133) பேகம் ஷம்ரூ

 பேகம் ஷம்ரூ (கி.பி.1753-1836) :


வரலாற்றில் தங்களின் தியாகத்தாலும், வீரத்தாலும், கருணையினாலும் எத்தனையோ பெண்கள் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அவர்களுள் ஒருவராக இவர் நடன பெண்ணாக இருந்து ஒரு நாட்டின் ஆட்சியாளராக மாறி நாட்டை திறம்பட நிர்வகித்த பெருமையுடையவர். முஸ்லீமாக பிறந்து இவரின் ஐரோப்பிய கணவரால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஆட்சி புரிந்தார். கி.பி.19ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட ஒரே கத்தோலிக்க ஆட்சியாளராக இவர் மட்டுமே இருந்தார்.

கி.பி.1753ல் பிறந்த இவர் காஷ்மீரி குடும்பத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பர்சானா ஜெப்புன்னிஸா. இவரது தந்தையான லத்தீப் அலி கான் அரேபிய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தந்தை இவரது 6 வயதில் மறைந்த போது தந்தையின் இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த சகோதரரின் கொடுமைகளால் இவரும் இவரின் தாயும் டெல்லிக்கு குடிபுகுந்தனர். அங்கு பிழைப்புக்காக நடன தொழிலை கற்றுக்கொண்டு இவர் நடன கலைஞராக மாறினார். இவர் பரத்பூர் ராஜாவான ஜவஹர் சிங்கின் கீழ் வேலைக்கு இருந்தார். இந்த நேரத்தில் கி.பி.1765களில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கூலிப்படை தலைவரான வால்டர் ரெய்ன்ஹார்ட் சோம்ப்ரே டெல்லியின் சாவ்ரி பஜாரில் நடன பெண்ணாக இவரை நடன விருந்தின் போது சந்தித்தார். இருவரும் இணைந்து வாழ்ந்தனர். இந்த நேரத்தில் சோம்ப்ரே ஜாட் ஆட்சியாளர்களுக்காக வேலை செய்ய தொடங்கினார். மொகலாயர்கள் ஜாட்களை ஆக்ராவில் இருந்து வெளியேற்றியவுடன் இவர் மொகலாயர் துருப்புகளில் இணைந்தார். மொகலாயர்களின் அரசவையில் செல்வாக்கு பெற்றனர். இதனால் கி.பி.1776ல் மொகலாய அரசரான ஷாவிடம் இருந்து சர்தானா பகுதியை உரிமையாக பெற்றனர். சோம்ப்ரே ஆக்ராவின் சிவில் மற்றும் இராணுவ ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். ஆனாலும் அடுத்த 2 வருடத்தில் கி.பி.1778ல் சோம்ப்ரே மறைந்தார். அவரது மகனான ஜஃபர்யப் கான் அடுத்த ஜாகிர்தாராக ஆகுவதற்கு மொகலாய நஜாஃப் கானின் ஆதரவை பெற்று சர்தானாவை தனக்கு ஜாகீராக பெற்று ஆட்சியாளராக மாறினார். 

சுமார் 100க்கு மேற்பட்ட ஜரோப்பியர் உட்பட 4000 துருப்புகளின் தளபதியாக மாறி இன்றைய மீரட்டுக்கு அருகிலுள்ள சர்தானா இராஜ்ஜியத்தில் நீதிமன்றத்தை நடத்தினார். அரசவையில் தலைப்பாகை அணிந்து ஹூக்கா புகைத்து ஆண் ஆட்சியாளரை போல அரசு புரிந்தார். கி.பி.1781ல் கத்தோலிக்க மதத்திற்கு மாறி ஜோனா என்ற பெயரை சூடினார். ஆனாலும் மொகலாயர்கள் உடை மற்றும் ஆச்சாரங்களை கடைப்பிடித்தார். பர்தாவை போர்களில் துறந்து படை நடத்தி வெற்றி பெற்றார். மொகலாய அரசர் ஷா ஆலம் ரோஹில்லாவின் குலாம் காதிர் கானின் படைகளால்  துன்புறுத்தப்பட்ட போது மராத்திய படைகள் அவரை மீட்கும் முயற்சியில் இவரும் துணை நின்றார். ஷா ஆலம் இவரை "அன்பான மகள்" என்று அழைத்தார். மேலும் இவருக்கு ஜெபுன்னிஸ்ஸா (பெண்களின் ஆபரணம்) என்ற பட்டத்தையும் வழங்கினார். 

பின்னர் தனது 40வது வயதில் பிரெஞ்சு காதலரை இரகசிய திருமணம் செய்தார். ஆனால் அவர் போரில் கொல்லப்பட்டார் இவரும் தன்னை தானே குத்தி கொண்டு தற்கொலை செய்ய முயன்றாலும் பலத்த காயமடைந்தார். ஆனாலும் பின்னர் சிகிச்சையினால் குணமடைந்தார். பின்னர் அவரது ஜாகீரை ஆங்கிலேயர்கள் பறிக்க விரும்பினர். இந்த நேரத்தில் சீக்கியர்களால் பிணைகைதியான ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை மீட்க உதவியதால் இவர் ஆங்கிலேயருக்கு உதவியாக இருப்பார் என்று நம்பி வைஸ்ராய் லார்ட் காரன்வாலிஸ் இவருடைய ஜாகீரை அங்கீகரித்தார். இதன் பின்னர் அடுத்து 30 வருடங்கள் இவர் சர்தானாவை ஆண்டார். சர்தானாவில் இத்தாலிய பாணியில் ஒரு அரண்மனையை கட்டினார். டெல்லி சாந்தினி செளக்கில் உள்ள பகீரத் அரண்மனை மொகலாய அரசரால் இவருக்கு பரிசளிக்கப்பட்டது. அமைதியான முறையில் நாட்டின் நிர்வாகத்தை கவனித்து வந்தார். கி.பி.1826ல் பிரிட்டிஷ் துருப்புக்கள் பரத்பூர் ராஜாவுக்கு எதிராக போராடிய போது அவர்களின் வற்புறுத்தலால் தனது துருப்புக்களை பிரிட்டிஷ்ஷாருக்கு ஆதரவாக அனுப்பினார்.  கி.பி.1836 ஜனவரி 27ல் தனது 83வது வயதில் இவர் சர்தானாவில் மறைந்தார். மீரட்டில் இவர் கட்டியிருந்த அன்னை மரியா தேவாலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். நடன பெண்ணாக இருந்து 55 ஆண்டுகள் சர்தானா இராஜ்ஜியத்தை ஆண்டது இவரது அழகால் மட்டுமல்ல இவரது புத்திசாலிதனத்தாலும் தான். ஆனாலும் சிலரால் சூனியக்காரி என்று ஆரம்ப காலங்களில் அழைக்கப்பட்டாலும் இவர் திறமையாக ஆட்சி புரிந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்