134) ஃபாத்திமா பேகம்
ஃபாத்திமா பேகம் (கி.பி.1892 - 1983) :
சரித்திரத்தில் நின்ற பெண்மணிகளுள் இவரும் ஒருவர். தற்போது கூட இந்திய சினிமாவில் ஒரு சில பெண் இயக்குனர்களே உள்ளனர். ஆனால் திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு முதன் முதலில் ஊமை படங்களாக வந்த போது இவர் பேசா திரைப்படங்களை இயக்கியதோடு நடிகை மற்றும் தயாரிப்பாளராக பன்முக அவதாரம் எடுத்த பெண்மணி இவர். இந்தியாவின் முதல் பேசும் திரைப்படத்தில் இவர் மகளே நடிகையாக அறிமுகம் ஆனார்.
இவர் கி.பி.1892ல் உருது முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவர் இன்றைய சூரத் அருகிலுள்ள சச்சின் நகரை சேர்ந்த நவாப் சிடி இப்ராஹிம் முஹம்மத் யாகூத் கான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஜூபைதா, சுல்தானா உட்பட 3 மகள்கள் பிறந்தனர். இவர்களில் ஜூபைதா மற்றும் சுல்தானா ஆகியோரும் நடிகைகளாக இருந்தனர். ஃபாத்திமா பேகம் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து பின்னர் திரைப்படங்களுக்கு மாறினார். கி.பி.1922ல் பேசா படமான "வீர அபிமன்யு" படத்தில் அறிமுகனார். இவர் கி.பி.1926ல் ஃபாட்மா பிலிம்ஸை ஆரம்பித்தார். பின்னர் கி.பி.1928ல் அது விக்டோரியா ஃபாட்மா பிலிம்ஸாக மாறியது. கி.பி.1926ல் புல்புல்-இ-பாரிஸ்தான் படத்தின் மூலம் இந்தியாவின் முதல் பெண் இயக்குனராக ஆனார். அதன் பின்னும் இவர் பல படங்களை இயக்கினார். கி.பி.1929ல் லக் ஆஃப் லக் என்ற படத்தை இயக்கியதற்கு பிறகு படம் இயக்கவில்லை. இவர் கோஹினூர் மற்றும் இம்பீரியல் ஸ்டியோவில் நடிகையாக இருந்தாலும் தனது ஃபாட்மா பிலிம்ஸில் சொந்த படங்களை எழுதி, இயக்கி தயாரித்து நடித்தார். கி.பி.1938ல் துனியா கியா ஹை என்ற படத்தை தயாரித்து நடித்ததே இவரது கடைசி திரைப்படமாக ஆனது. இவரது மகளான ஜூபைதா கி.பி.1931ல் வெளியான இந்தியாவின் முதல் பேசும் படமான "ஆலம் ஆரா"வில் நடித்தார். இவர் தனது 91வது வயதில் கி.பி.1983ல் மறைந்தார்.

Comments
Post a Comment