136) லூர்தம்மாள் சைமன்
லூர்தம்மாள் சைமன் (கி.பி.1912-2002) :
இந்திய சரித்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அந்த வகுப்பில் பிறந்து அவர்களின் நலனுக்காக பாடுபட்டு அமைச்சரவையில் இடம்பெற்று அவர்களின் நலனுக்காக போராடியவர்களுள் இவரும் ஒருவர். மீனவர் குடும்பத்தில் பிறந்து மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்று அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர். ஜப்பானின் ஜிலேபி வகை மீன்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் இவரே. அதனால் அந்த மீனுக்கு லூர்தம்மாள் மீன் என்று வேறு பெயரும் உண்டு.
இவர் கி.பி.1911 செப்டம்பர் 26ல் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி என்னும் கிராமத்தில் மீனவர் குடும்பத்தில் அலெக்சாண்டர் - பார்பரம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது தாய் இவரது சிறு வயதிலையே மரணமடைந்து விட்டார். இவரது தந்தை இலங்கை கொழும்பு துறைமுகத்தில் கருவாட்டு ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்தார். இவர் நாகர்கோயில் புனித ஜோசப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை ஆங்கில பள்ளி பயின்றார். பின்னர் அதே பள்ளியில் சம்பளம் பெறாத ஆசிரியராக பணியாற்றினார். இவருக்கும் குளச்சல் நகரை சேர்ந்த அலெக்சாண்டர் இம்மானுவேல் சைமனுக்கும் திருமணம் நடந்து இருவரும் வளைகுடா நாட்டில் கணவரின் பணிநிமித்தம் காரணமாக குடிபுகுந்தனர். தம்பதிகளுக்கு இரு மகன்கள் பிறந்தவுடன் தாயகம் திரும்பி நாகர்கோவில் நகரில் குடியேறினர். பின்னர் மேலும் இரு மகன்கள் பிறந்தனர். இந்த நேரத்தில் இவரது கணவர் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார்.
இவரது கணவர் சுதந்திரம் அடைந்த சமயத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்ததால் கி.பி.1951ல் விளவங்கோடு தொகுதியிலும் கி.பி.1954ல் கொல்லங்கோடு தொகுதியிலும் வெற்றி பெற்று கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் கி.பி.1956ல் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் கன்னியாகுமரி சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்ட போது இவரது கணவரின் நண்பரான கேரள காங்கிரஸின் தலைவரான ஏ.ஜே.ஜானின் சிபாரிசின் பேரில் காமராஜரால் தேர்தலில் நிறுத்தப்பட்டு கி.பி.1957ல் குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கி.பி.1957-62ல் காமராஜர் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். தமிழ்நாட்டில் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார்.
மீன்வளத்துறை அமைச்சராக மீன் வளர்ப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் சீனாவிலிருந்து வெள்ளிகெண்டை மீனையும் புற்களை மட்டுமே விரும்பி சாப்பிடும் புல் கெண்டை மீனை ஜப்பான் நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்து மீன் வளர்ப்பை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தினார். இந்தோ-நார்வே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பஞ்சு நூல் மீன் தூண்டிலுக்கு பதிலாக நவீன தூண்டில்கள், டிஸ்கோ வலை என்று மீன்பிடி தொழிலை நவீனப்படுத்தினார். ஏழை மீனவர்களுக்காக கூட்டுறவு சங்கம் அமைத்து அவர்களுக்கு விசைப்படகுகள் மானிய விலையில் வழங்கினார். நவீன விசைப்படகுகள் கட்டுமரம் மீன்பிடி மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளானதால் இரு பிரிவுகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டது. ஆனால் இவர் நவீனத்தை புகுத்தியதால் அவர்களின் பொருளாதார நிலை மேம்பட்டது. மீன்களை ஏற்றுமதி செய்ய ஊக்குவித்து நல்ல வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்தார். மீனவர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டங்களை ஏற்படுத்தி கொடுத்தார். ஏரி குளம் ஆகியவற்றில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்காக சிலோப்பியா மீனை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து நீர்நிலைகளில் விட்டு வளர்த்தார். இந்த ஜப்பானிய கெண்டை மீனுக்கு லூர்தம்மாள் மீன் என்று இன்னொரு பெயரும் உண்டு. உள்ளாட்சி அமைச்சராக பெயரளவுக்கு இருந்த அமைப்புகளை மாற்ற "தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்" இவரால் உருவாக்கப்பட்டு மாவட்ட ஆட்சிக்குழ முற்றிலும் கலைக்கப்பட்டு கிராமம் மற்றும் ஒன்றியம் அளவில் பஞ்சாயத்து கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்கள் நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. பெண்களுக்கு மாதர் சங்கங்களை ஏற்படுத்தி தையல் பயிற்சி, எம்பிராய்டரி மற்றும் வலை பின்னுதல் பயிற்சிகளை வழங்கினார். கோட்டாறு அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ததில் இவரின் பங்கு அதிகம். மீனவ கிராமங்களில் பஞ்சாயத்து நூலகங்கள் அமைத்து கொடுத்தார். கி.பி.1962ல் சாதி ரீதியான ஒட்டுகளால் இவர் தோல்வியுற்றதால் அரசியலிலிருந்து விலகினார். ஆனாலும் கி.பி.1982ல் நடந்த மண்டக்காடு கலவரத்துக்கு பின்னால் மீனவர்களுடன் 3நாட்கள் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். கணவரின் மரணத்திற்கு பின்னால் மகன்களின் ஆதரவுடன் வாழ்ந்து வந்தவர் கி.பி.1992ல் நடந்த விபத்திற்கு பின்னர் வீல் சேரிலையே முடங்கி போனார். கி.பி.1997ல் சட்டமன்ற வைர விழாவின் போது அப்போதைய முதல்வரான கலைஞர் கருணாநிதி இவரை அழைத்து பரிசுகள் வழங்கி கெளரவப்படுத்தினார். கி.பி.2002 மே 4ல் இவர் சென்னை அண்ணா நகரில் மறைந்தார். தமிழ்நாடு அரசு மேல மணக்குடி மற்றும் கீழ மணக்குடியை இணைக்கும் பாலத்திற்கு இவர் பெயரை சூட்டி பெருமைப்படுத்தியது.


Comments
Post a Comment