127) டி.கே.பட்டம்மாள்

டி.கே. பட்டம்மாள் (கி.பி.1919-2009) ;


சங்கீத உலகில் இருபதாம் நூற்றாண்டில் ஆண்களே கோலோச்சி கொண்டிருந்த காலகட்டத்தில் தங்களின் இசைத்திறமையால் கச்சேரிகளின் மூலம் "பெண் மும்மூர்த்திகள்" என்ற பட்டம் பெற்றவர்களாக எம்.எஸ்.சுப்பு லெட்சுமி, எம்.எல். வசந்தகுமாரியுடன் மூன்றாவது நபராக அறியபப்ட்டவர் தான் டி.கே. பட்டம்மாள். இவர் சங்கீத கான சரஸ்வதி, இசை பேரரசி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டார். 

கி.பி.1919 மார்ச் 19ல் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திற்கு அருகில் தாமல் என்னும் கிராமத்தில் கிருஷண்சாமி தீட்சிதர் மற்றும் காந்திமதி (இராஜம்மாள்) ஆகியோருக்கு மகளாக அலுமேலு என்ற இயற்பெயருடன் பின்னாளில் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் (டி.கே.பட்டம்மாள்) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இசை பேரரசி பிறந்தார். இவரது தாயார் சிறந்த பாடகியாக இருந்தாலும் பொதுவிலோ குடும்ப வைபவங்களிலோ பாட அனுமதிக்கப்படவில்லை. இவர் 3 மாத குழந்தையாக இருந்தபோது இவரது தந்தை ரமண மகரிஷியிடம் அழைத்து செல்ல ரமணர் இவரின் நாக்கில் தேன் தடவி ஆசிர்வதித்தார். இசை ஞானம் குரல் வளத்துடன் நன்கு பாடுவதற்கு ரமணரின் ஆட்சியே காரணம் என்று தந்தை அடிக்கடி இவரிடம் கூறுவாராம். தாயினால் பொதுவெளியில் பாட முடியாவிட்டாலும்  இவர் தனது 4வது வயதில் இருந்து பாட ஆரம்பித்து விட்டார். டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் ஆகிய மூன்று பாடகர்களும் இவரது உடன்பிறந்த சகோதரர்கள். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஶ்ரீசீனிவாசன் இவரது தந்தையின் நண்பர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரை தான் அறிஞர் அண்ணா தனது முதல் தேர்தலில் வென்று சட்டமன்றத்திற்கு சென்றார். இவர் டி.கே. பட்டம்மாளின் குரல் இசைதட்டுகளில் வரவேண்டும் என்று உறுதிபட கூற இவரது தந்தையான தீட்சிதர் பெண்ணின் குரல் இசைதட்டுகளில் வந்தால் அவளுக்கு திருமணம் ஆவது தடைபடும் என்று கூற ஶ்ரீசீனிவாசன் அவரது உறவுக்கார பையனாக ஈஸ்வரனை பட்டம்மாளுக்கு திருமணம் செய்து தருவதாக ஒப்புதல் கொடுத்து அவரை இசைதட்டுகளில் பாட வைத்தார். கி.பி.1939ல் ஆர்.ஈஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இவர் முழுமையான கர்நாடக இசையை கற்காமல் கச்சேரிகளில் பாடல்களை கேட்டே தன் திறமையை வளர்த்து கொண்டார். சிறு வயதில் தந்தை கற்று கொடுத்த பக்தி பாடல்களை பாடியவர் பின்னாளில் ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்து கொண்டார். இவரது திறமையை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் அம்முகுட்டி அம்மாள் தான் இவரின் தந்தையிடம் பரிந்துரை செய்து வாதாடி மேடைகளில் பாட அனுமதி வாங்கினார். காந்திஜி காஞ்சிபுரம் வந்தபோது அவரிடம் பாரதியார் பாடலை பாடி பாராட்டு பெற்றார்.  கி.பி.1929ல் தனது 10வது வயதில் ரேடியோவில் பாடிய பின்னரே டி.கே.பட்டம்மாள் என்ற பெயர் பிரபலமாக ஆரம்பித்தது. கி.பி.1932ல் சென்னை எழும்பூர் மகளிர் மன்றத்தில் பாடினார். அதன் பின்னர் காங்கிரஸ் மேடைகளில் பாட ஆரம்பித்தார். யகாகவி பாரதியாரின் பாடல்களை மேடை கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடினார். அது மட்டுமன்று பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி, முத்து தாண்டவர் பாடல்களையும் பாடினார்.  பாபநாசம் சிவன் இவரை கி.பி.1939ல்  "தியாக பூமி" படத்தில் முதன்முதலாக "தேச சேவை செய்ய" என்ற பாடலை பாட வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதன் பிறகு நிறைய திரைப்படங்களில் பாடினாலும் பக்தி அல்லது தேச பக்தி பாடல்களை மட்டுமே பாடுவது என்ற உறுதியில் இருந்தார்.  அது மட்டுமல்லாது சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலும் பாடியுள்ளார். பிரபல பாடகி நித்யஶ்ரீ மகாதேவன் இவரது பேத்தி தான். நாடு சுதந்திரம் அடைந்த போது அன்று இரவு முழுவதும் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" பாடல் முதலான தேச பக்தி பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார். காந்தியடிகள் மறைந்த போதும் வானொலியில் பாடியவர் அதற்கும் ஊதியம் வாங்க மறுத்து விட்டார்.

இவர் கி.பி.1962ல் "சங்கீத நாடக அகாடமி" விருதும், கி.பி.1971ல் "பத்ம பூசண்" விருதும், கி.பி.1973ல் சென்னை தமிழ் சங்கத்தினால் "இசை பேரறிஞர்" விருதும், கி.பி.1978ல் "சங்கீத கலாரசிகாமணி" விருதும், கி.பி.1998ல் "பத்ம விபூசண்" விருதும், சங்கீத கலாநிதி விருதும், கலைமாமணி விருதும், காளிதாஸ் சம்மன் விருதும் பெற்றார்.  இவர் கி.பி.2009 ஜூலை 16ம் தேதி சென்னையில் தனது 90வது வயதில் காலமானார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்