29) ஹமீதா பானு பேகம்
ஹமீதா பானு பேகம் (கி.பி.1527-1604) :
இன்றைய உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு முன்னோடியான "ஹூமாயூன் கல்லறை"யை கட்டியவர் இவரே. இவர் வேறு யாருமல்ல ஹூமாயூனின் இளைய மனைவியும் பேரரசர் அக்பரின் தாயும் கூட.
கி.பி.1541ல் ஹூமாயூன் ஷெர்ஷாவால் தூக்கியெறியப்பட்டு விரட்டப்பட்ட போது நான்கு சகோதரர்களும் லாகூரில் சந்தித்தனர். அந்த நேரத்தில் ஷெர்ஷா ஹீமாயூனை விரட்டியடிக்க லாகூரை நோக்கி வந்தார். லாகூரில் இருந்த சமயத்தில் ஹீமாயூன் அவரது தந்தையின் இன்னொரு மனைவியான "தில்தார் பேகம்" அளித்த விருந்தில் ஹமீதா பானு பேகத்தை கண்டதும் அவரிடம் காதல் கொண்டார். அந்த நேரத்தில் ஹீமாயூனுக்கு வயது 33. ஹமீதா பானு பேகத்திற்கு வயது 14. ஹமீதா சூபி ஞானியான "காலித் பெக்" என்பவரின் மகள். இவர் ஹீமாயூனின் சகோதரனான "காம்ரான் மிர்ஸா"வுக்கு குருவாகவும் நண்பராகவும் இருந்தவர். முதலில் ஹீமாயூனை மணக்க ஹமீதா பானு சம்மதிக்கவில்லை. நாட்டை இழந்த அரசனாக இருந்தாலும் வயது வித்தியாசம் இருந்ததாலும் ஹமீதா பானு பேகம் சம்மதிக்க வில்லை. பின்னர் மெல்ல மெல்ல அவரை சம்மதிக்க வைத்து ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த ஹூமாயூன் ஒரு நல்ல நாளாக கி.பி.1541ல் செப்டம்பர் மாதத்தில் லாகூரில் திருமணம் செய்துகொண்டார். இந்த ஹமீதா பானு பேகம் தான் பேரரசர் அக்பரின் தாயார். ஷெர்ஷா மீண்டும் துரத்த லாகூரிலிருந்து ஹீமாயூன் சிந்து பகுதிக்கு செல்ல எட்டுமாத கர்ப்பிணி மனைவியையும் சுமந்து கொண்டு தார் பாலைவனத்தை கடந்து சென்றார். இந்த நேரத்தில் இராஜபுத்ர "ராவ் மால்தோ ரத்தோர்" ஷெர்ஷாவுடன் சேர்ந்து கொண்டு ஹீமாயூனை விரட்டியடித்தார். அவர்களின் நோக்கம் விரட்டுவது மட்டுமே. இந்த நேரத்தில் பாலைவனத்தில் ஹமீதா பானு பேகத்தின் குதிரை இறந்து விடவே அவரை தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு 6 கி.மீ பயணித்து சிந்து பகுதியை அடைந்தார். தனது வாழ்க்கையில் சந்தித்த கொடுமையான நிகழ்வு இது தான் என்று ஹூமாயூன் பின்னாளில் கூறுகிறார். இந்த நேரத்தில் ஹிண்டல் மிர்ஸா ஹீமாயூனுக்கு உதவுவதற்காக கந்தஹாரிலிருந்து படைகளையும் அஸ்காரி,காம்ரான் ஆகியவர்களின் காபூல் படைகளை அனுப்ப சொன்னதற்கு காம்ரான் மற்றும் அஸ்காரி தங்களது காபூல் அரசுக்கு அதனால் பிரச்சினை ஏற்படும் என்று ஒதுங்கி கொண்டனர். சிந்துவுக்கு வந்த ஹீமாயூனை "ஹீசைன் உம்ரானி" என்ற அமீர் வரவேற்று உபசரித்தார். பின்னர் ஹீமாயூன் சிந்து பிரதேசத்திலுள்ள "அமர்கோட்"பகுதியை ஆண்ட இந்து அரசரிடம் புகலிடம் கேட்க அவரின் இடத்தின் பல மாதங்கள் ஹீமாயூன் படைகளும் புகலிடம் பெற்றது. இந்த நேரத்தில் கி.பி.1542ல் அக்டோபர் 15ம் நாள் ஹமீதா பானு பேகம் குழந்தை அக்பரை பெற்றெடுத்தார். குழந்தையின் ஜனன நேரத்தை கணித்த ஹீமாயூன் இவன் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்ற மன்னனாவான் என்ற குறித்தார். இந்துக்களை போல நாள் நட்சத்திரம் பார்த்து ஜோசியம் பார்க்கும் கலையில் ஹீமாயூன் தேர்ச்சி பெற்றிருந்ததே காரணம். பின்னர் 7 மாத குழந்தை அக்பருடன் சிந்து மற்றும் பலூசிஸ்தான் பழங்குடியினரையும் சேர்த்து கொண்டு கந்தஹாரையும் பின்பு காபூலை நோக்கியும் விரைந்தார். இதற்கிடையில் தானே தைமூரின் வம்சாவளியான பாபரின் உண்மையான வாரிசு என்று அறிவித்து கந்தஹார் மற்றும் காபூலில் உள்ள சகோதரர்களின் உதவியுடன் சூரி வம்ச ஆட்சியை முறியடிக்க கி.பி.1543 ஜீலை மாதத்தில் சிந்து நதிக்கரையை கடந்தார். இதற்கிடையில் ஹிண்டல் மிர்ஸாவை காம்ரான் மற்றும் அஸ்காரி மிர்ஸா காபூலில் வீட்டுசிறையில் வைத்தனர். கந்தஹாரை நோக்கி வந்த ஹீமாயூனை எதிர்கொண்ட அஸ்காரி மிர்ஸா கந்தஹாருக்கு அருகில் ஹிந்துகுஷ் மலைத்தொடரில் டிசம்பர் மாதத்தில் பெரும்படையுடன் பிடிக்க வந்தார். இதனால் 14 மாத குழந்தையாக இருந்த குழந்தை அக்பரை ஹீமாயூன் தனது வேலையாள் ஜவஹர் என்பவரின் பொறுப்பில் ஒப்படைத்து ஹூமாயூனும் ஹமீதா பானு பேகமும் பாரசீகத்தை நோக்கி அங்குள்ள மன்னரிடம் தஞ்சமடைந்தார். கூடாரத்தை கைப்பற்றிய அஸ்காரி மிர்ஸா ஜவஹர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை அக்பரை ஒன்றும் செய்யாமல் அவர் காம்ரான் மிர்ஸாவின் மனைவியான சுல்தான் பேகத்திடம் குழந்தை அக்பரை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார். சுல்தான் பேகத்திடம் ஒப்படைத்த நிகழ்வு அக்பர் சொல்ல சொல்ல அபுல் பாஸல் எழுதிய "அக்பர் நாமா" வில் குளிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் காபூல் செல்லாமல் ஹீமாயூன் ஈரான் சென்றார். அங்கு பெர்ஷியாவை ஆண்ட ஷா வம்சத்து மன்னரான "ஷா தமஸ்ப்" சிறப்பான வரவேற்பு அளித்து அவருக்கு அடைக்கலம் கொடுத்தார். பின்னர் பாரசீக மன்னரின் உதவியால் ஹீமாயூன் கந்தஹாரை கைப்பற்றினார். சகோதரனான அஸ்காரி மிர்ஸா மன்னிக்கப்பட்டான். பின்னர் காபூல் நோக்கி விரைந்த ஹீமாயூன் செல்வதற்குள் காம்ரான் மிர்ஸா காபூலை விட்டு ஒடிவிட்டார். கி.பி.1545ல் காபூல் அரண்மனையில் அரசராக பதவியேற்றார். மனைவி ஹமீதா பானு பேகம் மற்றும் குழந்தை அக்பர் ஆகியோருடன் காபூலில் இணைந்தார். காபூலின் அரசராக ஆனாலும் டெல்லி ஆக்ரா அரியணையை இழந்தது அவருக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. ஷெர்ஷா கி.பி.1545ல் கலிஞ்சார் கோட்டையின் முற்றுகையின் போது அவர் வைத்த வெடிவிபத்தில் சிக்கி இறந்தார். அவருக்கு பின் அவரது மகன் 10 ஆண்டுகள் ஆள அதற்கு பின் ஒவ்வொருவரும் பதவிக்காக ஒருவரையொருவர் வீழ்த்த பதவி போட்டிகள் இருந்த நேரத்தில் கி.பி.1555ல் பிப்ரவரி மாதம் 22 ம்தேதி மீண்டும் லாகூரை பிடித்தார். பின்னர் வரிசையாக ஒவ்வொரு நகரமாக பிடித்து டெல்லி ஆக்ரா என்று பிடித்து சூரி வம்சத்தின் கடைசி அரசனான சிக்கந்தரை வீழ்த்தி டெல்லியில் மீண்டும் மொகலாயர் ஆட்சியை ஏற்படுத்தினார். பின்னர் காபூலிருந்து ஹமீதா பானு பேகமும் அக்பரின் செவிலி தாயாரான மகம் அகங்கா மற்றும் பிற மனைவிகள் அரசகுடும்பத்து பெண்கள் அனைவரும் காபூலிருந்து டெல்லி வந்தனர். இதற்கிடையில் ஆங்காங்கே எழுந்த எதிர்ப்புகளை வீழ்த்தி கொண்டிருந்த ஹீமாயூன் மீண்டும் மொகலாயர்களின் ஆட்சிக்கு அடித்தளத்தை இட்டுக் கொண்டிருந்த வேளையில் கி.பி.1556 பிப்ரவரி மாதம் 6ம் நாள் இறந்து போனார். வழக்கம்போல மாடியில் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை மாலை நேர தொழுகைக்கான மணி ஒலிக்க புத்தகத்தை படித்து கொண்டே படியில் இறங்கிய ஹீமாயூன் தவறி விழுந்து தலையில் பலத்த காயம்பட்டு இறந்து போனார். ஹூமாயூனின் இறப்பும் பாபரின் தந்தையான உமர் ஷேக்கின் மரணத்தை ஒத்திருந்தது. ஹூமாயூன் தனது தந்தை பாபரை போலவே தனது 48 வயதில் இறந்து போனது தான் இருவருக்கும் உள்ள ஒற்றுமை. ஹீமாயூன் இறந்த விஷயம் வெளியே தெரியாமல் மறைத்தார் பைராம் கான் (இவரே குழந்தை அக்பரின் பாதுகாவலர்) . அந்த நேரத்தில் அக்பர் பஞ்சாப்பிலிருந்த கலனூர் பகுதியில் கலகத்திலிருந்த ஆப்கானியர்களை அடக்க சென்றிருந்தார். அக்பருக்கு தகவல் அனுப்பிவிட்டு அவர் வரும்வரை ஹீமாயூன் இறப்பு செய்தியை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டார். கி.பி.1556 பிப்ரவரி மாதம் 14ம் தேதி அக்பர் தனது 13 வயது 4 மாதத்தில் அரசராக பதவியேற்றார். இழந்த டெல்லி அரியணை மீண்டும் கைப்பற்றிய ஒரு வருடத்திலையே ஹூமாயூன் மாண்டு போனார்.
ஹூமாயூன் மறைந்தவுடன் அவரது உடல் டெல்லியில் "புராணா கிலா" பகுதியில் புதைக்கப்பட்டது. அவரது மனைவியான ஹமீதா பானு பேகம் கி.பி.1562ல் பாரசீக கட்டிடக்கலைஞரான "மிராக் மிர்ஸா கியாத்" வடிவமைப்பில் சிவப்பு வண்ணத்தில் பளிங்கு கற்களால் ஆன ஹீமாயூன் கல்லறையை கட்டி முடிக்க 8 ஆண்டுகள் ஆனது. கி.பி.1571ல் ஹூமாயூன் கல்லறை கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஹீமாயூன் கல்லறை யூனெஸ்கோவால் பராம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை மாதிரியாக வைத்து தான் பின்னாளில் வெள்ளை பளிங்கு கற்களால் ஆன "தாஜ்மஹால்" கட்டப்பட்டது. இந்த ஹீமாயூன் சமாதி வளாகத்தில் தான் சுமார் 150 சமாதிகளுக்கு மேல் உள்ளது. இங்கு ஹீமாயூன் மற்றும் அவரின் மனைவியான ஹமீதா பானு பேகம், ஹாஜஹானின் மகனான தாராஷிக்கோ, ஒளரங்கசீப்பிற்கு பின்னால் வந்த ஃப்ரூக்ஷியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்தெளலா, இரண்டாம் ஆலம்கீர் சமாதிகளும் உள்ளது. பின்னர் அக்பர் இவரது ஆலோசனைகளுக்கு செவிசாய்த்தார். அக்பரின் மகனான ஜஹாங்கீர் இவரிடம் பெரும் பாசம் கொண்டிருந்தார். அக்பருக்கும் ஜஹாங்கீருக்கும் மோதல் வெளிப்பட்ட நேரத்தில் அக்பரின் மூத்த மனைவியான ஜோதா பாய் மற்றும் தாயான ஹமீதா பானு பேகத்தினால் தான் தன் மகனை மன்னித்தார். இந்த நேரத்தில் கி.பி.1604ல் இவர் மரணமடையவே அக்பர் தனது தாயின் மறைவுக்காக இந்துக்களை போல புருவம், மீசை, தாடியை மழித்து கொண்டார். சரித்திரத்தில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் கட்டிடத்திற்கு இவர் கட்டிய ஹூமாயூன் சமாதியே முன்னோடி. சரித்திரத்தில் தனது பெயரையும் அழுத்தமாக பதிவு செய்து விட்டு போயிருக்கிறார் இந்த மொகலாய பேரரசியான ஹமீதா பானு பேகம்.


Comments
Post a Comment