122) ரமா மேத்தா கண்ட்வாலா
ரமா மேத்தா கண்ட்வாலா (கி.பி.1926 - 2021) :
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் நிறைய பெண்கள் ஆயுதமேந்தி படைகளில் இணைந்து தங்களை வருத்திக் கொண்டு இந்திய விடுதலைக்காக பாடுபட்டுள்ளனர். அவர்களில் இன்றும் விடுதலை போராட்டத்தின் சாட்சியாக நம்முடன் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த ரமா மேத்தா கண்ட்வாலாவும் ஒருவர். அதுமட்டுமில்லாது ஜப்பானிய மொழி கற்றதால் இவர் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக 50 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்தார்.
இவர் கி.பி.1926 டிசம்பர் 3ல் ஒரு வசதியான குடும்பத்தில் பர்மாவிலுள்ள ரங்கூன் நகரில் (இன்றைய மியான்மர் யாங்கூன் நகர்) லீலாவதி சாகன்லால் மேத்தா என்பவருக்கு பிறந்த 7 குழந்தைகளில் 5வதாக பிறந்தார். இவர் படித்த தனியார் பள்ளியில் "பிரிட்டன் எப்போதும் அலைகளை ஆளவேண்டும்" என்பதையே வலியுறுத்தினர். இவரது தாத்தா ரங்கூனில் ஒரு மருத்துவராக பணியாற்றினார். இவரது தாயார் லீலாவதி நேதாஜியின் இந்திய தேசிய படையின் ஆட்சேர்ப்பு அதிகாரியாக பணியாற்றினார். கி.பி.1943ல் நேதாஜி ரங்கூனில் ஆற்றிய சொற்பொழிவை கேட்ட ரமாபாய் மற்றும் அவரது அக்கா நீலமும் ஜான்ஸி ராணி ரெஜிமெண்ட்டில் இணைந்தனர். ரமாபாய் படைப்பிரிவில் சிப்பாயாக இணைந்து விரைவில் இரண்டாம் நிலை லெட்டினெனட்டாக பதவியுயர்வு பெற்றார். இவரது படைபிரிவில் சிப்பாய் மற்றும் செவிலியராக பணியாற்றினார். இவரது தலைமையின் கீழ் 30 பெண்கள் பணியாற்றினர். இவர் இங்கு துப்பாக்கி பயிற்சி மற்றும் ஸ்டென் துப்பாக்கிதளை கையாளுவதில் பயிற்சியும் பின்னர் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவத்துறையில் செவிலியராகவும் பயிற்சி பெற்றார். கி.பி.1944ல் மேமியோ நகரில் மருத்துவமனையில் செவிலியராக இருந்த போது நடந்த விமான குண்டுவீச்சு தாக்குதலில் பலத்த காயமடைந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இவரும் இவரது குடும்பத்தினரும் 6 மாதங்களுக்கு வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டனர். பின்னர் இவர் பம்பாய்க்கு குடிபெயர்ந்தார்.
பம்பாய்க்கு வந்தபின்னர் வர்த்தக நிறுவனத்தில் ஜப்பான் மொழியின் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். 1942-45களில் பர்மாவை ஜப்பான் கைப்பற்றியபோது இவர் கற்று தேர்ந்திருந்த ஜப்பான் மொழி இவருக்கு கைகொடுத்தது. பின்னர் சுற்றுலா நிறுவன விளம்பரத்தை கண்டு அங்கு பணிபுரிந்தார். ஜப்பானிய மொழியில் டாக்குமெண்ட்ரி சேனல்களில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இந்த நேரத்தில் தலாய் லாமைவை சந்தித்து டாக்குமெண்டரி எடுத்தார். பின்னர் பூட்டான் மன்னர் இந்தியா வந்திருந்த போது அவருக்கு எலிஃபெண்டா குகைகளுக்கு வழிகாட்டியாக பணிபுரிந்தார். கி.பி.1949ல் இவர் பம்பாயில் திருமணம் செய்தார். தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். கணவர் கி.பி. 1982ல் இறந்தார். 50 ஆண்டுகளாக இவர் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றினார். இதனால் கி.பி.2017ல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் சிறந்த சுற்றுலா வழிகாட்டி என்ற விருதை பெற்றார்.
இவரது 50 ஆண்டுகால சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றியதை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டதுடன் கி.பி.2019ல் 72வது சுதந்திர தினத்தன்று தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் சார்பாக சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவரது போர்கால அனுபவங்களை பற்றிய ஆவணப்படம் "யானைகள் நினைவிருக்கிறது" என்ற கி.பி.2019ல் வெளியிடப்பட்டது. இவர் தனது 95வது வயதில் கி.பி.2021ல் அக்டோபர் 28ல் மும்பையில் மறைந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக வெளிநாட்டில் இருந்து இருந்து நேதாஜியின் பெண்கள் படையில் இருந்து போராடி பின்னர் இந்திய விடுதலைக்கு பின்னர் சுற்றுலா துறையின் வழிகாட்டியாக 50 ஆண்டுகள் பணிபுரிந்து நாட்டிற்கு சேவை புரிந்து சமீபத்தில் தான் மறைந்தார்.



Comments
Post a Comment