128) கே.பி.சுந்தராம்பாள்

கே.பி.சுந்தராம்பாள் (கி.பி.1908-1980) :


கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்ற பெயரின் சுருக்கமான கே.பி.சுந்தராம்பாளை அறியாதவர் யாரும் இருக்கமுடியாது. தமிழிசை, நாடகம், அரசியல், திரைபடம் மட்டுமில்லாது ஆன்மீகம் முதலான பல துறைகளிலும் தனது புகழை நிலைநாட்டினார். இன்றும் ஒளவையார் வேடத்தில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அந்த வேடத்தில் கனகச்சிதமாக பொருந்தியவர்.

இவர் கி.பி.1908 அக்டோபர் 11ல் இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி கிருஷ்ணசாமி-பாலாம்பாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு 2 சகோதரர்கள் உண்டு. இவரது தந்தையார் இவரது இளம் வயதிலையே மரணமடைந்ததால் இவரது தாயாரின் சகோதரர்களின் தயவில் தான் வாழ்க்கையை நடத்தினார்கள். இவர் "கொடுமுடி லண்டன் மிஷன் ஸ்கூல்" என்ற பள்ளியில் கல்வி பயின்றார். இவரது பாடல் பாடும் திறனை கண்ட ஊர் பெரியவர்கள் அவ்வப்போது இவரை பாட அழைத்து கேட்பார்கள். அவர்கள் சிறுமியான இவரை கோயிலில் பாட சொல்லினர். கோயிலில் இவர் பாட ஆரம்பித்தவுடன் கூட்டம் அதிகமாக வரத்தொடங்கியது. இவர் ரயிலில் தனது தாய்வழி பாட்டனாரின் ஊரான கரூருக்கு செல்லும்போது பாட்டு பாட ஊர்க்காரர்கள் வலியுறுத்திய போது  இவரது பாடலை கேட்ட வேலு நாயர் என்பவர் இவரது குரலின் இனிமையில் மயங்கி தன்னுடன் அழைத்து சென்று  இவரை கும்பகோணத்தில் தனக்கு சொந்தமான நாடக கம்பெனியில் சேர்த்து கொண்டார். இவரது 5 வயதில் மாதம் ஒரு பவுன் தங்கம் சம்பளமாக பெற்றார். இவர் நல்லத்தங்காள் நாடகத்தில் மூத்த மகனான ஞானசேகரன் வேடத்தில் ஆண் பிள்ளையாக நடித்து பெரும் வரவேற்பு பெற்றார். "பசிக்குதே ஐயோ பசிக்குதே" என்ற பாடலை பாடியதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பின்னர் கி.பி.1917ல் கொழும்பு சென்று நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஊர் ஊராக இலங்கையின் எல்லா ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி பின்னர் கி.பி.1920களில் நாடு திரும்பினார். பின்னர் இங்கு நாடக கச்சேரிகளில் இவரது பெயருக்காகவே கூட்டம் அலைமோதியது. பின்னர் கி.பி.1926ல் கொழும்பு சென்றார். அங்கு சென்றவர் அப்போது மிகவும் புகழ்பெற்றிருந்த நாடக கலைஞர் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு ஜோடியாக வள்ளி திருமணம் நாடகத்தில் நடித்தார். இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் இசைதட்டுகளில் இவரது பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. தம்பதி சகிதமாக நாடகங்கள் நடத்தி வந்த நிலையில் கி.பி.1933 டிசம்பர் 2ல் தனது 28வது வயதில் கிட்டப்பா மறைந்தார். அது முதல் இவர் வெள்ளை சேலை கட்ட தொடங்கியவர் வேறு எந்த ஆண் நடிகருடன் ஜோடியாக நடிப்பதில்லை என்று முடிவுக்கு வந்தார். நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்தவர் பின்னர் "நந்தனார்" நாடகத்தில் ஆண் வேடமிட்டு மற்ற பெண் பாத்திரங்களுக்கு பெண் நடிகைகளையே ஜோடியாக நடிக்க வைத்தார். காங்கிரஸ் பிரச்சார கூட்டங்களில் தவறாது இடம் பெற்று வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, ஆங்கில ஏகாதிபத்ய ஒழிப்பு பாடல்களை கூட்டங்களில் பாடி வந்தார். ஈரோடு பகுதிகளில் கி.பி.1937ல் வந்திருந்த காந்திஜி இவர் வீட்டில் உணவருந்த வந்தார். அவருக்கு தங்க தட்டில் சாப்பாடு வழங்கினார். காந்திஜி எனக்கு வெறும் சாப்பாடு மட்டும் தானா? தட்டு கிடையாதா? என்று நகைச்சுவையாக கேட்க அங்கேயே அவரிடம் அந்த தங்க தட்டை கொடுக்க காந்தியடிகள் அதை அங்கேயே ஏலம் விட்டு பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்தார். பின்னர் "பக்த நந்தனார்" என்னும் திரைப்படத்தில் நந்தனார் வேடத்தில் ஆணாக படத்தில் உள்ள 41 பாடல்களில் 19 பாடல்களை இவரே பாடி நடித்தார். கி.பி.1935ல் வெளிவந்த இந்த படத்தின் சுருள்கள் ஒரு தீ விபத்தில் அழிந்து போனதால் இதன் காப்பி தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக இவர் அந்த நாளில் 1 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றார். பின்னர் இது பற்றி கேட்டபோது அது என் தொழில்பக்திக்கு கிடைத்த பணம் என்று மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார். பின்னர் கி.பி.1940ல் வெளியான மணிமேகலை படத்தில் இவர் 11 பாடல்களை பாடியிருந்தார். பின்னர் 1953ல் "ஒளவையார்" படத்தில் ஓளவையாராக நடித்தபோது படத்தில் இருந்த 48 பாடல்களில் இவர் பாடியது 30 பாடல்கள்.  இந்த படத்திற்க்காக அந்த நாளில் 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவே சம்பளமாக பெற்றார். கி.பி.1964ல் பூம்புகார் படத்தில் கவந்தி அடிகளாக வேடமேற்று நடித்தார். பின்னர் மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, துணைவன், உயிர் மேல் ஆசை, காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம் மற்றும் மணிமேகலை(பாவ சன்னியாசி) என மொத்தம் 12 படங்களில் நடித்துள்ளார். காங்கிரஸ் மேடைகளில் தவறாது கலந்து கொண்டுள்ளார். இதனால் கி.பி.1957ல் காமராஜர் ஆட்சியில் இவர் சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கி.பி.1966ல் சென்னை தமிழ் சங்கத்தினால் "இசை பேரறிஞர்" விருதும், கி.பி.1969ல் துணைவன் படத்திற்காக "சிறந்த தேசிய பிண்ணனி பாடகி" விருதும், கி.பி.1970ல் இந்திய அரசால் "பத்மஶ்ரீ " விருதும் தருமபுரம் ஆதினத்தால் "ஏழிசை வல்லபி" விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இன்றும் காரைக்கால் அம்மையார், ஒளவையார் என்றால் மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது இவரின் முகம் என்ற அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் ஒன்றி போயிருந்தார். கி.பி.1980 செப்டம்பர் 19ல் தனது 72வது வயதில் சிறுநீரக கோளாறு மற்றும் இதய கோளாறு ஆகியவற்றால் கே.பி.சுந்தராம்பாள் மறைந்தார். அவர் மறைந்தாலும் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்ற கேட்ட முருகனுக்கு இவர் பாடிய பாடலான "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா தமிழ் ஞானப்பழம் நீயப்பா" என்ற பாடல் என்றும் மக்கள் மனதில் மறைந்து போகாது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்