19) பன்னா பாய் தா கின்ச்சி
பன்னா தாய் மா கின்ச்சி (Panna Dhai Maa)
சரித்திரத்தில் தியாகத்தின் உருவாக போற்றப்படும் பெண்களில் இவரும் ஒருவர். இராஜபுத்ரர்களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் வீரத்துடன் தியாகத்துடன் நாட்டுப்பற்றுடன் கடமை உணர்ச்சி கொண்டவர்கள். அத்தகைய பெண்களில் இவரும் ஒருவர். பாரதம் இன்றும் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இத்தகைய தியாகசீலர்களான இவரை போன்ற பெண்களும் தான் காரணம்.
இவர் கி.பி.16ம் நூற்றாண்டை சேர்ந்தவர். கண்வா போரில் பாபரிடம் தோல்வியுற்று சக தளபதிகளால் விஷமிட்டு கொல்லப்பட்ட மஹாராணா சங்காவின் மனைவியான கர்ணாவதியின் தாதி பணிப்பெண் இவர். கி.பி.1522ல் பிறந்த ராணா சங்காவின் மகனான முதலாம் உதய்சிங்கிற்கு இவரே வளர்ப்பு தாய். இளமையில் இருந்து தன் மகனான சந்தன் போலவே அவருக்கும் பாலூட்டி வளர்த்தவர். கர்ணாவதியும் குஜராத் சுல்தானான பகதூர் ஷாவின் சித்தூர் படையெடுப்பில் ஜோஹர் செய்து கொண்டதால் உதய் சிங்கை வளர்க்கும் முழுப் பொறுப்பும் இவருக்கே வந்தது. சங்காவுக்கு பின்னர் இரண்டாம் ராணா ரத்தன் சிங்கும் அவருக்கு பின்னர் விக்ரமாதித்யாவும் பட்டத்திற்கு வந்தனர். பகதூர் ஷா சித்தூரை ஆக்கிரமிக்கும் போது பன்னா தாய் தன் மகன் சந்தனுடன் இளவரசனையும் அழைத்து கொண்டு புண்டிக்கு போய்விட்டார். கர்ணாவதி பக்கத்து அரசர்களிடம் உதவி கேட்டு கிடைக்காததால் ஜோஹர் செய்து கொண்டார். விக்ரமாதித்யா மலைகளில் ஒடி ஒளிந்து கொண்டார். பகதூர் ஷா சித்தூரை சூறையாடிய பின்னர் மீண்டும் வந்து முடிசூட்டி கொண்டார். தோல்விக்கு பின்னரும் இவர் திருத்த வில்லை. சக தளபதிகளை தோல்விக்கான காரணமாக குற்றம் சாட்ட அவர்கள் வெகுண்டு விக்ரமாதித்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் உதய்சிங்கை அடுத்த அரசராக அறிவித்து வன்வீர் சிங் (என்ற) பன்வீர் சிங்கை அவருக்கு பாதுகாவலராக நியமித்தனர். இந்த வன்வீர் சிங் ராணா சங்காவின் மூத்த சகோதரரான பிரித்விராஜ்ஜின் முறையற்ற மகன். இவர் தன்னையே முறையான வாரிசு என்று சிறையில் சென்று விக்ரமாதித்யாவை கொன்றார். பின்னர் உதய்சிங்கை கொல்ல வந்தார். அந்த நேரத்தில் பன்னா தாய் உதய்சிங்கை ஆற்றின் வழியாக கும்பல்கர்க் கோட்டைக்கு அனுப்பிவிட்டு தன் மகனான சந்தனை இளவரசன் உதய்சிங் இடத்தில் படுக்க வைத்தார். வன்வீர் சிங் இளவரசன் கேட்க தன் மகன் சந்தனை கைகாட்ட அவர் இளவரசனாக இருந்த இவரது மகனான சந்தனை இவரது கண் முன்னே வெட்டி வீழ்த்தினார். பின்னர் கி.பி.1536ல் வாரிசுகள் இருவரும் இறந்ததால் தன் பதவி ஏற்பதாக அறிவித்து ஆட்சியை பிடித்தார்.
பின்னர் பன்னா தாய் மற்றும் இளவரசர் உதய் சிங் கும்பல்கர்க் கோட்டை கவர்னரிடம் அடைக்கலம் கேட்டு அங்கேயே தங்கியிருந்தனர். கி.பி.1540ல் நான்கு வருடங்களுக்கு பிறகு தனது 18வயதில் உதய்சிங் தனது மாமனார் மற்றும் இதர சக ஆட்சியாளர்கள் உதவியுடன் மேவார் மீது படையெடுத்து வன்வீர் சிங்கை வென்று ஆட்சியை பிடித்தார். போரில் வன்வீர் சிங் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சிறையில் அடைத்தது கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். பின்னர் உதய்சிங் சிதோதய வம்சத்தின் 12வது ராணாவாக மேவாரில் பதவியேற்றார். அந்த வருடத்தில் தான் அவரது மூத்த மகனான அடுத்த ஆட்சியாளருமான சரித்திரத்தில் மகாவீரர் என்று போற்றப்படும் ராணா பிரதாப் சிங் பிறந்தார். பன்னா தாயின் தியாகத்தினால் தான் மேவாரும் அடுத்தடுத்த மொகலாயர்கள் தாக்குதலை எதிர்த்து நின்று வாழ்நாள் முழுவதும் போராடிய மகாவீரனும் கிடைத்தார்கள். மேவார் மற்றும் இராஜபுதனமும் அன்னியர்கள் ஆதிக்கத்திலிருந்து சுதந்திர கொடியை பட்டொளி வீசி பறக்க செய்ய முயன்ற மாவீரர்கள் வம்சம் தழைக்க காரணமாக பன்னா தாய் இருந்தார். அவரின் தன்னலமற்ற தியாகத்தினால் தான் இராஜபுதனம் அடிமைப்படாமல் இருந்தது.
கி.பி.2014ல் இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அவர்கள் இவரின் தியாகத்தை போற்றி கோவர்த்தன் சாகர் ஏரியில் இவரின் பெயரில் பன்னா தாய் மியூசியம் அமைத்தார். இவரின் வாழ்க்கை வரலாறு தியாகம் 3டி படமாக காட்டப்படுகிறது. மேற்கு உதய்ப்பூரில் இவரது பெயரில் ஒரு நர்ஸிங் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. மீரட்டில் பன்னா தாய் மா சுபார்த்தி என்ற நர்ஸிங் கல்லூரி இவர் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment