2) நூர்ஜஹான்
சரித்திரத்தில் சிலர் மறைந்துவிடலாம். சிலபேர் மறைந்தாலும் அவர்களை மறக்கமுடியாத அளவுக்கு ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மறக்கமுடியாத ஆளுமைகளில் நூர்ஜஹானும் ஒருவர்.15 ஆண்டுகள் நிழல் இராணியாக ஜஹாங்கீர் அவர்களின் மனைவியாக இந்தியாவை ஆண்டவர் இவரே. அசாத்திய திறமைச்சாலி. மது மாது அபின்னால் உடல்நலம் கெட்டு நாட்டை சரிவர கவனிக்க முடியாமல் இருந்த ஜஹாங்கீருக்கு 20வது மனைவியாக வந்து அரசை கட்டி ஆண்டவர். ஜஹாங்கீர் இவருக்கு இரண்டாவது கணவர். யார் இந்த நூர்ஜஹான்?
நூர்ஜஹான் என்பதற்கு "உலகின் ஒளி" என்பது பொருள். மெஹர்-உன்-நிஸா என்பதே இயற்பெயர். ஜஹாங்கீரை திருமணம் செய்த பின் "நூர் மஹால் (மாளிகையின் ஒளி)" என்று அழைக்கப்பட்டு நூர்ஜஹானாக பேரரசியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் அதுவே அவரது பெயராயிற்று.
ஈரானை பூர்விகமாக கொண்ட மிர்ஸா கியாஸ் பெக் அங்குள்ள பாரசீக பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். அப்போது ஈரானை ஆண்ட சபாவித் வம்சத்தில் அரசர்களுக்கும் அவருக்கும் நிலவிய மனஸ்தாபத்தினால் அங்கிருந்து இந்தியாவில் இருக்கும் மொகலாய பேரரசுக்கு வரும் வழியில் கி.பி.1577ல் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் பிறந்தார். வழியில் "மாலிக் மசூத்" என்ற வியாபாரியின் உதவியினால் அப்போது லாகூரில் முகாமிட்டிருந்த அக்பரை சந்தித்து அவரின் தந்தை பேரரசின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவரானார்.
ஜோகிந்தர் சிங் எழுதிய "நூர்ஜஹான்" நூலில் பிறந்த குழந்தையை ஏறிவந்த மாடு பாரம் தாங்காததால் விட்டுவிட்டு வந்து பின் தேடி தந்தை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவருக்கு மூத்த சகோதரர் அஸப் கான் என்பவரைப் பற்றியும் அந்த நூலில் குறிப்புகள் இல்லை. அந்த அஸப்கான் தான் ஹாஜஹானின் மாமனார் அதாவது இன்றைய தாஜ்மஹாலை யாருக்காக ஹாஜஹான் கட்டினாரோ அந்த மும்தாஜ்ன் தந்தை. மும்தாஜ்க்கு நூர்ஜஹான் அத்தை முறை. அந்த நூலில் ஜஹாங்கீர் 18 வயதாக இருக்கும் போது 15 வயதான மெஹருன்னிஸாவை பார்த்து காதல் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இருவருக்கும் 8 வயது வித்தியாசம். மேலும் 15 வயதில் மெஹருன்னிஸா ஆப்கானை சேர்ந்த முகலாய தளபதியான அலிகுலி பெக் என் மனைவியானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அவருக்கு முதல் திருமணம் நடைபெற்றபோது வயது 17(கி.பி.1594). அவர் ஜஹாங்கீரை சந்தித்ததே அவரின் கணவர் இறந்த பின் கி.பி.1607ம் ஆண்டு தான். 4 வருடங்கள் கழித்தே ஜஹாங்கீர்-மெஹருன்னிஸா(நூர்ஜஹான்) திருமணம் நடந்தது. இது ரூபிலால் எழுதிய நூலிலும் இந்து சுந்தரேஷன் எழுதிய தி இருபதாம் மனைவி(இருபதாம் இல்லத்தரசி) நூலிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சரி நாம் நூர்ஜஹானின் வரலாற்றை பார்க்க ஆரம்பிப்போம்.
மொகலாய அக்பரின் அரசவையில் அவருக்கு அமைச்சராக இருந்த மிர்ஸா கியாஸ் பெக் அடிப்படையில் இலக்கியவாதி. அதனால் அவர் மெஹருன்னிஸாவுக்கு நல்ல உயர்கல்வியை படிக்க வைத்தார். ஆப்கனை சேர்ந்த இராணுவ வீரருக்கு மனைவியாக தனது 17 வயதில் திருமணம் முடிந்து பிஹார் பகுதிக்கு சென்று விட்டார். அவரது கணவர் ஜஹாங்கீருக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டார். சிலர் இதையே நூர்ஜஹானின் மேல் ஆசைப்பட்டு தான் அவரது கணவரை ஜஹாங்கீர் கொன்றார் என்று கதை கட்டுவதற்கு ஏதுவாகிற்று. உண்மையில் அதற்கு முன்புவரை நூர்ஜஹானை ஜஹாங்கீர் பார்த்தது இல்லை என்பதே உண்மை. கி.பி.1607ல் அவரது கணவர் கொல்லப்பட்ட அவரும் அவரது ஒரே மகளான லாட்லியும் ஆக்ராவிலுள்ள ஜஹாங்கீர் அரண்மனைக்கு வரப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் 4 ஆண்டுகள் கழித்து கி.பி.1611ல் அவரை ஜஹாங்கீர் திருமணம் செய்துகொண்டு நூர்மஹால்(மாளிகையின் ஒளி) என்று அழைத்தார். பின்னர் பேரரசியாக ஆக்கினார். பின்னர் ஜஹாங்கீர் மது மற்றும் அபினிலையே மூழ்கியிருக்க அரசின் ஸ்திரத்தன்மை குறைய ஆரம்பிக்கும் வேளையில் நூர்ஜஹான் நிர்வாகத்தை கையில் எடுத்து ஆட்சியை நடத்தினார். மொகாலய சாம்ராஜ்யத்தின் அந்தப்புர பெண்கள் அரண்மனையை விட்டே வெளியேறாத கட்டுப்பாடான காலத்தில் மத்திய இந்தியாவில் அரசையே திரைமறைவில் இருந்துகொண்டு ஆட்சி செய்த திறமைசாலி. நூர்ஜஹான் ஜஹாங்கீருடன் வேட்டைக்கு போகும்போது யானையின் மீதிருந்து ஆட்கொல்லி புலியை சுட்டு கொன்றதாக செய்திகள் பதிவாகியுள்ளன. சிலர் சொல்வது போல் 6 குண்டுகளில் 4 புலிகளை வீழ்த்தினார் என்று சொல்லுவதெல்லாம் கட்டுக்கதை தான். குதிரையேற்றம் மற்றும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்றவர். மேலும் போலோ எனப்படும் குதிரையிலிருநது விளையாடும் ஹாக்கி விளையாட்டில் ஆர்வமுடையவராக இருந்ததற்கான ஓவியச்சான்றுகளும் உள்ளன.தந்தை மிர்ஸா கியாஸ் பெக்கை போல இலக்கியத்திலும் கவிதை பாடுவதிலும் வல்லவர்.
மொகலாய ஆட்சியில் பகுதிகளை கடக்கும் வணிகர்களின் பொருட்களுக்கு சுங்கவரி விதித்தார். மேலும் தனது வியாபார கப்பல்களின் மூலம் மெக்காவுக்கு பொருட்களை அனுப்பியும் நன்கு சொத்து சேர்த்துக்கொண்டார். இவர் பெயரிலும் தங்க வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவரது தந்தை மிர்ஸா கியாஸ் பெக்கின் கல்லறையை ஆக்ராவில் வெள்ளை சலவைக் கற்களால் அமைத்தார். அதுவே பின்நாட்களில் தாஜ்மஹாலை வெள்ளை நிறமுடைய சலவைக் கற்களால் அழகுற அமைப்பதற்கு உதவியாயிருக்கிறது. மொகலாய கட்டிடக்கலையில் வடிவததையே மாற்றியமைத்தவர். ஆனாலும் தநதைக்கு கட்டிய கல்லறையை கட்டி முடித்தபின் அவரலையே சென்று பார்க்க முடியாமல் லாகூர் அரண்மனையின் வீட்டுகாவல் சிறையிலையே ஹாஜஹானால் வைக்கப்பட்டது தான் கொடுமையானது.
ஆரம்பத்தில் இளவரசர் குர்ரம் (ஹாஜஹான்) ஐ தன் மகளான லாட்லிக்கு மணம் முடிக்க முயற்சி செய்ததை மும்தாஜ் விரும்பாததால் ஹாஜஹான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் லாட்லிக்கு அவரின் தம்பியான ஷரியாரை திருமணம் செய்து வைத்தார். கி.பி.1627ல் ஜஹாங்கீர் காபூலிருநது காஷ்மீருக்கு சென்றார். காபூல் மற்றும் காஷ்மீர் இரண்டுமே அவருக்கு பிடித்தமான இடங்களாகும். காஷ்மீரின் குளிர் தாங்கமுடியாமல் ஆஸ்துமா தொல்லையினால் லாகூருக்கு திரும்பும் வழியிலையே மரணமடைந்தார். ஜஹாங்கீருக்கு பின் தன் மருமகன் ஷாரியாரை அரசனாக்க முயன்றார். இந்த நேரத்தில் வெளியூரில் இருநத ஹாஜஹான் வருவதற்குள் ஷாரியார் ஆக்ராவிற்குள் நுழைந்து விடக்கூடாது என்று அஸம்கான் (மும்தாஜ்ன் அப்பா-நூர்ஜஹானின் அண்ணன்) கோட்டை கதவுகளை அடைத்து ஹாஜஹானின் புரட்சியினால் ஆக்ராவை அடைந்து ஆட்சியமைக்க உதவினார். பின்னர் ஹாஜஹான் லாகூரின் அரண்மனையிலையே நூர்ஜஹானை சகல வசதிகளுடன் ஆண்டுக்கு 2 இலட்சம் ரூபாய்கள் செலவுக்கு வீட்டுகாவல் மாதிரியாக வைத்துவிட்டார். இதனால் 15 ஆண்டுகாலம் அரசியலில் உச்சம்பெற்றிருந்த நூர்ஜஹான் கி.பி.1627ல் இருந்து கி.பி.1645 வரை 18 ஆண்டுகள் லாகூரிலையே இருந்து கடைசியாக தனது கணவர் ஜஹாங்கீரின் சமாதியின் அருகிலையே தனது 68வது வயதில் மறைந்து போனார். இப்படி தனது 34 வயதில் தான் ஜஹாங்கீருக்கு மனைவியாக நுழைந்து தனது 50வயதிற்குள்ளே மொகாலய சாம்ராஜ்யத்தில் அவரால் நிகழ்ந்த மாற்றங்கள் எத்தனையோ?
ஹாஜஹான் நூர்ஜஹானின் மகளை மணந்திருந்தால் சரித்திரம் வேறு மாதிரியாக திரும்பியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதனால் தான் என்னவோ ஹாஜஹானுக்கு எதிராகவும் அவர் மகன் ஒளரங்கசீப் புரட்சி செய்து ஆட்சியை பிடித்து ஹாஜஹானின் கடைசி காலத்தில் வீட்டுச் சிறையில் வைத்ததும் விதியின் விளைவே.
உதவி நூல்கள்:
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
நூர்ஜஹான் - ஜோகிந்தர் சிங்
நூர்ஜஹான் - ரூபிலால்
இருபதாம் இல்லத்தரசி - இந்து சுந்தரேசன்
இதய ரோஜா - இந்து சுந்தரேஷன்
மொகலாயர்கள் - முகில்
மத்திய கால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
மொகலாயர் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்
எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
விக்கிபீடியா தகவல்கள்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்


Comments
Post a Comment