125) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (கி.பி.1926 - வாழ்ந்து வருகிறார்) :
இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்களும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக போராட்ட களத்தில் நின்று வென்று காட்டியுள்ளனர். தனது தள்ளாத 96 வயதிலும் இன்றும் போராட்ட களத்தில் நின்று உரிமைகளுக்காக சமூக சேவைகளுக்கு போராடி கொண்டிருக்கும் பெண்மணி பத்மஶ்ரீ விருதை வென்ற சமூக சேவகரான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள்.
இவர் கி.பி.1926 ஜூன் 16ல் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் ஜெகந்தாதன் - நாகம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். பிறப்பிலையே வறுமை நிலையில் தான் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் இவர் தனது பட்டப்படிப்பை முடித்தார். இளமையில் கல்வி கற்க ஆலிஸ் மகாராஜா என்ற பெண்மணியிடம் திண்ணை பள்ளியில் தங்கி படித்தார். அந்த பெண்மணி இவரை மகள் போல பாவித்து தன்னுடன் தங்க வைத்து உணவும் கல்வியும் கற்று கொடுத்தார். அவர் தன் சொந்த ஊருக்கு புறப்பட்ட சமயத்தில் இன்னொரு பெண்மணியிடம் இவரை கல்வி கற்க கொண்டு போய் விட்டார். அந்த பெண்மணி தான் டி.வி.எஸ். சுந்தரம் அய்யங்காரின் மகளான செளந்திரம்மாள். அவர் இவரை தன் மகள் போல வளர்த்து படிக்க வைத்தார். அவரின் விடுதியில் இவரை போன்ற பல பெண்களையும் படிக்க வைத்தார். அவர் கிராமங்களுக்கு செல்லும் போது இவரையும் அழைத்து செல்வார். அந்த கிராமங்களில் திட்டி மறைவில் பால்ய திருமணத்தால் விதவைகளான சிறுமிகளை அடைத்து வைத்திருப்பார்களாம். அவர்களை மீட்டு கொண்டு வந்து அவரின் இல்லத்தில் படிப்பும் உணவு உறைவிடம் கொடுத்து காப்பாற்றினாராம். பல இடங்களில் இவர்களின் மேல் தாக்குதல்கள் கூட நடந்துள்ளது. அதையெல்லாம் இளமையில் பார்த்த இவருக்கு சேவையின் மீது ஆர்வம் வந்தது. பொது வாழ்வில் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் சக்தியும் பின்னாளில் தன் வாழ்நாள் முழுவதும் போராடும் பலத்தையும் கொடுத்தது. பின்னர் பட்ட படிப்பு முடிந்தவுடன் சர்வோதயா இயக்கத்தில் இணைந்தார். இவர் சர்வோதயா இயக்கத்தில் இருக்கும்போது பணக்கார குடும்பத்தை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரை சந்தித்தார். இருவருக்கும் காதல் ஏற்ப்பட்டாலும் இந்திய சுதந்திரம் அடைந்த பின்னரே திருமணம் செய்வதாக முடிவெடுத்து கி.பி.1950ல் தான் திருமணம் செய்து கொண்டனர்.
கி.பி.1950-52களில் சங்கரலிங்கம் வட இந்தியாவில் வினோபாவேயின் பூதான் இயக்கத்தின் பாத யாத்திரையில் இருந்தார். இந்த நேரத்தில் கிருஷ்ணம்மாள் சென்னையில் ஆசிரிய பயிற்சி படிப்பை முடித்தார். பின்னர் தம்பதிகள் இருவரும் இணைந்து பூதான் இயக்கத்தின் நடவடிக்கைகளில் 1953-68 வரை கலந்து கொண்டனர். இந்த நேரத்தில் தான் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் நில உரிமையாளருடன் ஊதிய உயர்வுக்கான தகராறில் 42 தாழ்த்தப்பட்ட மக்கள் உயிரோடு கெளுத்தப்பட்ட சம்பவம் நடந்தது. இதனால் உழைப்பவர்களுக்கான நிலம் என்ற கோரிக்கையை முன்வைத்து இவர்கள் LAFTI என்ற அமைப்பை கி.பி.1981ல் ஆரம்பித்தனர். இதன் மூலம் நில உரிமையாளர்கள் மட்டும் நிலமற்ற விவசாயிகள் இடையே பேச்சுவார்த்தையில் கடனுக்கு நிலங்களை நியாமான விலையில் விவசாயிகள் பெற்றனர். இந்த அமைப்பு மூலம் 13000 ஏக்கர் விவசாய நிலங்களை விவசாயிகள் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றினர். விவசாயம் இல்லாத காலங்களில் விவசாயிகளுக்கு நெசவு, தையல், பிளம்பிங், மின்னணுவியல் பயிற்சிகள் கொடுத்தும் அவர்கள் சிறப்புற வாழ வழிவகை செய்தனர். மேலும் கடலோரத்தில் சூழ்நிலை சீர்கேட்டை எதிர்த்து இறால் பண்ணைகளை மூட நீதிமன்றத்தை நாடினார்கள். இவர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் நீதிமன்றம் கடற்கரைக்கு 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள இறால் பண்ணைகளை மூட உத்தரவிட்டது.
கி.பி.2013 பிப்ரவரியில் இவரது கணவர் சங்கரலிங்கம் மறைந்தாலும் இன்றும் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார். அமைதிக்கான நோபெல் பரிசுக்கும் இவர் பெயர் ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டது. இவர் கி.பி.1987ல் சுவாமி பிரணவானந்தா அமைதி விருதும், கி.பி.1988ல் ஜம்னாலால் பஜாஜ் விருதும், கி.பி.1989ல் பத்மஶ்ரீ விருதும், கி.பி.1996ல் பகவான் மகாவீர் விருதும், கி.பி.1999ல் சுவிட்சர்லாந்தின் சம்மிட் பெளன்டேஷன் விருதும், கி.பி.2008ல் சியாட்டில் பல்கலைகழக விருதும், மாற்று நோபெல் பரிசும், ரைட் லைவ்விஹூட் விருதும், கி.பி.2020ல் பத்ம பூசண் விருதையும் பெற்றுள்ளார். தம்பதிகளின் சேவைகளின் வரலாற்றை மையமாக கொண்டு கி.பி.2014ல் "That Fired Soul" என்ற குறும்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment