17) குந்தவை பிராட்டியார்

குந்தவை பிராட்டியார் (கி.பி.945-???)

சரித்திரம் எண்ணற்ற பெண் அரசிகளையும் பக்தியில் சிறந்த பெண்களையும் தியாகத்தில் சிறந்த பெண்களையும் கண்டுளள்து. இந்த குந்தவை பிராட்டியார் ஒரு முடிசூடா ராணி. பெண்ணாக பிறந்ததால் அரசு ஏற முடியவில்லையே தவிர அரசை தன்னிஷ்டப்படி ஆட்டி வைத்தார். இவரது சொற்படி தான் இவரது இளைய சகோதரன் இராஜராஜ சோழனும் அவரின் மகனான இராஜேந்திர சோழனும் நடந்தனர். மதியூக மந்திரியின் சிந்தனைகளை ஒருங்கே பெற்ற மிகவும் புத்திசாலியான இளவரசி. சரத்திரத்தில் மொத்தம் 3 குந்தவைகள் உண்டு. முதல் குந்தவை வீமன் குந்தவை எனப்படும்‌ மேற்கு கங்க மன்னன் முதலாம் பிருத்விபதியின் மகள். இவர் சோழ மன்னர் அரிஞ்சயரின் மனைவி. சுந்தர சோழன் இவரின் மீது பெரு மதிப்பு கொண்டிருந்த காரணத்தால் தனது மகளுக்கும் குந்தவை என்று பெயரிட்டார். சுந்தர சோழரின் மகளான மந்தாகினி என்ற வேறொரு பெயரும் கொண்ட குந்தவை இரண்டாம் குந்தவை. இராஜராஜன் தனது அக்காளான குந்தவை பிராட்டியார் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்ட காரணத்தால் தனது மகளுக்கும் குந்தவை என்று பெயரிட்டார். அவரே மூன்றாம் குந்தவை. மூன்று குந்தவைகளுக்கும் ஒரு விதத்தில் சாளுக்கியர்களுக்கும் தொடர்பு உண்டு. முதல் குந்தவை சாளுக்கிய வம்சத்து இளவரசி. இரண்டாம் குந்தவை மணந்த வானவராயன் வந்தியத்தேவன் கீழை சாளுக்கிய மரபான பாண குலத்தை (வாணர்) சேர்ந்தவர். மூன்றாம் குந்தவை வேங்கி சாளுக்கிய விமலாதித்தனை  மணந்தார். இதில் இரண்டாம் குந்தவை மட்டுமே திருமணம் முடித்தாலும் தனது சோழ நாட்டை பிரிய மாட்டேன் என்று கடைசி காலம் வரை சோழ நாட்டிலையே இருந்தார். இவரை பற்றி பார்ப்போம்.

இவர் கி.பி.945ல் திருக்கோவிலூரில் இரண்டாம் பராந்தக சோழர் என்ற சுந்தர சோழருக்கும் வானவன் மஹாதேவிக்கும் மகளாக திருஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவரது பிறந்த நாளான திருஅவிட்டம் நட்சத்திரத்தில் இராஜராஜனின் காலத்தில் கி.பி.1006ல் மேல்பாடியில் உள்ள அவனீஸ்வரர் கோயில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்ததை அந்த கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் ஆதித்ய கரிகாலனுக்கு தங்கையாகவும் அருள்மொழி வர்மன் (என்ற) இராஜராஜ சோழனுக்கும் அக்காவும் பிறந்தவர். இவரது தந்தையான சுந்தர சோழர் செம்பியன் குடியை சேர்ந்தவர். இவரது தாய் மலையமான் குடியை சேர்ந்தவர். இவர் தனது அண்ணனான ஆதித்ய கரிகாலனின் வீரத்தின் மீது பெரு மதிப்பு கொண்டிருந்தார். தன் தம்பி ராஜராஜனின் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். தம்பியை வளர்த்ததே இவர் தான். வீர பாண்டியன் தலை கொண்டதால் ஆதித்ய கரிகாலனை கொல்ல சிலர் திட்டமிடுவதை அறிந்த குந்தவை கடம்பூர் அரண்மணை விருந்துக்கு போக வேண்டாம் என்று கூறியும் அண்ணன் கரிகாலன் அவரச புத்தியிலும் சூழ்ச்சிகளை வீரத்தால் வெல்லலாம் என்ற நம்பிக்கையாலும் சென்றவர் படுகொலை செய்யப்பட்டார். ஆதித்ய கரிகாலனை ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதி ராஜன், அவனது தம்பி பரமேஸ்வரனான இருமுடிச்சோழ பிரம்மாதி ராஜன் இவர்களுடன் உத்தம சோழனின் தாயாரான செம்பியன் மாதேவியின் ஊரான மலையனூரை சேர்ந்தவர்களாலும் கொல்லப்பட்டதால் இவருக்கு உத்தம சோழனின் மீது சந்தேகம் இருந்தது. அதன் பின்னர் அடுத்த சில வருடங்களிலையே (கி.பி.973) தந்தை சுந்தர சோழர் இறக்கவே உத்தம சோழர் அரியணை ஏறினார். தம்பி ராஜராஜனையும் கொலை செய்ய முயற்சிப்பார்கள் என்று அவரை தலைமறைவாக இருக்க செய்து காத்தார். ஆனால் உத்தம சோழனின் ஆட்சியில் இராஜராஜன் இளவரசு பட்டம் கட்டப்பட்டுள்ளார். ஆனாலும் சூழ்ச்சிகள் தம்பியை தாக்கிவிடாத படி எந்நேரமும் அவரை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்தார். ஆதித்த கரிகாலன் மற்றும் இராஜராஜனின் நண்பனான கீழை சாளுக்கிய மரபை சேர்ந்த வானவராயன் வந்தியத்தேவன் மீது காதல் கொண்டு அவரை மணந்தார். தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. ஆனால் வந்திய தேவருக்கு வேறு பல திருமணங்கள் மூலம் மகள் உண்டு.  உத்தம சோழரின் மறைவுக்கு பின்னர் தம்பி இராஜராஜனை அடுத்த அரசனாக்கியது இவரது மதியூகத்தினால் தான். அக்காளின் சொற்படி நடந்து வந்த தம்பி அக்காள் இட்ட கட்டளையை மீற மாட்டார். அவரின் மீது பெரு மதிப்பு கொண்டதால் தனது மகளுக்கும் குந்தவை என்று பெயரிட்டார். இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழனை சிறு வயது முதல் பழையாறு அரண்மனையில் வளர்த்தது இவர் தான். அதனால் அவரும் தனது அத்தையான குந்தவை மேல் அளவு கடந்த பாசம் கொண்டவராக இருந்தார்.


இராஜராஜன் தனது தந்தையின் பெயரில் சுந்தரசோழ விண்ணகரம் என்று நகரத்தை அமைத்தார். அந்த ஊரில் ஒரு மருத்துவமனை கட்டுவதற்க்கு இவர் நிறைய பொருளதவிகள் செய்ததாக கல்வெட்டுகள் கூறுகிறது. தாராசுரம் எனப்படும் இராசராசபுரத்தில் பெருமாள் கோவிலும், சிவன் கோயிலும் ஒரு சமண கோயிலும் கட்டி கொடுத்துள்ளார். தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய போது 10000 கழஞ்சு பொன்னும் 18000 கழஞ்சு வெள்ளி பாத்திரங்களும் கொடுத்ததை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுகளில் இராஜராஜன் "நாங் கொடுத்தனவும் அக்கன் (அக்காள் குந்தவை நாச்சியார்) கொடுத்தனவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் கி.பி.980ல் இஸ்ஸாம் மதத்திற்கு மாறி நத்தர்வலி ஹலிமா என்று பெயர் மாற்றி கொண்டதாக வரலாற்றை தற்போது சிலர் திரித்து கூறுகின்றனர். கி.பி.1006ல் இவர் மறைந்ததாக அந்த திரிபு கூறுகிறது. ஆனாலும் அது உண்மையில்லை. கடைந்தெடுத்த பொய் என்பதே உண்மை. இவர் ராஜராஜன் மறைந்த சில ஆண்டுகளுக்கு பிறகே மறைந்தார்.  அதனால் கி.பி.1020க்கு மேல் இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சரித்திரத்தில் இவர் ஒரு கிங் மேக்கர் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர  சோழன் ஆகிய இருவரும் இவரின் வழியை ஆலோசனைகளை பின்பற்றியே அரசு பீடம் ஏறினார்கள்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்