131) மெஹர்பாய் டாட்டா
மெஹர்பாய் டாடா (கி.பி.1879-1931) :
இந்திய வரலாற்றில் இடம்பிடித்த ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகனான தோரப்ஜி டாடாவின் மனைவி. அந்த காலத்தில் பெண்ணுரிமை போராட்டங்களை முன்னெடுத்து முதல் பெண்மணியாகவும் டென்னிஸ் உலகில் தனது பராம்பரிய இந்திய உடையுடன் களத்தில் இறங்கி வெற்றி பெற்ற பெண்மணியாகவும் அறியப்படுகிறார். இவரது கணவரின் சகோதரின் பேரன் தான் இன்றைய ரத்தன் டாடா அவர்கள். மெஹர்பாயின் சகோதரரான ஜஹாங்கீர் பாபாவின் மகன் தான் இந்திய அணுசக்தி வளர்ச்சிக்கு அடிகோலிய டாக்டர் ஹோமி பாபா அவர்கள். மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் வாழ்க்கைபட்டாலும் இந்திய பெண்களின் அடிப்படை உரிமை, பெண்களுக்கு வாக்குரிமை, குழந்தை திருமணத்தை ஒழித்தல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பர்தா முறை நீக்குதல் ஆகியவற்றுக்காக போராடியவர் இவர்.
மெஹ்ரி என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் கி.பி.1879 அக்டோபர் 10ல் மும்பையில் அப்போதைய மைசூர் மாநிலத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரலான எச்.ஜே.பாபாவின் மகளாக பார்சி குடும்பத்தில் பிறந்தார். இலக்கியம், பியானோ, டென்னிஸ் மற்றும் குதிரை சவாரி போன்றவற்றில் விருப்பமுடையவர். இந்திய பராம்பரிய உடையான சேலையில் டென்னிஸ் விளையாட விருப்பமுடையவர் இவர். இவர் மேற்கு இந்திய டென்னிஸ் போட்டியில் டிரிபிள் கிரவுன் பதக்கம் பெற்றார். டென்னிஸ் போட்டிகளில் பராம்பரிய சேலையில் விளையாடியே 60 பக்கங்களுக்கு மேல் வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் சேலை அணிந்து விளையாடிய முதல் பெண்மணி இவரே. அந்த காலகட்டத்தில் மோட்டார் காரை இவரே ஓட்டவும் செய்தார். ஒரு முறை ஜாம்செட்ஜி டாடா இவரது தந்தையை மைசூரில் இவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிய போது இவரை கண்டார். இவரை தனது மகனான டோராப்ஜி டாடாவுக்கு நிச்சயம் செய்ய முடிவு செய்து மகனை மைசூருக்கு அனுப்பி பெண் பார்க்க ஏற்பாடு செய்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் பிப்ரவரி 14, 1898ல் இருவருக்கும் திருமணம் நடந்தது.
கி.பி.1904ல் ஜரோப்பிய பயணத்தினால் தாக்கத்தினால் இந்திய பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்கள் சங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதினார். இதன் விளைவாக கி.பி.1905ல் நடந்த தொழில்துறை கண்காட்சியின் ஒரு பகுதியாக பெண்களின் கைவினை பொருட்கள் கண்காட்சியை ஏற்பாடு செய்தார். கி.பி.1912ல் விமானத்தில் பறந்த முதல் இந்திய பெண்மணியாக பெருமை பெற்றார். கி.பி.1921ல் இவரது போராட்டத்தால் பம்பாய் சட்டசபை பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது. கி.பி.1924ல் வெம்ப்லியில் இந்திய மகளிர் சங்க மாநாட்டை நடத்தியதுடன் இந்திய மகளிர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார். இவரது முயற்சியால் சர்வதேச மகளிர் கவுன்சிலில் இந்தியா இணைக்கப்பட்டது. கி.பி.1927 நவம்பர் 29ல் மிக்சிகனில் இந்து திருமண மசோதாவுக்காக வழக்கு தொடர்ந்தார். கி.பி.1929ல் இயற்றப்பட்ட சாரதா சட்டம் அல்லது குழந்தை திருமண தடை சட்டத்தின் ஆலோசனைக் குழுவில் இவரும் இருந்தார். கி.பி.1930ல் நடைபெற்ற அகில இந்திய மகளிர் மாநாட்டில் பெண்களுக்கு சம அரசியல் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இன்று டாடா ஸ்டீல் நிறுவனம் நிலைத்து நிற்பதற்கு இவரே காரணம். இவரது கணவரான டோராப்ஜி டாடா இவருக்கு கி.பி.1900ல் கோஹினூர் வைரத்தை விட இரண்டு மடங்கு பெரிய 245.35 காரட் எடையுள்ள ஜூபிலி வைரத்தை 1 லட்சம் பவுண்ட் மதிப்பிலானதை திருமண பரிசாக வழங்கினார். இவர் அதை பிளாட்டினம் சங்கிலியில் வைத்து விசேஷ சமயங்களில் மட்டுமே அணிந்தார். கி.பி.1924ல் டாடா ஸ்டீல் நிறுவனம் நிதிநிலைமையினால் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நிறுவனத்திற்கு நிதி திரட்ட இவர் தனது ஜூபிலி வைரம் மற்றும் தனிப்பட்ட சொத்துக்கள் இம்பீரியல் வங்கியிடம் அடகு வைக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஒரு தொழிலாளி கூட பணிநீக்கம் செய்யப்படாமல் நிறுவனம் செயல்பட்டது. நிறுவனம் மீண்டதும் ஜூபிலி வைரம் மீட்கப்பட்டது. ஆனாலும் இவரின் கணவரின் மறைவுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையை உருவாக்க ஜூபிலி வைரம் விற்கப்பட்டது. கி.பி.1929ல் இவருக்கு 50வது வயதில் லூக்கோமியா புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் இவர் பெண்ணுரிமை தொடர்பான போராட்டங்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். கி.பி.1931ல் இவர் புற்றுநோயால் காலமானார். இதன் பின்னர் இவரது கணவரான டோராப்ஜி டாடா இரத்த நோய்கள் பற்றிய ஆய்வுகளை முன்னேற்றுவதற்காக லேடி டாடா மொமோரியல் டிரஸ்ட்டை உருவாக்கினார்.


Comments
Post a Comment