129) அன்னை சாரதா தேவி

அன்னை சாரதா தேவி (கி.பி.1853-1920) :

.

இந்திய வரலாற்றில் பக்தியினால் இடம்பிடித்த பெண்மணிகளுள் இவரும் ஒருவர். புகழ்பெற்ற இராமகிருஷ்ண மிஷன் மற்றும் சாரதா மிஷன் இவரது கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. புனித அன்னை என்று இராமகிருஷ்ண மடத்தின் உறுப்பினர்களால் வணங்கப்படும் பெருமைக்குரியவர். 

இவர் கி.பி.1853 டிசம்பர் 22ல் இன்றைய மேற்கு வங்காளத்தில் பங்குரா மாவட்டத்தில் உள்ள ஜாய்ரம்பதி என்னும் சிற்றூரில் இராமச்சந்திர முகோபாத்யாய் - ஷ்யாமா சுந்தரி தேவி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை விவசாயியாகவும் பூசாரியாகவும் வாழ்க்கை நடத்தினார். இவருக்கும் இராமகிருஷ்ணருக்கும் கி.பி.1859ல் இவருக்கு திருமணம் நடந்தது. அப்போது இவருக்கு 6 வயதாகவும் இராமகிருஷ்ணருக்கு 23 வயதாகவும் இருந்தது. இவர் தனது 18வது வயது வரை பெற்றோருடன் தான் வசித்து வந்தார். கி.பி.1864ல் வங்காள பஞ்ச காலத்தின் போது இவரது குடும்பத்தினருடன் மக்களின் பசிக்கு உணவு வழங்க பணியாற்றினார். கல்வி பயிலாவிட்டாலும் இளைய சகோதரர்களை வளர்ப்பிலும் பராமரிப்பிலும் தாய்க்கு உதவியாக இருந்தார். சிறு வயதிலிருந்தே அடிக்கடி தியானம் செய்யும் பழக்கம் இயற்கையாகவே செய்து வந்தார். இராமகிருஷ்ணர் அந்த நேரத்தில் பக்தி மற்றும் ஆன்மீக தரிசனங்களில் திளைத்த வேளையில் அவருக்கு திருமணம் செய்ய அவரது தாய் முடிவெடுத்த போது இராமகிருஷ்ணர் தனது தரிசனத்தால் குறிப்பிட்டு சொன்னது சாரதா தேவியை தான். திருமணம் முடிந்து தாய்வீட்டிலிருந்து 18 வயதுக்கு  பின்னர் கொல்கத்தாவிலுள்ள தக்ஷ்னேஷ்வர் காளி கோயிலுக்கு வந்து இராமகிருஷ்ணருடன் சேர்ந்து வாழ்ந்தார். ஆனாலும் இருவரும் குடும்ப வாழ்க்கையிலும் துறவற வாழ்க்கை வாழ்ந்தார். வெளியுலகிற்கு கணவன் மனைவியாக தெரிந்தாலும் உண்மையில் குரு-சிஷ்யை, தந்தை-மகள், தாய்-மகன் போன்றே வாழ்ந்து வந்தனர். ஊரார் அவரை பற்றி சன்னியாச வாழ்க்கை வாழ்வதாக கூறியதால் தான் தாய் வீட்டிலிருந்து தக்ஷ்னேஷ்வர் வந்தவர் உண்மையை கண்டு கொண்டு கணவர் சராசரி மனிதரல்ல. அவர் ஒருபோதும் சம்சார வாழ்க்கைக்கு திரும்ப மாட்டார். எனவே கணவரின் தெய்வீக வாழ்க்கைக்கு உதவியாய் இருப்பதே தனது கடமை என்று தீர்மானித்து கொண்டார்.

கி.பி.1872 முதல் கி.பி.1885 வரை தக்ஷ்னேஷ்வர் கோயிலில் சிறிய அறையில் தங்கினார். அங்கு துறவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இராமகிருஷ்ணர் ஷோடசி பூஜையில் சாரதா தேவியை அன்னை காளி தேவியின் இருக்கையில் அமர செய்து அவரை தெய்வீக அன்னை திரிபுர சுந்தரியாக வழிபட்டார். இராமகிருஷ்ணர் அன்னை சாரதாவை தெய்வீக அவதாரமாக கருதி ஶ்ரீ மா என்று அழைத்தார் காலை 3 மணிக்கே ஹூக்ளி நதியில் நீராடி விடியும்வரை ஜெபமும் தியானமும் செய்து வந்தார். இர்மகிருஷ்ணர் அவருக்கு புனித மந்திரங்களை சொல்லி கொடுத்தார். மக்களை ஆன்மீக வாழ்வில் எப்படி வழிநடத்துவது என்று கற்று கொடுத்தார். தியான நேரம் போக மீதி நேரங்கள் இராமகிருஷ்ணருக்கும் அவரது பக்தர்களுக்கும் உணவு சமைப்பதிலையே நேரம் செலவிட்டார். இராமகிருஷ்ணர் கடைசி காலத்தில் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு கி.பி.1886 ஆகஸ்ட் 16ல் மறைந்தார். இதனால் இவர் விதவைக்கான வழக்கப்படி வளையல்களை கழற்ற முற்பட்ட போது  இராமகிருஷ்ணர் தரிசனம் கொடுத்து " நான் இறந்து விடவில்லை. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு சென்றுள்ளேன்" என்று கூறி அவரை தடுத்தார். அதன் பின்னர் வட இந்தியா சுற்றுப்பயணம் தனது சீடர்களுடன் சென்றார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் அயோத்தி ராமர் கோயிலுக்கும் மதுரா பிருந்தாவனத்திற்கும் சென்று தரிசனம் செய்தார். 

வட இந்திய யாத்திரை முடிந்த பிறகு இராமகிருஷ்ணரின் பிறந்த கிராமமான கமர்புகூரில் வசித்து வந்தார். வறுமையில் வாடி பட்டினியில் இருந்ததை அறிந்த இராமகிருஷ்ணரின் சீடர்கள் அவரை கொல்கத்தாவிற்கு அழைத்து வந்தனர். சுவாமி விவேகானந்தர் துவக்கிய பேலூர் மடத்தில் தங்கினர். சுவாமி சாரதானந்தா கொல்கத்தாவில் சாரதா தேவிக்கு வீடு கட்டி கொடுத்து அதற்கு "உத்போதன் வீடு" என்று பெயரிட்டார்.இந்த வீட்டில் தான் அவரின் பெண் சீடர்கள் மற்றும் அறிவுரைகள் ஆன்மீக தீட்சை வழிகாட்டுதலுக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தேடி வந்தனர். சகோதரி நிவேதிதா இந்த கால கட்டத்தில் தான் அன்னையின் வழிகாட்டுதலை பெற்றார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு அன்னையின் அருளையும் ஆசியையும் பெற்ற பிறகே அமெரிக்கா சென்றார். இன்னொரு சீடரான நிகிலானந்தா நியூயார்க்கில் இராமகிருஷ்ணா - விவேகானந்தா மையத்தை ஏற்படுத்தினார்.‌இவர் கல்வியறிவு பெறாதவராக இருந்தாலும் மற்ற பெண்களின் கல்வியறிவுக்கு பெண் கல்வியை ஆதரித்தார். சகோதரி நிவேதிதா இவரது ஆசியுடன் இந்திய பெண்கள் பள்ளியை தொடங்கினார். இந்திய சுதந்திர போராட்ட காலமான அந்த நேரத்தில் போலீசார் பெண்களுக்கு இழைத்த கொடுமைகளை அன்னை எதிர்த்தார்.

சாரதா தேவி கல்கத்தாவிலையே காலம் கழிக்க ஆரம்பித்தார். கி.பி.1911ல் அன்னை தமிழகம் வந்து சென்னை கபாலீஸ்வரர் கோயிலிலும் பார்த்தசாரதி கோயிலிலும் தரிசனம் செய்தார். பின்னர் இராமேஸ்வரம் சென்று இறைவனை தரிசித்து லிங்கத்திற்கு கங்கை நீராலும் 108 தங்க வில்வ தளங்களாலும் பூஜை செய்தார். கி.பி.1919ல் அவரது சொந்த ஊரான ஜயராம்பதிக்கு சென்று ஒராண்டு தங்கிவிட்டு கொல்கத்தா திரும்பியவர் அடுத்த 5 மாதங்கள் காய்ச்சலில் அவதிப்பட்டு கி.பி.1920 ஜூலை 21ல் மறைந்தார். கடைசியாக பக்தர்களுக்கு "உங்களுக்கு மன அமைதி வேண்டுமென்றால் அடுத்தவர் குறையை காணாதீர்கள். உங்கள் தவறுகளை பாருங்கள். அதை சரி செய்ய கற்றுக்கொள்ளுங்கள். யாரும் அன்னியன் இல்லை. இந்த முழு உலகமும் உனக்கு சொந்தமானது" அறிவுரை கூறினார். அவரது உடல் கங்கை ஆற்றின் எதிர்கரையில் உள்ள பேலூர் மடத்தில் தகனம் செய்யப்பட்டது. ஆன்மீகம் தியானம் மக்களின் உன்னத வாழ்வுக்கு அறிவுரைகள் என்றே இராமகிருஷ்ணருக்கு பின்னான காலத்தை கழித்து மறைந்தார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்