138) சுஹாசினி கங்குலி
சுஹாசினி கங்குலி (கி.பி.1909-1965) :
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தங்களின் தியாகத்தாலும் தன்னலமற்ற உள்ளத்தாலும் இடம்பிடித்த பெண்களுள் இவரும் ஒருவர். படிக்கும் காலத்திலையே கல்லூரியில் புரட்சிகர இளைஞர்களின் இயக்கத்தில் இணைந்து ஆயுதமேந்தி இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஈடுபட்டவர் இவர்.
இவர் கி.பி.1909 பிப்ரவரி 3ல் இன்றைய பங்களாதேஷில் குல்னா என்னும் ஊரில் அவினாஷ் சந்திர கங்குலி மற்றும் சரளா சுந்தரா தேவி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவர் கி.பி.1924ல் டாக்கா ஈடன் பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். மேற்படிப்பு படிக்கும்போதே கொல்கத்தாவில் காது கேளாத வாய் பேசமுடியாத குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்ததால் இன்டர்மீடியட் ஆஃப் ஆர்ட்ஸ் படிப்பை நிறுத்திவிட்டு ஆசிரியராக வேலை பார்த்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்த போது கமலா தாஸ்குப்தா மற்றும் கல்யாணி தாஸ் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் இவரை புரட்சிகர முன்னணியான ஜூகந்தர் கட்சிக்கு அறிமுகப்படுத்தினர். இவர் சத்ரி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
கமலா தாஸ் குப்தா மற்றும் சத்ரி சங்க நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இவர் நீச்சல் கற்று கொடுக்க ஆரம்பித்தார். அங்கு அவருக்கு புரட்சியாளர் ரஷிக் தாஸுடன் நட்பு ஏற்பட்டது. இவரது நடவடிக்கையை பிரிட்டிஷ் அரசு கண்டறிந்ததால் தற்காலிகமாக சந்தன் நகரில் அடைக்கலம் புகுந்தார். கி.பி.1930 ஏப்ரல் 18ல் சிட்டகாங்க் ஆயுதகிடங்கு தாக்குதல் நடந்தது. இதற்கு பின்னர் சத்ரி சங்கத்தின் அறிவுறுத்தலின் படி சஷாதர் ஆச்சார்யா மற்றும் சுஹாசினி கங்குலி ஆகியோர் கணவர்-மனைவி வேடத்தில் ஆயுதக்கிடங்கு தாக்குதலில் தொடர்புடைய ஆனந்த் சிங், லோகநாத் பால், ஆனந்த் குப்தா, ஜிபன் கோஷல் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்தார். கி.பி.1930 செப்டம்பர் 1ல் காவல்துறை இந்த விஷயத்தை மோப்பம் பிடித்து இவர்களின் வீட்டை சோதனை செய்ய மோதலின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் ஜிபன் கோஷ் மரணமடைந்தார். மற்றவர்களுடன் சுஹாசினி கங்குலியும் பிடிபட்டு சிறையில் அடைக்கப்ட்டாலும் விரைவில் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னரும் கி.பி.1932ல் வங்காள கவர்னராக இருந்த ஸ்டான்லி ஜாக்சனை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் சுட்டு கொல்ல முயன்ற பினா தாஸூடன் இணைந்து செயல்பட்டதால் இந்த வழக்கில் சிறைபிடிக்கப்பட்டு கி.பி.1932-1938 வரை சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வந்த பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளாததால் இவர் போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் தனது காங்கிரஸ் தோழர்களுக்கு உதவியாக இருந்தார். செயல்பாட்டாளர் ஹேமந்த் தரப்தாருக்கு அடைக்கலம் கொடுத்ததால் கி.பி.1942-1945 வரை சிறையில் அடைக்கப்பட்டார். நாடு விடுதலை அடைந்த பிறகும் கம்யூனிஸ்ட் என்ற காரணத்தால் 1948-49களில் பல மாதங்கள் சிறையில் இருந்தார். அதன் பிறகு சமூக போராட்டங்களில் கலந்து கொண்டார். கி.பி.1965ல் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த இவருக்கு கொல்கத்தா பிஜி மருத்துவமனையில் அலட்சியமான மருத்துவத்தின் காரணமாக டெட்டனஸ் நோயால் பாதிக்கப்பட்டு கி.பி.1965 மார்ச் 23ல் மரணமடைந்தார்.


Comments
Post a Comment