132) அரக்கல் பீபி இரண்டாம் ஜூனுமாபே
அரக்கல் பீபி இரண்டாம் ஜூனுமாபே (ஆட்சி : 1777-1819) :
வரலாற்றில் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய மைசூர் புலி திப்பு சுல்தானின் அணியில் இணைந்து அவருக்கு சாதகமாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் தான் இன்றைய கேரளத்தில் கண்ணூர் (அரக்கல்) பகுதியின் ராணியாக கி.பி.1777 முதல் கி.பி.1819 வரை ஆட்சியில் இருந்த அரககல் பீபி இரண்டாம் ஜூனுமாபே ...
அரக்கல் ராஜ்ஜியம் இன்றைய கேரளாவின் மலபார் பகுதியில் கண்ணனூரில் அமைந்த ஒரு முஸ்லீம் ராஜ்யம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கொளத்து ராஜாவின் மகளான ஒரு இளவரசி சிறு வயதில் குளத்தில் குளிக்கும்போது மூழ்கினார். சக தோழிகள் அவரை காப்பாற்ற சப்தம் எழப்பியதை கேட்டு அந்த வழியே வந்த முஸ்லீம் சிறுவன் மூழ்கி கொண்டிருந்த சிறுமியை இளவரசி என்று அறிந்து அந்த நேரத்தில் கேரளாவில் தீண்டாமை இருந்ததால் சிறிது தயங்கினாலும் குளத்தில் குதித்து சிறுமியை காப்பாற்றினான். மேல் சாதியினரை தீண்டினால் மரண தண்டனை விதிக்கும் சட்டமும் இருந்தது. சிறுமிக்கு உடலை மறைக்க புடவை கொடுத்தான். அந்த காலத்தில் புடவை கொடுத்தால் திருமணம் முடிந்ததாக அர்த்தம் கொள்ளப்பட்ட காலம் என்பதால் இருவரும் திருமணம் ஆனவர்களாக கருதப்பட்டும் முஸ்லீம் தொட்டதால் தீட்டு பட்டதாகவும் அரண்மனையில் இளவரசியை நுழைய அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். அரசரும் தன் மகளை அரண்மனையில் நுழைய அனுமதிக்காமல் அவளுக்கும் அவரது கணவரான முஸ்லீம் சிறுவனுக்கும் அவரது இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியை கொடுத்து ஆள பணித்தார். அவர்களின் வழிவந்ததே அரக்கல் ராஜ்ஜியம். ஆட்சியாளரின் மகள் அரக்கல் பீபி என்று அழைக்கப்பட்டார். அவர் மூழ்கிய "சிறக்கல் குளம்" இன்றும் உள்ளதாக நம்புகிறார்கள். குடும்பத்தில் மூத்த உறுப்பினர் ஆணோ அல்லது பெண்ணே அவரே ஆட்சியாளராக அரியணையில் அமருகிறார். கி.பி.1728ல் இருந்த ராணி காலனி படைகளுக்கு எதிராக போர் முரசு கொட்டினார்.
அலி ராஜா குன்ஹி அம்சா II மைசூர் சாம்ராஜ்யத்தின் கிருஷ்ணராஜ உடையார் ஹைதர் அலியை பதவியில் இருந்து நீக்கியபோது அவருக்கு ஆதரவு அளித்து அவருடன் கூட்டணியில் இணைந்து கொண்டார். இந்த சமயத்தில் அவர் மாலத்தீவின் மீது போர்தொடுத்து அதன் சுல்தான் முஹம்மது இமானுதீனை தோற்கடித்து மாலத்தீவுகளை கைப்பற்றினார். அது முதல் மாலத்தீவுகள் அரக்கல் இராஜ்யத்தின் ஒரு பகுதியாயிற்று. அவருக்கு பின்னர் வந்த அரக்கல் ராணி பீபி இரண்டாம் ஜூனுமாபே கி.பி.1777ல் ஆட்சிக்கு வந்தார். இவர் துருக்கியின் ஓட்டோமான் அரசருக்கு கடிதம் எழுதி பிரிட்டிஷ் மற்றும் போர்த்துகீசிய மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு கேட்டார். பின்னர் கி.பி.1780ல் இவரின் ஆட்சியில் போது திப்பு சுல்தான் இவரது அரண்மனைக்கு வந்து தங்கினார். ராணியின் மகளுக்கும் திப்புவின் மகனான அப்துல் காலிக் இடையே திருமண ஒப்பந்தம் நடந்தது. ஆனாலும் இந்த திருமணம் நடந்ததாக தகவலில்லை. திப்பு சுல்தானின் படைகளுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் படைதிரட்டும் முனைப்பில் இருந்த போது திப்புவின் ஆதரவாளராக இருந்த இவர் கி.பி.1783ல் கண்ணூர் வழியாக ஆங்கிலேய படைகள் செல்ல தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் திடிரென்று கண்ணூரை தாக்கி வீழ்த்தி வெற்றி பெற்றனர். ராணி மற்றும் அவரது குடும்பத்தை சிறை வைத்து போலி ஆவணம் தயாரித்து படைமுகாமை அமைத்துக் கொண்டனர். இதன் பின்னர் சில மாதங்கள் கழித்து கி.பி.1784ல் ராணியை விடுதலை செய்து தங்களுடைய சேவையில் இருப்பதாக காண்பித்து கி.பி.1784 ஏப்ரல் மாதத்தில் இருந்து கண்ணணூரில் இராணுவ முகாமை அமைத்துக் கொண்டனர். பின்னர் கி.பி.1790ல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் எழுதி கையெழுத்திட கேட்க ராணி மறுத்து விட்டார். மீண்டும் திப்புவுடன் இணைந்து போர் முரசு கொட்டினாலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முன்பு அவரால் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் நீண்ட வற்புறுத்தலுக்கு பின்னர் கி.பி.1796ல் கண்ணணூர் மற்றும் லக்காடிவ் தீவுகளை பிரிட்டிஷ் பாதுகாப்பில் விட நேர்ந்தாலும் இவர் தொடர்ந்து ஆட்சி புரிய அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் திப்புவின் மரணத்திற்கு பிறகு எந்தவித உதவிகளும் இல்லாமல் ஆங்கில ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு சுதந்திர ராணியாக இருந்து ஆட்சி புரிந்து கி.பி.1819ல் 42 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பெருமையுடன் மறைந்தார். இவர் மறைவுக்கு பின்னர் அரக்கல் இராஜ்யம் பிரிட்டிஷ் அரசுடன் இணைந்தது. சிறிய அரசாக இருந்தாலும் துணைக்கு தகுந்தவர்களை அழைத்து பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்க முயன்றாலும் இவரது முயற்சி தோல்வியிலையே முடிந்தது.

Comments
Post a Comment