28) ஜெப் உன்னிஸா பேகம்

ஜெப் உன்னிஸா பேகம் (கி.பி.1638-1702) :

இவர் ஓளரங்கசீப்பின் மூத்த மகள். கி.பி.1638 பிப்ரவரி 15ம் தேதி தில்ராஸ் பானு பேகத்திற்கு தெளலதாபாத்தில் பிறந்தவர். இவரது தாயான தில்ராஸ் பானு பேகம் ஒளரங்கசீப்பின் முதல் மனைவி மட்டுமல்லாது பட்டத்து அரசியாகவும் இருந்தார். இவர் பெர்ஷியாவை (ஈரான்) சேர்ந்த சஃபாவித் அரச குடும்பத்தை சேர்ந்தவர்.‌ ஜெப் உன்னிஸ்ஸா பேகத்திற்கு இளமையில் ஹாபிஸா மரியம் என்ற பெண்மணியை கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்தார் ஒளரங்கசீப். இதனால் 7 வயதிலையே குரானை மனப்பாடம் செய்து திறமையை பெற்று "ஹாபிஸா" என்று அழைக்கப்பட்டார். இதனை மிகப்பெரிய விருந்து வைத்து பொது விடுமுறை அறிவித்து கொண்டாடினார். ஜெப் உன்னிஸ்ஸா பேகத்திற்கு 30,000 தங்க காசுகளை பரிசாக கொடுத்தார். அந்த இளம் வயதில் ஒளரங்கசீப்பிற்கு மிக பிரியமான மகளாக இருந்தார். ஜெப் உன்னிஸ்ஸா என்ற பெயருக்கு "பெண்ணின் ஆபரணம் போன்றவள்" என்று அர்த்தம். 


 மிகச்சிறந்த சூஃபி கவிஞர். இவரது எழுத்துக்கள் கவிதைகள் "திவான்-இ-மக்ஃபி" என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. இவர் ஓளரங்கசீப்பால் டெல்லியில் உள்ள சலீம்கார்க் கோட்டையில் தனது கடைசி 20 ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் தத்துவியல், கணிதம், வானவியல், இலக்கியம் மற்றுமின்றி பெர்ஷியன், அரபி மற்றும் உருதுவும் அறிந்தவர். காலிகிராபி கலையில் சிறந்தவர். மிகப்பெரிய புத்தக லைப்ரரியை வைத்திருந்தார். இவரது புத்தக லைப்ரரியில் இலக்கியம், சட்டம், வரலாறு மற்றும் இறையியல் சம்பந்தப்பட்ட நூல்களை சேகரித்து வைத்திருந்தார். இவர் ஏழைகளிடம் மிகவும் அன்புடன் இருந்தார். ஆதரவற்றோர் மற்றும் விதவைகளிடம் மிகுந்த அன்புடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். அது மட்டுமல்லாது ஹஜ் யாத்திரை பயணிகளுக்கு மெக்கா மற்றும் மெதினா செல்ல உதவிகள் புரிந்தார். இவருக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அந்த காலகட்டத்தில் இவர் சிறந்த பாடகியாகவும் விளங்கினார். துர்கெஸ்தானில் வடிவமைக்கப்பட்ட குர்தியை இந்திய பெண்கள் அணியும் வகையில் இந்திய சூழலுக்கு ஏற்ற விதத்தில் வடிவமைத்தவர் இவரே. இவரது 21 வயதில் ஒளரங்கசீப் அரியணை ஏறினார். மகளின் திறமையை உணர்ந்த ஒளரங்கசீப் நாட்டின் பிரச்சினைகளை மகளிடம் கூறி அவரின் கருத்தை கேட்பது வழக்கமான ஒன்று. 


ஜெப் உன்னிஸ்ஸா வாழ்நாள் முழுவதும் திருமணம் முடிக்காமல் இருந்தார். இதனால் அவரைப் பற்றிய பல வதந்திகளும் அவருக்கு ரகசிய காதலர்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இவரது தாத்தாவான ஷாஜஹான் இவருக்கு தாராவின் மூத்த மகனான சுலைமான் ஷூக்கோவை திருமணம் நிச்சயம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் ஒளரங்கசீப் அதை விரும்பவில்லை. ஈரான் அரசர் ஷா அப்பாஸின் மகன் மிர்சா ஃபரூக் இவரை திருமணம் முடிக்க ஆசைப்பட்டார். அதை இவர் மறுத்து விட்டார். கவிஞரும் லாகூர் கவர்னருமான அகில் கான் ராஸியுடன் இவருக்கு காதல் இருந்ததாகவும் வதந்திகள் பரவியது.  இவரது எழுத்துக்கள் கவிதைகள் இஸ்ஸாமுக்கு எதிரானவை என்று இவரது தந்தை ஓளரங்கசீப்பால் கி.பி.1681ல் வீட்டுசிறையில் டெல்லியில் உள்ள சலீம்கார்க் கோட்டையில் வைக்கப்பட்டார். ஆனாலும் ஆக்ராவின் கவர்னர் மற்றும் வஸிரான அகில் கானுடன் காதல் இருந்ததாகவும் அதனால் ஒளரங்கசீப் இவரை வீட்டு சிறையில் அடைத்ததாகவும் கூறுகிறார்கள். இவரது இளைய சகோதரனான முகமத் அக்பர் தந்தை ஒளரங்கசீப்பை எதிர்த்து சிவாஜியின் மகனுடனும் இராஜபுத்ரர்களுடன் இணைந்தும் தோற்று ஈரானுக்கு ஒடிப்போனார். தாயில்லாத சிறு குழந்தையான அவரை இளமையில் இருந்து வளர்த்தவர் என்பதால் அவருக்காக ஒளரங்கசீப்பிடம் வாக்குவாதம் செய்தததாகவும் அவருக்காக பரிந்து பேசியதாலும் இவரை சலீம்கர் கோட்டையிலையே சிறை வைத்து இவரது சொத்துகளை பறிமுதல் செய்தும் ஆண்டு வருமானத்தை குறைத்தும் கொடுக்க செய்தார். இது மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சிறைப்பட்டது கி.பி.1681. அந்த நேரத்தில் இவருக்கு வயது 43. அதனால் காதலருடன் தொடர்பு என்ற காரணம் அடிபட்டு போகும். இஸ்லாமுக்கு எதிரான சூபி சிந்தனைகள் இவரது 18 வயதிலிருந்தே தொடர்கிறது. அதனால் அதுவும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. கி.பி.1681ல் முகமது அக்பர் தந்தை ஒளரங்கசீப்பிற்கு எதிராக புரட்சி கொடி பிடித்தார். அதனால் அது தான் காரணமாக இருக்க முடியும். 20 ஆண்டுகள் வீட்டு சிறையில் இருந்தே கி.பி.1702 மே26ல் இறந்து போனார். மொகலாய இளவரசிகளில் இவர் ஒரு தனி பெர்ஸனாலிட்டி.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்