21) இராணி மங்கம்மாள்
ராணி மங்கம்மாள் (கி.பி. - 1706) :
ஆட்சி (கி.பி.1689-1706) :
மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி. சொக்கநாத நாயக்கருக்கு பின் இவரது மகன் மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் இளமையிலே மறைந்தார். இவரது மகன் முத்து வீரப்பன் காலத்தில் ஒளரங்கசீப் தனது செருப்பை யானை மீது வைத்து சிறு படையுடன் அனுப்பி வைத்தார். அதை சிம்மாசனத்தில் வைத்து காணிக்கையும் திறையும் செலுத்தி பணிந்தால் மட்டுமே அந்த அரசு பிழைக்கும். இல்லை என்றால் போர் தான். திருச்சி அரண்மனைக்கும் அந்த செருப்பு வந்தது. கோபத்தில் கொதித்த முத்து வீரப்பர் "கீழே தட்டை வை. எடு துணியை" என்று கூற துணி எடுக்கப்பட வாளால் செருப்பை காலடியில் போட்டு வலது காலை நுழைத்து எங்கே இன்னொரு கால் செருப்பு என்றார். மனிதனுக்கு இரண்டு கால் செருப்பு வேண்டும் என்ற தெரியாதா முட்டாளா உங்கள் பாதுஷா? போய் எடுத்து வா. ரங்கனின் பாதம் தவிர வேறு பாதங்களை வணங்கி பழகாதவர்கள் நாயக்கர்கள். நாங்கள் திறை செலுத்துவதாக தான் மட்டுமே ஒப்பந்தம்" என்று கூறி அனுப்பி வைத்தார். முத்து வீரப்பனை நல்ல முறையில் வளர்த்து வந்தவர் அவருக்கு முத்தம்மாள் என்ற பேரழகியை திருமணம் செய்து வைத்தார். கி.பி.1689ல் முத்து வீரப்பர் பெரியம்மை நோய் கண்டு இறந்தார். அந்த நேரத்தில் இவரது பேரனான விஜயரங்க சொக்கநாதன் தாயின் கருவில் இருந்தார். பேரனின் சார்பாக இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவரது மருமகளான முத்தம்மாள் குழந்தையான விஜயரங்க சொக்கநாதர் பிறந்தவுடன் கணவனின் பிரிவை தாங்க முடியாமல் வருந்தியவர் அதிகமான பன்னீர் குடித்து குளிர் ஜன்னி கண்டு மாய்ந்து போனார். தாயும் தந்தையும் இல்லாத பேரனான விஜயரங்க சொக்கநாதரை வளர்க்கும் பொறுப்பு மங்கம்மாள் வசம் வந்தது. இந்த காலகட்டத்தில் தென்னகத்தில் இருந்த பெரும்பாலான அரசர்கள் ஒளரங்கசீப்பின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அவருக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டனர். மைசூர் மன்னன் சிக்க தேவராயன் ஒளரங்கசீப்பின் உடன்படிக்கை செய்து கொண்டான். தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய வேந்தன் ஷாஜி என்பவனும் திறை செலுத்த ஒப்புக் கொண்டுவிட்டான். இதெல்லாம் அறிந்துகொண்ட மங்கம்மாளும் அரசு நிலைக்க வேண்டி ஒளரங்கசீப்பிற்கு திறை செலுத்தி மதுரையை தக்க வைத்துக் கொண்டார். தஞ்சை மன்னன் மதுரை நாட்டுப் பகுதிகள் சிலவற்றை முன்பே கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்தான். அவர் ஒளரங்கசீப்புக்கு திறை செலுத்தி வந்த காரணத்தால் அவரோடு போர் புரிய முடியவில்லை. இருந்த போதிலும் முகலாயப் படை தலைவன் சுல்பிகர்கான் கி.பி. 1697 தெற்கே வந்த போது மங்கம்மாள் அவனுக்கு விலை உயர்ந்த பொருட்களை அன்பளிப்பாக அளித்து அவன் உதவியால் தஞ்சை மன்னன் பிடித்திருந்த மதுரை பகுதிகளை மீட்டுக்கொண்டார். எனினும் மராட்டியர்கள் மதுரை நாயக்கர்கள் அரசுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தனர்.
இவரது ஆட்சியில் நடந்த 4 போர்கள் முக்கியமானவை:
1) மைசூர் போர் :
திருச்சியை கைப்பற்ற மைசூர் மன்னன் சிக்கதேவராயன் தனது தளபதி குமரய்யாவை அனுப்ப திருச்சியை முற்றுகையிட்டு கடும்போர் புரிந்த போது மைசூரை மராட்டியர்கள் தாக்கியதால் தளபதி மைசூருக்கு நகர்ந்த போது மைசூர் படைகளை தாக்கி அழித்து வெற்றி பெற்றார்.
2) தஞ்சை போர் :
கி.பி.1700ல் தஞ்சையை ஆண்ட ஷாஜி தனது படைத்தலைவன் மூலம் மதுரை நாட்டிற்கு அடங்கிய திருச்சி பகுதியில் நுழைந்து கொள்ளையடித்தார். தளவாய் நரசப்பையா எவ்வளவோ முயன்றும் கொள்ளையை தடுக்க முடியவில்லை. இந்த நேரத்தில் கொள்ளிடத்தில் ஆற்று வெள்ளம் குறைந்தபோது தனது படைவீரர்களுடன் தஞ்சை நாட்டிற்கு சென்று நரசப்பய்யா பதிலுக்கு பதிலாக கொள்ளையடித்தார். இதனை அறிந்து தஞ்சை படைவீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஷாஜியின் முதலமைச்சராகிய பாலோஜி என்பவர் நிறைய பொருட்களை தனது வியாபாரிகளிடமிருந்தும் கஜானாவில் இருந்தும் எடுத்துக்கொண்டு போய் நரசப்பையாவிடம் கொடுத்து ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன் மூலம் மதுரைக்கும் தஞ்சைக்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.
3)திருவாங்கூர் ரவிவர்மன் மீதான படையெடுப்பு :
திருவாங்கூரை ஆண்ட ரவிவர்மனின் அமைச்சர்களான எட்டு வீட்டுப் பிள்ளைமார்கள் அவருக்கு உள்ளே தொல்லை கொடுத்து வந்தனர். இவர்களை ஒழிக்க வேண்டும் என்று ரவிவர்மன் சூழ்ச்சி செய்தான். மதுரை படையினரை அணுகி அவர்களை நாட்டை விட்டு விரட்டினால் திருவாங்கூரில் பாதியை தருவதாக ஒப்புக் கொண்டான். இதை நம்பிய மதுரை படையினர் அவர்களை தாக்கி அழித்தனர். ஒப்பந்தப்படி திருவாங்கூரில் பாதியை கொடுக்காததால் மங்கம்மாள் கி.பி. 1695ல் தளவாய் நரசப்பய்யா தலைமையில் பெரும் படையை திருவாங்கூர் அனுப்பி போரில் வெற்றி பெற்றார். வெகுநாள் திறைப்பணம் கட்டாமல் இருந்ததால் திறைப்பணம் முழுவதும் பெற்றுக்கொண்டு தளவாய் நரசப்பய்யா மதுரை திரும்பினார்.
4) சேதுபதியுடன் போர்:
சேது நாட்டை ஆண்ட சேதுபதி மங்கம்மாளின் ஆட்சி காலத்தில் கிபி 1698ல் மதுரையை கைப்பற்றி சில காலம் ஆண்டார். தளவாய் நரசப்பைய்யா மதுரை மீது படையெடுத்து சென்று சேதுபதியை அங்கிருந்து விரட்டினார். ஆனாலும் அவரை அப்படியே விடாமல் கி.பி.1702ல் சேதுநாட்டின் மீது படை எடுத்துச் செல்லுமாறு தளவாய் நரசப்பைய்யாவுக்கு ஆணையிட்டார். இந்தப் போரில் மங்கம்மாள் உடன் கொண்டிருந்த நட்புறவை கைவிட்டு தஞ்சை மன்னர் ஷாஜி சேதுபதியுடன் சேர்ந்து கொண்டார். போரில் தளவாய் நரசப்பைய்யா கொல்லப்பட்டார். நரசப்பைய்யா தலைமையில் சென்ற மதுரை படையும் தோல்வியடைந்தது. இந்த போரின் மூலம் சேதுநாடு முழு உரிமை பெற்ற தனி நாடாகியது.
செளராஷ்டிரா மக்களும் பிராமணரது ஆச்சாரங்களுக்கு உரியவரே என்று சாஸ்திர நிபுணர்களை வைத்து அறிந்து அவர்களுக்கும் பூணூல் அணியும் உரிமையை கி.பி.1705ல் பனையோலையில் "செளராஷ்டிரா சாசனம்"மாக எழுதி கொடுத்தார். மேலும் கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவர்களை மறவர் நாட்டினர் கொடுமைப்படுத்தியதை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினார். கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் மீது தஞ்சை மன்னன் வரி போட்டார். கிறிஸ்தவ பாதிரியார்களை துரத்த சொல்லி மங்கம்மாளுக்கு கடிதம் எழுதினார். தஞ்சை மன்னருக்கு "நாட்டில் ஒரு பகுதியினர் அரிசி உண்ணும்போது மற்றவர்கள் மாமிசம் உண்ணவில்லையா? அது போல தான் ஒரு பகுதியினர் இந்து மதத்தையும் மற்றொருவர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். அதிகாரத்தை பயன்படுத்தி எல்லோரும் அரிசி தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது முட்டாள்தனமான காரியமல்லவா? அவர்கள் தங்கள் மதத்தை பிரச்சாரம் செய்து கொள்ளட்டும்" என்று பதில் கடிதம் அனுப்பினார். மறவர்களின் சிறையில் இருந்த "மெல்லோ" பாதிரியாரை விடுவித்தார். கி.பி.1692ல் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காக நிலங்களை தன் பேரன் பெயரால் வழங்கினார். கி.பி.1701ல் தர்க்காவுக்காக திருச்சி அருகே சில கிராமங்களை விட்டு கொடுத்தார். கோயில்கள் மட்டுமின்றி குளங்களையும் வெட்டினார். சாலைகளையும் அதன் ஓரங்களில் மரங்களையும் வழிப்பயணத்திற்கு சத்திரங்களையும் தண்ணீர் பந்தல்களையும் கட்டினார். இவர் கட்டிய சாலைகளின் ஓரங்களில் உருவான நகரங்கள் தான் இன்றைய சிவகாசி, சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகியவனை. கட்டிய சத்திரங்களில் அன்னதானங்களுக்கு நிலம் ஒதுக்கினார். மதுரை இரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள மங்கம்மாள் சத்திரம் இவர் கட்டியதே. ஆட்சி நிர்வாகத்திலும் நாட்டின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தியதோடு மட்டுமில்லாது நலத்திட்டங்களின் மூலமும் மக்களின் மனதை கவர்ந்தார். அன்ன சத்திரம் என்ற பெயரில் பயணிகளுக்கு மட்டுமில்லாமல் வறியவர்களுக்கும் உணவு வழங்கினார். நாட்டின் அரசி என்பதை விட நாட்டின் தாய் என்ற ஸ்தானத்தில் வைத்து தான் மக்கள் அவரை நினைத்தனர். ஆனாலும் இவரின் கடைசி காலம் வேதனை மிக்கதாக இருந்தது. இவரது பேரனான விஜயரங்க சொக்கநாதர் தனக்கு 16 வயது பூர்த்தியானவுடன் அரசை தன்னிடம் ஒப்படைக்க கேட்டார். இவர் அவரை இன்னும் குழந்தையாக கருதியே இன்னும் காலம் ஆகட்டும். நாட்டின் நிர்வாகங்களில் கவனம் செலுத்துமாறு கூறி பேரன் வளர்ந்துவிட்டான் என்று அறியாமலையே இருந்தார். இதையே தளவாயான அச்சய்யாவும் வழிமொழிந்தார். ஆனால் சில விஷமிகள் ராணிக்கும் அச்சய்யாவுக்கும் விபரீதமாக சித்தரித்து பேரனின் காதில் ஓதினார்கள். இதனால் பேரன் தனக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகளின் ஆதரவில் கோயிலில் பட்டம் சூடிக்கொண்டார். ராணி மங்கம்மாள் அரசு நிர்வாகம் எவ்வளவு கடினம் தெரியுமா? என்று கேட்டதற்கு தங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம் என்று தான் நான் பதவியை எடுத்துக்கொண்டேன் என்று கூறினார். மறுநாள் காலையில் மகாராணியின் அறைக்கதவுகளை வெளியே வைத்து பூட்டி விட்டார். அரசியால் வெளியே வரமுடியவில்லை. அவர் அறை வாசலுக்கு பலவிதமான உணவுகளை அனுப்பி மங்கம்மாளை வெறுப்பேற்றி குலைப்பட்டினி போட்டார். 40 நாட்கள் தொடர் பட்டினியால் அறையிலையே ராணி மங்கம்மாள் மாண்டு போனார். தான் தூக்கி வளர்த்த பேரன் தன்னை பட்டினி போட்டு கொன்றதை அந்த தூய உள்ளத்தால் தாங்கி கொள்ள முடியவில்லை. சரித்திரத்தில் சிலர் இதை கட்டுக்கதை என்று கூறுகின்றனர். ஆனாலும் மங்கம்மாளின் கடைசி காலம் வேதனைக்குரியதாக தான் இருந்தது. சரித்திரம் கண்ட கருணைமிக்க மகாராணிகளுள் இவரும் ஒருவர். மக்களின் நலன் மட்டுமே சிந்தித்து நாடாண்ட ராணி தான் ராணி மங்கம்மாள்.

Comments
Post a Comment