126) எம்.எஸ்.சுப்புலெட்சுமி
எம்.எஸ்.சுப்புலெட்சுமி (கி.பி.1916-2004) :
இந்திய வரலாற்றில் இடம்பெற்ற பெண்மணிகளுள் இவர் தனித்துவம் மிக்கவர். தனது இசைத்துறையினாலும் குரல் வளத்தினாலும் 70 ஆண்டுகள் ரசிகர்களை கட்டி போட்டவர். ஜக்கிய நாடுகள் சபையில் முதன்முதலில் பாடிய பெருமை பெற்றவர். பாரத் ரத்னா மற்றும் ராமன் மகசேசே ஆகிய இந்தியாவின் உயரிய விருதுகளை வாங்கிய இசைத்துறையின் முதல் பெண்மணி இவர்.
இவர் கி.பி.1916 செப்டம்பர் 16ல் மதுரையில் சுப்ரமணிய ஐயர் - சண்முகவடிவேலு அம்மாள் மகளாக பிறந்தார். இவர் இளமையில் செம்மாங்குடி சீனிவாச ஐயரிடம் கர்நாடக இசையையும் பண்டிட் நாராயணராவ் வியாஸிடம் இந்துஸ்தானி இசையையும் கற்று தேர்ந்தார். இவர் தனது 11வது வயதில் திருச்சி மலைகோயிலுக்குள் உள்ள 100 தூண் மண்டபத்தில் முதல் இசை கச்சேரியை நடத்தினார். 13வது வயதில் மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் இசை கச்சேரி நடத்தினார். அடுத்த 4 வருடத்திற்குள் சென்னை மியூசிக் அகாடமியில் தனிச்கச்சேரி நடத்தும் அளவுக்கு வளர்ந்தார். கி.பி.1936ல் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். மைசூர் மகாராஜாவின் அவையிலும் பாடும் பெருமையை பெற்றார். நடன கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தையான கே.சுப்ரமணியம் இவரை திரையுலகுக்கு அழைத்து வந்து சேவாசதனில் நடிக்க வைத்தார். கி.பி.1938ல் சேவாசதன் திரைபடத்தில் அறிமுகமானார். இதில் எஃப்.பி.நடேச ஐயரின் ஜோடியாக வயதான கணவர் இளம் மனைவிக்கான மன போராட்டங்களை வெளிப்படுத்தும் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார். இவரது குரலில் கிறங்கி போன பட தயாரிப்பாளரான சுதந்திர போராட்ட வீரருமான கல்கி சதாசிவமை தன் விருப்பத்தை இவரிடம் சொல்லி திருமணம் செய்து கொண்டார். கணவரின் மூலம் காந்திஜியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் கஸ்தூர்பாய் நினைவு அறக்கட்டளைக்காக 5 இசை கச்சேரிகள் நடத்தி நிதி திரட்டினார். கணவரின் இதழான கல்கி வார இதழை தொடங்குவதற்கு நிதி திரட்ட "சாவித்திரி" திரைபடத்தில் ஆண் வேடத்தில் நாரதராக நடித்தார். கி.பி.1945ல் மீரா திரைப்படத்திலும் கி.பி.1947ல் "1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" திரைப்படத்திலும் நடித்தார். இந்தியில் வெளியான மீரா படத்தின் பஜனை பாடல்கள் "காற்றினிலே வரும் கீதம்" இவருக்கு இந்தியா முழுவதும் அங்கீகாரத்தை வாங்கி கொடுத்தது.
கி.பி.1944ல் நான்கு இசை கச்சேரிகள் நடத்தி 2 கோடி வரை நிதி திரட்டி பொது காரியங்களுக்கு நன்கொடையாக அதை அளித்தார். அதை கண்டு அனைவரும் அதிர்ந்தனர். இவரது இசையில் வெளியான விஷ்ணு சகஸ்ரநாமமும் வெங்கேட சுப்ரபாதமும் இன்றும் வீடுகளிலும் கோயில்களிலும் ஒலித்து கொண்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான ஃபோர்டு இவருக்கு மிகுந்த பெருமையாக கமிட்டி உறுப்பினர் பதவியை அளித்தது. இவரது மறைவுக்கு பின்னர் திருப்பதி கீழ் மலையில் இவருக்கு வெண்கலத்திலான சிலை வடித்து பெருமைப்படுத்தியது. இவர் பெறாத பட்டங்களே இல்லை எனலாம். கி.பி.1954ல் "பத்மபூஷன்" விருதை பெற்றார். கி.பி.1968ல் மியூசிக் அகாடமி வழங்கிய "சங்கீத கலாநிதி" என்ற விருதையும் கி.பி.1974ல் "மகசேசே" விருதையும் கி.பி.1975ல் "பத்ம விபூசண்" விருதையும் கி.பி.1990ல் "இந்திராகாந்தி" விருதையும் கி.பி.1996ல் "கலாரத்னா" விருதையும் கி.பி.1998ல் இந்தியாவின் உயரிய விருதான "பாரத் ரத்னா" விருதையும் கி.பி.2004ல் "வாழ்நாள் சாதனையாளர்" விருதையும் பெற்றார்.
கி.பி.1966ல் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டத்தில் இவர் பாடிய பாடல் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளுக்கும் சென்று இசை கச்சேரிகள் நடத்தி கர்நாடக இசையின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார். காஞ்சி பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி எழுதிய பாடல்களையும் ராஜாஜி எழுதிய பாடல்களையும் பாடினார். இவர் பாடிய வைஷ்வணவ ஜனதே பாடல் மகாத்மா காந்தியின் விருப்ப பாடலாக இருந்தது. இன்றும் மீரா பஜன்கள், வெங்கடேச சுப்ரபாதம், குறையொன்றுமில்லை, பஜகோவிந்தம், காற்றினிலே வரும் கீதம் பாடல்கள் காலத்தை வென்றும் ரசிக்கப் படுகிறது.
கி.பி.1997ல் இவரது கணவரான கல்கி சதாசிவம் மரணமடைந்தார். அது முதல் இசை கச்சேரிகள் செய்வதை நிறுத்தி விட்டார். வீட்டிலையே கணவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வந்தார். தனது 88வது வயதில் கி.பி.2004 டிசம்பர் 11ல் காவிய இசையின் மகா சகாப்தம் தன் இறுதி மூச்சை நிறுத்தினார்.



Comments
Post a Comment