14) மங்கையர்க்கரசி நாயனார்
மங்கையர்க்கரசி நாயனார் :
அன்னியனின் அடக்குமுறையை எதிர்த்து போரிட்ட பெண்மணிகளும் உள்ளனர். பக்தியினால் தன்னலமற்ற பண்பினால் மக்களின் மனதை வென்ற பெண்மணிகளுள் ஒருவர் தான் மங்கையர்க்கரசி நாயனார்.
மதுரையை ஆட்சி செய்த கூன் பாண்டியன் எனப்படும் சீர் நெடுமாறன் சோழநாட்டின் மீது போர் தொடுத்து சோழ மன்னன் மணிமடிச்சோழனை வென்றார். பின்னர் அவரின் மகளான மங்கையர்க்கரசியை மணந்து பட்டத்தரசியாக்கினார். முதுகு வளைந்திருந்த காரணத்தால் இவர் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். இவர் சமண மதத்தை ஆதரித்தார். அரசியோ சிவனை வழிபட்டவர். கூன் பாண்டியனின் அமைச்சர்களில் குலச்சிறையார் என்பவர் மட்டுமே சைவத்தை பின்பற்றினார். மற்றவர்கள் அனைவரும் சமணத்தை பின்பற்றினார்கள். அதனால் அரசி சோழ நாட்டில் திருஞான சம்பந்தர் திருப்பதிகங்கள் பாடி வருவதை அறிந்து கணவருக்கு தெரியாமல் குலச்சிறையாரை அனுப்பி திருஞான சம்பந்தரை மதுரைக்கு வருமாறு அழைத்தார். மதுரைக்கு வந்த திருஞான சம்பந்தர் ஒரு மடத்தில் தங்கியிருக்க அரசி யாருக்கும் தெரியாமல் அமைச்சருடன் சென்று நன்றி தெரிவித்து பதிகங்கள் அவர் வாயால் பாட கேட்டு மகிழ்ந்தார். சமணர்கள் திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் விஷயம் அறிந்து மன்னனிடம் சொல்லி மடத்தை கொளுத்த கூறினார்கள். திருஞான சம்பந்தருக்கு தீயினால் எந்த தீங்கும் நேரவில்லை. தனக்கு தீங்கு இழைத்தவர்களுக்கு தீப்போல் உடல் சுட வேண்டும் என்று பதிகம் பாட கூன் பாண்டியனின் உடல் வெப்ப நோயால் கொதிக்க தொடங்கியது. மருத்துவர்களாலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. அரசி திருஞானசம்பந்தரை அழைத்து வந்தார். சமணர்களும் உடனே வந்தனர். யார் குணப்படுத்தினாலும் நான் அவர்கள் அவர்கள் பக்கம் என்று மன்னர் கூறினார். சமணர்கள் ஒரு பக்க நோயை தாங்களும் மறுபக்க நோயை திருஞானசம்பந்தரும் குணப்படுத்தட்டும். யார் குணப்படுத்தினாலும் நாங்கள் தான் குணப்படுத்தியதாக கூற வேண்டும் என்று மன்னனிடம் கூறினர். திருஞானசம்பந்தர் பாடல் பாட மன்னனின் சூலை நோய் நீங்கிற்று. மன்னனும் திருஞான சம்பந்தரால் தான் வெம்மை நோய் நீங்கிற்று என்று உண்மையை சொன்னார். அதனுடன் தானும் சைவ சமயத்திற்கு மாறுவதாக அறிவித்தார். அந்த பாடல் இது தான்:
"கூற்றாயினவாறு விலக்ககிலீர்கொடுமைபல செய்தனநானறியேன் ஏற்றா அடிக்கேஇரவும்பகலும் பிரியாதுவணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின்அகம்படியே குடரோடு துடக்கிமுடக்கியிட ஆற்றேன் அடியேன்அதிகைக்கெடில வீரட்டானத்துறைஅம்மானே"
பின்னர் சமணர்கள் திருஞானசம்பந்தரை வாதத்திற்கு அழைத்து தோற்றனர். பின்னர் தங்களது மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை "அனல்வாதம்" என்று நெருப்பில் போட அவை எரிந்து போயிற்று. பின்னர் திருஞானசம்பந்தர் பதிகங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை நெருப்பில் போட அவை எரியாமல் நின்றது. இதை கண்ட மன்னன் ஆச்சரியத்தில் எழுந்து நின்றார். அவரது கூன் நேராகியது. அனல் வாதத்திலும் சமணர்கள் தோல்வியை தழுவியதால் அடுத்து "புனல் வாதம்" எனப்படும் ஆற்றுநீரில் ஓலைச்சுவடிகள் எதிர்த்து செல்லும். அவ்வாறு செல்லவில்லை என்றால் மன்னன் தங்களை கழுவேற்றம் செய்யலாம் என்று அறிவித்து போட்டியை தொடங்கினர். சமணர்கள் ஓலைச்சுவடி ஆற்று நீரில் அடித்துக்கொண்டு போயிற்று. திருஞான சம்பந்தர் பதிகங்கள் பாடிய ஓலைச்சுவடிகள் ஆற்று நீரை எதிர்த்து சென்றது. வாதத்தின் முடிவுப்படி எண்ணாயிரம் சமணர்களை மன்னர் கழுவேற்றினார். இதை தான் மன்னர் சமணர்களை கழுவேற்றி கொன்றார் என்று தவறுதலாக பதிந்து வைத்தனர். எண்ணாயிரம் சமணர்கள் என்பது சரியல்ல என்றும் "எண்ணாயிரம்" என்ற கிராமத்தை சேர்ந்த சமணர்களே வாதத்திற்கு வந்தனர். வாதத்தின் முடிவில் தோல்வியை தழுவிய அவர்களை மட்டுமே கழுவேற்றினார் என்றும் கூறுகின்றனர். சமண மதத்தில் இருந்து நெல்வேலி வென்ற சீர்நெடுமாறன் (கூன் பாண்டியன்) சைவத்திற்கு மாறியது அவரது மனைவி மங்கையர்க்கரசியால். இன்றும் மங்கையர்க்கரசி, சீர் மாறன் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் ஆகியோர் சைவ சமயத்திற்கு செய்த தொண்டுகளால் 63 நாயன்மார்களுள் ஒருவராக குறிப்பிடுகின்றனர். பக்தியினால் இன்றும் மக்களால் வணங்கப்படும் சிறப்பை பெற்றுள்ளார் மங்கையர்க்கரசி அம்மாள்.

Comments
Post a Comment