீஸில் ஆன்மீக தேடல் கொண்டவர்களுக்கு குருவாக வழிகாட்டினார். கி.பி.1897ல் ஹென்றி மேரிஸட் என்பவரை திருமணம் செய்து கொண்டு அடுத்து ஆண்டு ஆண்ட்ரே என்ற மகனை பெற்றார். கி.பி.1903க்கு பிறகு மனதிற்குள் அனுமாஷஷ்ய உணர்வுகளை அனுபவித்து வந்தார். இந்த நேரத்தில் தான் சுவாமி விவேகானந்தரின் ராஜயோகம் என்ற புத்தகத்தை படித்தார். பின்னர் அவரது தேடலில் பிரெஞ்சு மொழியில் பகவத்கீதை புத்தகம் கிடைக்க அதையும் படித்து தெளிந்தார். கி.பி.1908ல் பெளத்தர்கள் மற்றும் காஸ்மிக் இயக்கத்துடன் விவாதங்களில் கலந்து கொண்டார். இந்த நேரத்தில் கி.பி.1911ல் பால் ரிச்சர்ட்டை மணந்தார். பால் ரிச்சர்ட்டுடன்  கி.பி.1914ல் இந்தியாவில் பாண்டிச்சேரிக்கு பயணம் செய்து அரவிந்தரை சந்தித்தார். அப்போது மிர்ரா தனது கனவில் காணும் உருவத்தை அரவிந்தரில் கண்டார். ஆர்யா கால இதழின் பிரெஞ்சு பதிப்பை வெளியிட உதவினார்.

 முதல் உலகப்போரின் போது பாண்டிச்சேரியை விட்டு தம்பதிகள் இருவரும் வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டதால் 4 ஆண்டுகள் ஜப்பானில் தங்கி பின்னர் கி.பி.1920ல் பாண்டிச்சேரி திரும்பினார். ஒரு வருடத்திற்கு பின்னர் ரிச்சர்ட் பாரீஸ் திரும்பிய பின்னர் அவர் மிர்ராவை விவாகரத்து செய்தார். மிர்ரா இந்தியாவிலையே அரவிந்தரின் வீட்டில் மற்ற சிஷ்ய-சிஷ்யர்களுடன்  தங்கி கொண்டாலும் அங்கு இருந்தவர்கள் ஆரம்பத்தில் அவரை வெளிநாட்டவராகவே கருதினர். இதன் பின்னர் அதிகப்படியான மக்கள் அரவிந்தரின் ஆன்மீகத்தை பின்பற்றியதால் மெதுவாக வீட்டை ஒரு அரவிந்தர் ஆஸ்ரமத்தை உருவாக்கினார். கி.பி.1926க்கு பின்னர் அரவிந்தர் மற்ற செயல்பாடுகளிலிருந்து ஒய்வு எடுத்து யோக பயிற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்கினார். மிர்ரா யோக ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிர்ரா ஆஸ்ரமத்தை நடத்தும்போது சிலர் அவருக்கு எதிராக புகார்களை அரவிந்தரிடம் அடிக்கடி தெரிவிக்க கி.பி.1930ல் இனி ஆஸ்ரம நடவடிக்கைகளுக்கு "அம்மா" மட்டுமே பொறுப்பாக இருப்பார் என்று அறிவிப்பு செய்தார். கி.பி.1943ல் ஆஸ்ரமத்தில் ஒரு பள்ளியையும் உருவாக்கினார். கி.பி.1949 பிப்ரவரியில் "தி புல்லட்டின்" என்ற பெயரில் 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் நாளிதழை ஆரம்பித்தார். கி.பி.1950 டிசம்பர் 5ல் அரவிந்தர் மறைந்தார். இதன் பிறகு ஆஸ்ரமத்தின் முழு பணிகளையும் ஒருங்கிணைந்த யோகாவையும் அம்மாவே தொடர்ந்து செய்தார். கி.பி.1954ல் பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுதலை பெற்று இந்திய யூனியன் பிரதேசமாகியது. அம்மா இரட்டை குடியுரிமையை பெற்றார். கி.பி.1955 செப்டம்பரில் நேரு ஆஸ்ரமத்திற்கு வருகை தந்தார். கி.பி.1958க்கு பிறகு தனது நடவடிக்கைகளை குறைத்து கொண்டு யோகாவில் மட்டும் கவனம் செலுத்தினார். இவரின் கடைசி 30 வருடங்கள் அவரது சிஷ்யரான சத்பிரேம் என்பவரால் 13 பாகங்கள் கொண்ட மதர்ஸ் அஜெண்டாவில் எழுதப்பட்டது. 

தனது எண்ணங்களின் வெளிப்பாடாக "கனவு" என்ற கட்டுரையை வெளியிட்டார். அதன்படி எந்த ஒரு தேசத்திற்கும் உரிமையில்லாமல் அனைத்து மனித இனங்களுக்கும் உரிமையானதாக ஒரு இடம் வேண்டும் என்ற பரிந்துரையில் கி.பி‌.1964ல் நகரத்தை நிர்மாணம் செய்ய முடிவு செய்து கி.பி.1968ல் மனித ஒற்றுமைக்காக பாண்டிச்சேரியில் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சோதனை நகரமாக ஆரோவில் என்ற நகரம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் வி.வி.கிரி, இந்திரா காந்தி, தலாய் லாமா ஆகியோர்கள் ஆஸ்ரமத்திற்கு வருகை தந்து இவரை சந்தித்தனர். கி.பி.1973 மார்ச் மாதத்திலிருந்து நோய்வாய்பட ஆரம்பித்த இவர் மே மாதம் முதல் அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் பக்தர்களுக்கு மாடியிலிருந்து தனது தரிசனத்தை நிறுத்தினார். பக்தர்கள் மாடிக்கு சென்று அன்னையின் தரிசனத்தை பெற்றனர். கி.பி.1973 நவம்பர் 17ல் தனது 95வது வயதில் மரணம் அடைந்தார். நவம்பர் 20ம் தேதி இவர் உடல் ஆஸ்ரமத்தில் அரவிந்தரின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டது. எங்கோ வெளிநாட்டில் பிறந்து இந்தியாவுக்கு வந்து ஆன்மீக தரிசனத்தை கண்டு இங்கேயே தங்கி மக்களுக்கு யோகாவின் அருமைகளை போதித்து அவர்களுக்கு வழிகாட்டிய இவர் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்து சிஷ்யர்களால் "அம்மா" என்று அழைக்கப்படுகிறார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்