27) ஜஹனாரா பேகம்
ஜஹனாரா பேகம் (கி.பி.1614-1681) :
இவரே மும்தாஜ்-ஷாஜஹான் தம்பதியின் மூத்த மகள். இவர் தனது தாயை போலவே உருவ அமைப்பை கொண்டிருந்ததால் ஷாஜஹான் இவரிடம் மிகுந்த பிரியத்தில் இருந்தார். இவரும் இவரது தந்தையான ஷாஜஹானுக்கும் தகாத உறவு இருந்ததாக அந்த நாட்களில் வதந்தி உலாவியது. அதை நிக்காலோ மனுச்சி மறுத்து அது அவரின் சகோதரன் ஒளரங்கசீப்பின் வேலையாக இருக்கலாம் என்று கூறுகிறார். மும்தாஜ் மறைந்தவுடனும் வீட்டுசிறையில் இருந்த காலகட்டங்களில் இவரே ஷாஜஹானுக்கு பணிவிடை செய்தவர். தாயின் 14வது பிரசவத்தில் உதவியாக இவரும் உடனிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 14வது பிரசவத்தில் மும்தாஜ் இறந்ததால் பிறந்த குழந்தையான தங்கை கெளஷாரா பேகத்தை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு தாயாக வளர்க்க ஆரம்பித்தார். மொகலாய இளவரசிகளில் இவரே மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். இவர் திருமணம் முடிக்காவிட்டாலும் இவருக்கும் ஷாஜஹானின் அவையில் இருந்த பிரபு ஒருவருக்கும் காதல் இருந்ததாகவும் அவர்களுக்கு இடையே ஒரு மகன் பிறந்ததாகவும் அந்த சமயத்தில் இவர் யாருக்கும் தெரியாமல் புனித யாத்திரை செல்வதாக கூறிவிட்டு லாகூரில் குழந்தையை பெற்றெடுத்து மகனை அவர் தந்தையிடம் வளர்க்க கொடுத்ததாகவும் அந்த மகன் பின்னாளில் ஓளரங்கசீப்பின் அவையில் பணியாற்றியதாகவும் கூறுவார்கள். இதுவும் அந்த காலகட்டத்தில் பரவிய வதந்திகளில் ஒன்று தான். கி.பி.1614 ஏப்ரல் 2ல் பிறந்த இவர் கி.பி.1681ல் செப்டம்பர் 6ல் தனது 67வயதில் இறந்தார். இவரது தாயார் மும்தாஜ் மஹால் இறந்தவுடன் கி.பி.1631 முதல் கி.பி.1658 வரை "பாட்ஷா பேகம் - அரண்மனையின் மூத்த ராணி" என்று அழைக்கப்பட்டார். தந்தைக்கு பிறகு அமைதியான தம்பி தாரா ஷூக்கோ ஆட்சிக்கு வர ஆதரவு கொடுத்தார். இன்னொரு தங்கை ரோஸனாரா பேகம் ஒளரங்கசீப்புக்கு ஆதரவு கொடுத்தார். தந்தையை சிறைப்பிடித்து சகோதரன் தாராவை கொன்று ஓளரங்கசீப் ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் இவரது தங்கையான ரோஸனாரா பேகம் கி.பி.1658-1668 வரையும் பின்னர் இவரே கி.பி.1668-1681 வரை அதாவது இவர் இறக்கும்வரை அரண்மணையின் முதன்மை பெண்மணியாக இருந்தார். கி.பி.1644ல் அரண்மனையில் நடந்த நடன நிகழ்வில் தீ விபத்தில் சிக்கிய இவர் உயிர் பிழைக்க ஷாஜஹான் தான தர்மங்கள் செய்ததாகவும் தெரிகிறது. தினமும் ஆயிரம் பேருக்கு வெள்ளி நாணயங்களை தானமாக வழங்கினார். இந்த விபத்தில் அரீஃப் என்ற அடிமை பச்சிலை மருந்துகளால் செய்த களிம்புகளால் செய்த மருத்துவத்தால் எட்டு மாதங்களுக்கு பிறகு இவர் உடல்நலம் தேறினார் என்றும் ஆங்கிலேய மருத்துவர் அளித்த சிகிச்சையினால் தான் உடல்நலம் தேறினார் என்றும் அதனால் தான் ஆங்கிலேயர்களுக்கு சூரத்தில் வியாபாரம் செய்யும் உரிமையை ஷாஜஹான் வழங்கினார் என்றும் கூறுவார்கள். ஓரு முறை 12 கஜம் டாக்கா மஸ்ஸீன் ஆடைகளை அணிந்த இவரை உடலை அப்பட்டமாக காட்டுவதாக ஷாஜஹான் கடிந்து கொண்டு வேறு ஆடை அணிந்து வர சொன்னதாகவும் தெரிகிறது. ஷாஜஹான் ஆக்ராவில் அடிக்கடி
படையெடுப்புகள் நிகழ்ந்தததால் அதை இழக்க நேரிட்டால் இன்னொரு தலைநகரம் வேண்டும் என்ற எண்ணத்தில் இன்றைய பழைய டெல்லியை நிர்மாணிக்க ஆரம்பித்தார். அது ஷாஜஹனாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பழைய டெல்லியில் ஜஹனாரா பேகத்தின் மேற்பார்வையில் தான் "சாந்தினி செக்" உருவாகியது. சூரத் நகரின் வரிவசூல் இவருக்கு தான் வந்தது. அந்த காலத்தில் இவருடைய ஆண்டு வருமானம் 30 லட்சம் ரூபாய். இவருக்கு மொத்தம் 14 கப்பல்கள் சொந்தமாக இருந்தது. அதன் மூலம் மெக்கா வரைக்கும் வணிக தொடர்புகளை வைத்திருந்தார். தந்தையின் கடைசி காலங்களில் உடனிருக்க வேண்டுமென்றே தனது திருமணத்தை தவிர்த்தார் என்றும் கூறுவர்.

Comments
Post a Comment