23) இராணி கிட்டம்மா

கிட்டூர் ராணி சென்னம்மா (கி.பி.1778-1829) :


இந்திய சரித்திரம் கண்ட வீரமான அரசிகளுள் ஒருவர். இன்றைய பெங்களூர்-பூனா இடையே தக்காணத்தில் அமைந்த பகுதி தான் கிட்டூர். இந்த கிட்டூரை ஆண்ட ராஜா மல்லச ராஜாவின் இரண்டாவது மனைவி தான் இவர். இவர் கி.பி.1778 நவம்பர் 14ல் இன்றைய கர்நாடகத்திலுள்ள பெலகவி மாவட்டத்தில் காகதி என்னும் கிராமத்தில் ஒரு லிங்காயத் சமூகத்தில் பிறந்தார். இளமையிலையே குதிரையேற்றம், வாள்வீச்சு மற்றும் முதலிய போர்கலைகளை கற்று தேர்ந்தார்.


கிட்டூர் ராஜா மல்லச ராஜா தனது 17வது வயதில் கி.பி.1782ல் பட்டத்திற்கு வந்தார். திப்பு சுல்தான் மல்லசராஜாவின் கற்கோட்டையான தென்சூரை கைப்பற்ற போர் தொடுத்து வர இவரது மனைவியான ருத்ரா தேவி கணவனை அரண்மனையிலையே இருக்க செய்து தான் படைக்கு தலைமை தாங்கி திப்புவின் படைகளை வெற்றி கொண்டு விரட்டினார். இந்த நிகழ்ச்சியால் வியப்படைந்த திப்பு தான் எப்படி தோல்வியை தழுவினோம் என்று திகைத்து நின்றார். மீண்டும் போர்தொடுத்து மல்லசராஜாவை தோற்கடித்து அவரை கமால் துர்கா என்னுமிடத்தில் சிறைவைக்க மனைவியான ருத்ரா தேவி மகாராஷ்டிர பேஷ்வா பாஜி ராவ் உதவியை நாடினார். அவர் சிறையிலிருந்த மல்லச ராஜாவை சிறைமீட்டு வந்தார். நிபந்தனையின் படி பாஜிராவ்வுக்கு ஆண்டுதோறும் 70000 ரூபாய்கள் கப்பம் கட்ட வேண்டிய நிலை உருவானது. இந்த நிலையில் திப்புவை ஒழிக்க ஆங்கிலேயர்கள் மராத்திய பேஷ்வா உதவியை நாடினார்கள். இதனால் ஆங்கிலேயர்களின் நயவஞ்சகத்தை புரிந்து கொண்ட மல்லச ராஜா அவரை ஒழிக்க பக்கத்து அரசர்களின் மூலம் பெரும்படை திரட்டினார். அந்த நிகழ்வில் தான் வேட்டைக்கு போகும்போது புலியின் மீது அம்பெய்ந்தார். புலியை வீழ்த்தியவுடன் பார்த்தால் இன்னொரு அம்பும் அதன் மீது பாய்ந்து இருந்தது. புலியை வீழ்த்திய இன்னொரு அம்பு 15 வயதே நிரம்பிய சென்னம்மாவுடையது. அவரின் வீரத்திலும் அழகிலும் மயங்கிய மல்லச ராஜா அவரை கி.பி.1793ல் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே முதல் மனைவி மூலம் சிவலிங்கருத்ரசர்ஜா, வீரருத்ரசர்ஜா என்ற இரு மகன்கள் இருந்தனர். சென்னம்மாவின் மூலம் சிவபசவராஜ் என்ற மகன் பிறந்தார். மூத்த மனைவி ருத்ர தேவி துறவு பூண்டார். ராணி சென்னம்மா மல்லச ராஜாவின் ஆட்சியின் நிர்வாகத்திற்கும் துணையாக நின்றார். இந்நிலையில் ருத்ர தேவியின் இளைய மகனும் சென்னம்மாவின் ஒரே மகனும் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். இந்த நேரத்தில் தக்காணத்தில் கொள்ளை கூட்டத்தை ஒழித்து கட்டி கிட்டூரை பிடிக்க வெஸ்ஸெல்லி பிரபு ஆசை கொண்டிருந்தார். மராத்திய பாஜிராவ்வுக்கும் கிட்டூரை பிடிக்கும் ஆசை வந்தது. நட்புறவினால் மல்லச ராஜாவை அழைத்து அவரை சிறை வைத்தார். சிறையில் பல மாதங்கள் இருந்த மல்லச ராஜா நோய்வாய்பட்டார். சிறையிலிருந்து விடுவித்த சில நாட்களில் மல்லச ராஜா மறைந்தார்.


மல்லசராஜா மறைந்தவுடன் ருத்ர தேவியின் மூத்த மகனான சிவலிங்கருத்ரசர்ஜாவை ஆட்சியில் அமர்த்தினார். ஆனால் ஆங்கிலேயர்கள் அவரிடம் ஏதோ காரியமாக சொல்லி வருடத்திற்கு 4 லட்சம் கப்ப பணம் கட்டுவதாக எழுதி வாங்கினர். இதனை பின்னர் அறிந்த சென்னம்மா வெகுண்டு எழுந்தார். ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டியடித்தார். அவருடனான போரில் ஆங்கிலேய ஜெனரல் கொல்லப்பட்டார். மீண்டும் அதிகமான படைகளுடன் ஆங்கிலேயர்கள் கிட்டூரை பிடிக்க வந்தனர். இந்த முறை கிட்டூர் ராணி சென்னம்மாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அவரது தளபதியான சங்கொலி ராயன்னா கொரில்லா தாக்குதல் மூலம் ஆங்கிலேயர்களை தாக்கி அழித்தார்.  ராணி சென்னம்மாவின் ஆசைப்படி சிவலிங்கருத்ரசர்ஜாவை அரியணையில் அமர்த்துவதே நோக்கம் என்று ஆங்கிலேயர்களை அடிக்கடி தாக்கி தொல்லை கொடுத்து வந்தார். முடிவில் அவரும் பிடிபட்டு தூக்கு கயிற்றில் ஏற்றப்பட ராணியின் கடைசி நம்பிக்கையும் பொய்த்து போனது. சிறையிலையே வேதனையில் கி.பி.1829ல் மறைந்தார். ஆனால் சிலர் வேதனையினால் தனது வைர மோதிரத்தை பொடி செய்து சிறையில் மாண்டார் என்றும் கூறுகின்றனர். வருடாவருடம் அக்டோபர் 22-24ல் கிட்டூர் உத்சவா இவரது நினைவாக கொண்டாடப்படுகிறது. கி.பி.2007 செப்டம்பர் 11ல் இந்திய பெண் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீல் அவர்களால் இவரது உருவ சிலை இந்திய பார்லிமெண்ட் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. சரித்திரம் போற்றும் சாகச ராணி. அன்னியரை தனது இராஜ்ஜியத்திலிருந்து விரட்ட வீறு கொண்டு எழுந்த வீரத்திருமகள் தான் இந்த கிட்டூர் ராணி சென்னம்மா அவர்கள்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்