20) இராணி ருத்ரமா தேவி
ராணி ருத்ரமாதேவி (கி.பி.1240-1295) : ஆட்சி (கி.பி.1256-1295) :
சரித்திரம் கண்ட மகத்தான வீராங்கனைகளில் ஒருவர். தனது நாட்டை அன்னியர்களிடம் இருந்து தளராமல் போரிட்டு காத்தவர். அவரது தந்தையான கணபதி தேவா யாதவர்களிடம் தோற்றது இவருக்கு உறுத்திட்டே இருந்தது. அதனால் இவர் யாதவர்களின் மீது படையெடுத்து வென்று தந்தையின் அவப்பெயரை துடைத்தார்.
கணபதி தேவாவுக்கு பின் அரியணை ஏறிய இவர் அவரின் மகளாவார். இவர் சாளுக்கிய அரசன் இந்துசேகரனின் மகனான இளவரசன் வீரபத்திராவை மணந்து கொண்டார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். ஒருவர் மும்மதம்மா (காகத்தீ மஹாதேவாவை மணந்தவர்) மற்றொருவர் ருத்திரம்மா (யாதவ இளவரசர் எல்லன தேவாவை மணந்தவர்) & மூன்றாமவர் ருய்யம்மா (இந்துலூரி அன்னய்யா மந்திரியை மணந்தவர்) இந்திய சரித்திரம் கண்ட மிகச்சில அரசிகளுள் ஒருவர். தனக்கு பின்னர் தனது மகள் வயிற்று பேரன் அரசனாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது கணவரோ தனது இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த மகனுக்கு அரசுரிமை கோரினார். இதனால் இவரது கணவரே இவருக்கு விரோதியானார். கணபதி தேவா இவரை ஆட்சியில் அமர்த்தியதை விரும்பாத சமண மதத்தினர் நாட்டில் குழப்பத்தை தூண்டினார்கள். கிராம மக்களிடம் வரிவசூல் செய்யும் கிராம கர்ணம் பதவியில் இருந்த சமணர்கள் வரிவசூலை அரசுக்கு அனுப்பாமல் ஏமாற்றினர். இதனால் தனது நாடு முழுவதும் கணக்கு வழக்குகளை சொல்லி கொடுக்கும் பள்ளி கூடங்களை அமைத்து பொதுமக்களை கணக்கு வழக்குகளில் பயிற்றுவித்து அவர்களை கர்ணம் பதவியில் அமர்த்தினார். தன்னுடனே இருந்து குழி பறித்த ஹரிஹர தேவர் மற்றும் முராரி தேவரை துரத்தியடித்தார். கி.பி.1266ல் ருத்ரமாதேவியின் கணவர் வீரபத்திரா மரணமடைந்தார். அடுத்த வருடம் தந்தையான கணபதி தேவாவும் மரணமடைந்தார். 27 வருடங்களுக்கு மேலாக காகதீய அரசை ஆண்டவர். இவர் ஆட்சியில் தேவகிரி யாதவர்களின் படையெடுப்பை விரட்டியடித்தார். தேவகிரி வரை யாதவர்களின் அரசன் மகாதேவனை விரட்டி சென்று போர் நஷ்டத்திற்காக மூன்று கோடி தங்க நாணயங்களை வசூலித்து திரும்பினார்.இப்போரில் வெற்றி வாகை சூடிய தன் மகள் மும்மாதம்மாவின் மகனான பேரன் பிரதாபருத்திரனை இளவரசனாக நியமித்தார். சோழ பல்லவ மன்னர்களையும் வென்றார். தனது ஆட்சியை தெற்கே காஞ்சி முதல் வடக்கே சட்டீஸ்கர் வரை மேற்கில் பெடத நாடு முதல் கிழக்கில் துவாரசமுத்திரம் வரை காகதீய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். பல ஏரிகளை தோண்டி விவசாயத்திற்கு நீர் தடையின்றி கிடைக்க வழிவகை செய்தார். பெண்கள் பிரசவ காலத்தில் மரணமடைவதை தடுக்க எல்லா கிராமங்களிலும் பிரசவ வைத்தியசாலைகளை அமைத்தார். பெண்களுக்கு யுத்த பயிற்சி அளித்து படைகளிலும் அரச பதவிகளிலும் அமர்த்தினார். இவரின் ஆட்சியில் தான் இத்தாலிய பயணி மார்க்கோபோலா இந்தியாவின் பல பகுதிகளில் விஜயம் செய்து ருத்திரமாதேவியின் அரசாட்சியை பற்றி விவரித்துள்ளார். இவரின் ஆட்சியில் அரசு பல நிதிசார் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. நாட்டை 72 பாளையங்களாக பிரித்தது இவரின் ஆட்சியில் நடந்தது. பின்னர் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பதேவர், யாதவர் மற்றும் ஹொய்சாளர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு ருத்திரமாதேவிக்கு எதிராக போர்தொடுத்தார். கி.பி.1291ல் இதையும் அடக்கிய இரண்டாம் பிரதாப் ருத்திரன் வெற்றிவாகை சூடினார். கி.பி.1295ல் ருத்திரமாதேவி ஒய்வு எடுத்துக்கொண்டு பேரன் பிரதாபருத்திரனை "இரண்டாம் பிரதாபருத்திரன்" என்ற பெயருடன் அரியணை ஏற்றினார். அடுத்த ஒரு வருடத்தில் கி.பி.1296ல் மறைந்தார். சரித்திரத்தில் தான் மறைந்தாலும் தனது செயல்களாலும் நலதிட்டங்களாலும் தன் பெயரை நீங்காமல் நிலைநிறுத்தி விட்டு மறைந்துள்ளார் இந்த பெண்ணரசி ருத்திரமா தேவி.

Comments
Post a Comment