15) அஹில்யா பாய் ஹோல்கர்
அஹில்யா பாய் ஹோல்கர் : (கி.பி.1725-1795) ஆட்சி : (கி.பி.1767-1795)
இளம் வயதிலையே (29 வயதில்) கணவரை இழந்த இவர் உடன்கட்டை ஏறுவதை தடுத்த இவர் மாமனார் மால்ஹர் ராவ் ஹோல்கர் பொறுப்பில் இவரது மகளான முக்தா பாய்யும் இவரது மகனான மாலே ராவ் ஹோல்கரும் இருந்தனர். மாமனார் மறைந்த பிறகு மகன் மாலே ராவ் ஹோல்கர் பதவியேற்றார். அவரும் சில மாதங்களிலையே இறக்க அடுத்ததாக இவர் பதவியேற்க வேண்டியதாகிட்டது. ஹோல்கரின் பரம்பரையில் மிக குறிப்பிடத்தக்க வகையில் அரசாண்ட ஒரே ராணி இவரே. இவரது ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோயில்களும் வழிபாட்டு தலங்களும் கட்டப்பட்டது. காஷ்மீர் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள கோயில்களுக்கு கங்கை நீரை வழிபாட்டிற்கு அனுப்பி உதவி புரிந்தார். வாரணாசியில் (காசி) உள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து ஒளரங்கசீப் கி.பி.1696ல் "கியான்வாபி மசூதி"யை கட்டினார். இவரது ஆட்சியில் இவரது முயற்சியால் தான் கி.பி.1780ல் காசி விஸ்வநாதர் ஆலயம் புதிதாக கட்டப்பட்டது.
இவர் கி.பி.1725ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத் நகர் மாவட்டத்தில் சாவுண்டி என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு இவரது தந்தையே எழுத படிக்க கற்று கொடுத்தார். இவர் 8 வயதாக இருக்கும் போது பூனேவுக்கு போகும் வழியில் இவரது கிராமத்தின் வழியே பயணப்பட்ட மால்ஹர் ராவ் ஹோல்கர் இவரது நடத்தையும் பக்தியையும் கண்டு வியந்து இவரை தன் மகன் கண்டர்ராவ் ஹோல்கருக்கு திருமணம் செய்து வைத்தார். இவருக்கு கி.பி.1735ல் திருமணம் நடந்தது. கி.பி.1745ல் மூத்த மகனான மாலே ராவ் ஹோல்கரும் கி.பி.1748ல் மகளான முக்தாபாய்யும் பிறந்தனர். கி.பி.1754ல் கும்ஹர் கோட்டையின் முற்றுகையில் இவரது கணவரான கண்டர்ராவ் ஹோல்கர் மரணமடைந்தவுடன் உடன்கட்டை ஏற துணிந்த இவரை இவரது மாமனாரான மால்ஹர் ராவ் ஹோல்கர் தடுத்து நிறுத்தினார். கி.பி.1765ல் ஆப்கானிய அஹ்மத் அலி டெல்லியின் மீது படையெடுத்த போது மால்ஹர் ராவ் அவரை எதிர்க்க சென்றிருந்த சமயத்தில் இவர் குவாலியர் அருகிலுள்ள கோஹாத் கோட்டையை கைப்பற்றினார். அப்போது இவரது மாமனார் இவரை சிறிய வடிவத்திலான வெடி மருந்து உருண்டைகளை தயாரிக்க அறிவுறுத்தினார். அதன் பின்னர் 12 ஆண்டுகளில் கழித்து கி.பி.1766ல் மாமனார் மறைந்தவுடன் மகனான சிறிது மூளை வளர்ச்சியற்ற உடல்நலம் குன்றிய மாலே ராவ் ஹோல்கர் அரியணை ஏறி சில மாதங்களில் மரணமடைய இவரே கி.பி.1767ல் இந்தூரின் அரியணையில் அமர்ந்தார். இவருக்கு உதவியாக மால்ஹர் ராவ் வின் வளர்ப்பு மகனான துகோஜி ராவ் ஹோல்கர் படைகளை கவனிக்க பேஷ்வாவால் அறிவுறுத்தப்பட்டார். இவரது ஆட்சியில் தான் சிறிய கிராமம் என்ற அளவில் இருந்த இந்தூர் பெரிய நகரமாக வளர்ந்தது. இவர் நர்மதை ஆற்றங்கரையில் மஹேஷ்வர் என்ற நகரை அமைத்து தன் தலைநகராக ஆக்கினார். தனது ஆட்சியில் பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சிகள் அளித்து தொழில் உதவிகள் அளித்து அவர்களின் சுய வருமானத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்தார். இவர் இலக்கியம்,இசை தொடர்பான கவிஞர்களை ஆதரித்தார். அவர்களுள் மோராபந்த், ஷாகிர், மஹாராஷ்டிராவின் அனந்தபண்டி, குஷாலி ராம் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இவரால் இந்தியாவில் பல இடங்களில் எண்ணற்ற கோயில்கள் கணக்கு வழக்கில்லாமல் நூற்றுக்கணக்கான கோயில்கள் புதிதாகவும் சில பழுது பார்த்து திரும்ப கட்டப்பட்டுள்ளது. அவைகளில் சிலவற்றை கீழே காணலாம்.
1)ஆலம்பூர் (மத்திய பிரதேசம்) :
ஹரிஹரேஷ்வர், ராம் அனுமான் கோயில், மாருதி கோயில், லக்ஷ்மி நாராயணன் கோயில், கண்டர்ராவ் மார்தந்த் கோயில், மால்ஹரி மார்தந்த்
2) அவுந்த நாக்நாத் (மஹாராஷ்டிரா) கோயில் ஓளரங்கசீப்பின் படையெடுப்பில் இடிக்கப்பட்டதை திரும்ப கட்டினார்.
3) அயோத்தி (உத்திரபிரதேசம்) :
ஸ்ரீ ராம் கோயில், ஸ்ரீ பைரவா கோயில், நாகேஷ்வர் கோயில், சரயூ காத்,
4) பத்ரிநாத் (உத்திரகாண்ட்) :
ஸ்ரீ கேதேஸ்வரர் கோயில், ஹரி கோயில் மற்றும் சில தர்மஸ்தலங்களையும் கட்டினார்.
5) பேளூர் (கர்நாடகா) :
கணபதி, பாண்டுரங்கா,ஜாலேஷ்வர் மற்றும் நெருப்பு கோயில்களை கட்டினார்.
6) பீமா சங்கர் (மஹாராஷ்டிரா) :
இந்த கோயிலில் ஏழைகளுக்கு உணவு வழங்குதலை தன் செலவில் நடத்தினார்.
7) பெர்ஹாம்பூர் (மத்திய பிரதேசம்) :
இங்கு ராஜ் காத், ராம் காத் ஆகியவற்றை கட்டினார்.
8) சந்த்வாத் (மஹாராஷ்டிரா) :
இங்கு விஷ்ணு கோயில் மற்றும் ரேணுகாதேவி கோயில் கட்டினார்.
9) துவாரகா (குஜராத்) :
இங்கு பூஜை மண்டபம் கட்டினார். மேலும் துவாரகீஷ் கோயில் குருக்களுக்கு சில கிராமங்களை தானமாக வழங்கினார்.
10) எல்லோரா (மஹாராஷ்டிரா) :
எல்லோரா குகையிலுள்ள கைலாசநாதர் கோயிலுக்கு பூச்சுமான மற்றும் அலங்கார செலவுகளை செய்தார்.
11) கங்கோத்ரி (உத்திரகாண்ட்) : இங்கு விஸ்வநாத், கேதர்நாத், அண்ணபூர்ணா மற்றும் பைரவர் கோயில்களையும் நிறைய தர்மசத்திரங்களையும் கட்டினார்.
12) கயா (பீஹார்) :
இங்கு விஷ்ணுபாத் கோயிலை கட்டினார்.
13) கோகர்ணா :
ரேவலேஷ்வர் மஹாதேவ் கோயில், ஹோல்கர் வாடா மற்றும் எளியவர்களுக்கு உணவுகூடங்களை கட்டினார்.
14) கிரினேஷ்வர் (மஹாராஷ்டிரா) :
இங்கு கிரினேஷ்வர் ஆலயம் மற்றும் சிவாலயா தீர்த்தமும் இவரால் கட்டப்பட்டது.
15) ஹரித்துவார் (உத்திரகாண்ட்) :
கங்கை நதியில் குஷவர்த்தா காத் கட்டினார். தர்மசத்திரங்களை கட்டினார்.
16) ஜால்கெளன் ராமர் கோயில்
17) நாதத்வாரா (இராஜஸ்தான்) :
இங்கு அஹில்யா குண்ட், கோயில் கிணறு மற்றும் தர்மசத்திரங்கள் இவரால் கட்டப்பட்டது.
18) ஒம்கரேஷ்வர் (மத்தியப்பிரதேசம்)
சிவனின் ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான இந்த கோயிலில் சிவனுக்கு வெள்ளி முகமும் குளங்களையும் செய்து கொடுத்தார்.
19) அது மட்டுமில்லாமல் மாமலேஷ்வர் மஹாதேவ் கோயில், அமலேஷ்வர் கோயில் மற்றும் திரிஹம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம் (நாஸிக்கில் உள்ள கோயில் ஓளரங்கசீப்பால் இடிக்கப்பட்டது) ஆகியவற்றை மீண்டும் புனர்நிர்மாணம் செய்தார்.
20) பூரி (ஒரிஸ்ஸா) :
ஸ்ரீராமச்சந்திரா கோயில், தோட்டங்கள் மற்றும் தர்மசத்திரங்கள் கட்டினார்.
21) இராமேஸ்வரம் (தமிழ்நாடு) :
இங்கு ஹனுமான் கோயில், ஸ்ரீ ராதாகிருஷ்ணா கோயில் மற்றும் ஒரு தர்மசத்திரம் இவரால் கட்டப்பட்டது.
22) ரிஷிகேஷ் (உத்திரகாண்ட்) :
ஸ்ரீநாத்ஜி மற்றும் கோவர்த்தனன் கோயில்களை கட்டினார்.
23) சோம்நாத் (குஜராத்) :
கி.பி.1665ல் ஒளரங்கசீப் ஆணையினால் இடிக்கப்பட்ட சோம்நாத் ஆலயம் கி.பி.1785ல் இவரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
24) உஜ்ஜையினி (மத்தியப்பிரதேசம்)
இங்கு சிந்தாமணி கணபதி, ஜனார்தனா,பாலாஜி திலக்கேஷ்வர் கோயில்களை கட்டினார்.
25) வாரணாசி (உத்திரபிரதேசம்) :
இங்கு ஓளரங்கசீப்பால் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலையும் திரும்ப கட்டினார். மேலும் 9 கோயில்களையும் வாரணாசி நகரில் கட்டினார்.
இது மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் சிறு சிறு கோயில்களையும் தர்மசத்திரங்களையும் குளம் மற்றும் கிணறுகளையும் வெட்டினார். இவர் கி.பி.1795ல் தனது 70வயதில் 28 வருட ஆட்சிக்கு பின்னர் மரணமடைந்தார். இவரின் சேவைகளை பாராட்டி இந்தூர் விமானநிலையத்திற்கு "தேவி அஹில்யா பாய் ஹோல்கர் விமானநிலையம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு பல்கலைகழகங்களுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு கி.பி.1996ல் இவர் பெயரிலான தபால்தலை வெளியிட்டு சிறப்பித்தது. சரித்திரத்தில் எத்தனையோ பெண்கள் இடம்பிடித்தாலும் அதில் தனது கருணையினாலும் தன்னலமற்ற தியாகத்தினாலும் பக்தியினாலும் இவருக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. நாட்டில் எண்ணற்ற இடங்களில் இவருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைவராலும் தாய் என்ற ஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளார் இந்த தெய்வதாய் ராணி அஹில்யா பாய் ஹோல்கர்.

Comments
Post a Comment